Uncategorized

சவூதி எண்ணை சுத்திகரிப்பு நிலையங்கள் தாக்கப்பட்டன!

யேமன் பிரிவினைவாதிகள் ஹூதிகளின்ஆளில்லா விமானங்கள் (drones) தாக்குதல்களை நடத்தியுள்ளன

சவூதி அரேபியாவுக்குக்குச் சொந்தமான அரம்கோ நிறுவனத்தின் எண்ணை சுத்திகரிப்பு நிலையங்கள் இரண்டின் மீது யேமன் பிரிவினைவதிகள் ஹூதிகளால் மேற்கொள்ளப்பட்ட ட்றோன் (drones) தாக்குதல்களைத் தொடர்ந்து அவை தீப்பற்றி எரிந்துகொண்டிருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

அபகாய்க் என்னும் இடத்தில் அமைந்திருக்கும் அரம்கோவின் அதி பெரிய நிலையத்தைன் மீதும், குறாய்ஸ் என்னுமிடத்திலுள்ள எண்ணை வயல் மீதுமே தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இரண்டும் தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அரச ஊடகம் தேரிவித்திருக்கிறது.

சவூதி அரேபிய எண்ணை வயல்கள் மீது தாக்குதல்களை மேற்கொள்ளவெனத் தாம் 10 ட்றோன்களை அனுப்பியதாக யேமனில் பிரிவினைக்காகப் போராடிவரும் விடுதலை அமைப்பான ஹூதியின் பேச்சாளர் ஒருவர் கூறியதாக பி.பி.சி. செய்தி வெளியிட்டுள்ளது.

எதிர்வரும் நாட்களில் மேலும் தாக்குதல்கள் நடத்தப்படும் என அமைப்பின் இராணுவப் பேச்சாளர் யஹ்யா சரியா, பெய்ரூட்டில் இருந்து இயங்கும் ஹூதி அமைப்புக்குச் சொந்தமான அல்-மசிறா தொலைக்காட்சிக்குக் கொடுத்த் பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.

சனிக்கிழமை நடைபெற்றவை, “சவூதி மக்களின் ஒத்துழைப்புடன் அந் நாட்டினுள் மேற்கொள்ளப்பட்ட ஒரு மிகப் பெரிய தாக்குதல் நடவடிக்கை” எனவும் அவர் தெரிவித்தார்.

“தமது நேரம் 4:00 மணிக்கு அரம்கோவின் பாதுகாப்புக் குழுவினர் அப்காய்ஸ் மற்றும் குறாய்ஸ் நிலையங்களில் தீயணைப்பு முயற்சிகளை மேற்கொண்டதாக சவூதி ஊடக மையம் தெரிவித்திருக்கிறது.

Map
தாக்குதல் நடைபெற்ற இடங்கள்

சவூதி அரேபியாவின் கிழக்கு மாகாணத்திலுள்ள டஹ்ரானிலிருந்து 60 கி.மீ. தென்மேற்கு திசையில் இருக்கிறது அப்காய்க். அங்கிருந்து மேலும் 200 கி.மீ. தென் மேற்கில் இருக்கிறது குறய்ஸ். இது இரண்டாவது பெரிய எண்ணை வயல் ஆகும்.

புதிய தாக்குதல் முறை

சவூதி அரேபியா எதிர்நோக்கும் புதிய முறையிலான ஹூதி தாக்குதல்கள் போர் முறைகளில் புதிய அத்தியாயத்தைத் திறந்துள்ளன. சமீபத்தில் இஸ்ரேலின் ட்றோன்கள் லெபனானுள் சென்று ஹெஸ்புல்லா அமைப்பின் அலுவலகங்கள் மீது தாக்குதல்கள நடத்தியிருந்தன. தனது வான் வலயத்தில் அமெரிக்க ட்றோன் ஒன்றைச் சுட்டு வீழ்த்தியதாக ஈரான் சமீபத்தில் அறிவித்திருந்தது. மத்திய கிழக்கின் போர் வலயங்களில் ட்றோன் தாக்குதல்கள் இப்போது அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டன. ஆரம்பத்தில் வேவு நடவ்டிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்ட ட்றோன்கள் இப்போது குண்டுகளைக் கொண்டு சென்று தாக்குதல்களை நடத்துமளவுக்கு முன்னேற்றம் கண்டுள்ளன.

ஹூதி இயக்கத்துக்கு ஈரான் ஆதரவு வழங்குகிறது என்ற குற்றச்சாட்டு நீண்டகாலமாகவே உண்டு. அதே வேளை யேமன் அரசாங்கத்துக்கு ஆதரவாக சவூதி அரேபியாவும், ஐக்கிய அரபுக் கூட்டாட்சியும் (UAE) இராணுவ ஒத்துழைப்புக் கொடுத்து வருகின்றன. ட்றோன் தாக்குதல்கள் ஹூதியின் இராணுவம் நவீனமயப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதையே காட்டுகிறது.

இதன் விளைவாக ஈரான் மீதான அழுத்தங்களை அமெரிக்கா தலைமையிலான எதிரணி அதிகரிக்கலாம். பொழுது போக்குக்காகக் கண்டுபிடிக்கப்பட்ட ட்றோன்களின் பாவனை இன்று நாடுகளின் அழிவுக்கு வித்திட்டிருக்கிறது. சவூதி அரேபியாவின் விமானத் தாக்குதல்களுக்கு இணயாக இல்லாவிட்டாலும் ஹூதிகளின் தாக்குதல்கள் கெரில்லா முறைத் தாகுதல்களை ஒரு படி மேலே எடுத்துச் சென்றிருக்கிறது என்பது உண்மை.

உலக எண்ணைச் சந்தையில் பாதிப்பு

உலக எண்ணைச் சந்தையின் மிகப் பெரிய வழங்குனர் அரம்கோ எண்ணை நிறுவனம். அதன் வயல்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களைச் சாதகமாகப் பாவித்து ஐந்து பெரிய மேற்கத்திய எண்ணை சுத்திகரிப்பு நிறுவனங்கள் உலக சந்தையில் எண்ணை விலையை அதிகரிக்கச் செய்ய வாய்ப்புணடு. குவைய்த் மீதான ஈராக்கின் தாகுதல்களை அமெரிக்கா தூண்டுவித்ததற்கு முக்கிய காரணம், சரிந்து போயிருந்த எண்ணை விலைகளை அதிகரிக்கச் செய்வதற்கே என்னும் செய்தி முன்னர் வந்திருந்தது.

அரம்கோ நிறுவனம் இதுவரையில் சவூதி அரசின் உடமையாகவே இருந்தது. விரைவில் அதைப் பங்குச் சந்தையில் விற்பதற்கான (IPO) திட்டமிடல் நிலையில் இருக்கும்போது நடைபெற்ற இத் தாக்குதல்கள் நிச்சயம் அதன் சந்தைப் பெறுமதியைப் பாதிக்கும்.

இதன் எதிரொலியின் முழுமையான தாக்கமும் திங்களன்று வாகனங்களுக்கு எண்ணை நிரப்பும்போதே தெரியும்.

One thought on “சவூதி எண்ணை சுத்திகரிப்பு நிலையங்கள் தாக்கப்பட்டன!

Comments are closed.