சவூதி எண்ணை வயல் தாக்குதலால் எண்ணை விலை ஏற்றம்! -

சவூதி எண்ணை வயல் தாக்குதலால் எண்ணை விலை ஏற்றம்!

தாக்குதலை நடத்தியது ஈரானிய ஏவுகணைகளா?

செப்டம்பர் 16, 2019

சவூதி எண்ணை வயல் தாக்குதலினால் உலகின் எண்ணை உற்பத்தி 6 வீதத்தால் முடக்கப்பட்டு விட்டது. ஆனால் உடனடித் தேவைக்காக அமெரிக்கவும் சவூதி அரேபியாவும் தங்கள் சேமிப்புகளிலிருந்து எண்ணையைப் பாவித்துக் கொள்ளலாம்.

Photo Credit: Express.co.uk

சவூதி எண்ணை வயல்களின் மீதான தாக்குதல்களைத் தொடர்ந்து, உலகின் எண்ணைச் சந்தையில் எண்ணை விலை 15 வீதத்தால் அதிகரித்திருக்கிறது. பிறெண்ட் மசகு எண்ணை (Brent crude oil) 19 வீதத்தால் அதிகரித்து தற்போது $71,95 இற்கு விற்பனையாகிறது. இது வரலாற்றிலேயே அதி கூடிய விலயேற்றமென புளூம்பேர்க் செய்தி ஸ்தாபனம் தெரிவிக்கிறது.

எண்ணை விலை ஏற்றம் மற்றும் சீனாவின் பொருளாதார வளர்ச்சித் தளர்வும் சேர்ந்து தங்கத்தின் விலையை ஏற்றியிருக்கின்றன. இருப்பினும் இது உலகப் பொருளாதாரத்தை மந்த நிலைக்குத் (recession) தள்ளிவிடாது எனத் தான் நம்புவதாக நிதி நிர்வாக நிபுணர் ஒருவர் தெரிவித்தார்.

சவூதி அரசின் உடைமையாக இருந்த அரம்கோ நிறுவனத்தைப் பங்குச் சந்தையில் விற்பதற்குத் தயாராகவிருந்த (Initial Public Offering -IPO) நிலையில் இத் தாக்குதல் மூலம் அந்நிறுவனம் நாளொன்றுக்கு 5.7 மில்லியன் பீப்பாக்கள் அளவிலான உற்பத்தியை இழந்திருப்பது அந் நிறுவனத்தின் பெறுமதியைப் பெருமளவில் குறைத்திருக்கிறது. இவ் விற்பனை நடைபெற்றால் இதுவே உலகின் அதிகூடிய பங்குச் சந்தை விற்பனையாக இருந்திருக்கும்.

அமெரிக்க / ஈரானிய முறுகல்

சவூதி அரேபியாவின் பொருளாதாரத்தின் மார்பில் குத்தியது போன்ற இத் தாக்குதல்களைச் செய்ததாக யேமன் பிரிவினைவாதிகள் பொறுப்பேற்றிருந்தாலும் அவர்களுக்கு இந்தளவு திறமையோ வலிமியோ இல்லை எனவும் இதன் பின்னணியில் ஈரானின் கரங்கள் உள்ளன எனவும் அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது. ஏற்கெனவே அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் முறுகல் நிலை கொந்தளிப்பை எட்டியிருக்கும் நிலையில் இது அப் பிராந்தியத்தின் பாதுகாப்பை மேலும் பலவீனப்படுத்தியுள்ளதாக அஞ்சப்படுகிறது. தாக்கியழித்த ஆயுதம் ஏற்கெனவே கூறப்பட்டதுபோல் ட்றோன்கள் அல்ல அவை ஏவு கணைகள் என்றும், ஈரானிய திசையிலிருந்து ஏவப்பட்டன என்றும் அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது. அதே வேளை ஈரான் மீது அமெரிக்கா தாக்குதலை நடத்தவேண்டுமென்று விரும்பும் அப் பிராந்தியத்திலுள்ள பல விசைகளும் இத் தாக்குதலைச் செய்திருக்க வாய்ப்புண்டு.

Print Friendly, PDF & Email
Please follow and like us:
error
Related:  பிளாஸ்டிக் கழிவுகள், வாசனைத் திரவியங்கள் இறக்குமதிக்குத் தடை - பிரதமர் ராஜபக்ச உத்தரவு
error

Enjoy this blog? Please spread the word :)