News & AnalysisSri LankaWorld

சவூதி அரேபிய தடுப்பு முகாம்களில் வாடும் இலங்கைப் பெண்கள் – இலங்கைத் தூதரகத்திடமிருந்து எதுவித உதவிகளுமில்லை

41 இலங்கைப் பெண்கள், நாட்டிற்குத் திருப்பி அனுப்பப்படுவதற்காக, சவூதி அரேபியாவின் தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டிருக்கின்றனர். 6 மாதங்கள் முதல் 18 மாதங்கள் வரையிலாக இம் முகாம்களில் வைக்கப்பட்டிருக்கும் பெண்களில் பெரும்பாலானவர்கள் அங்கு வீட்டுப் பணிகளுக்கென அழைத்துச் செல்லப்பட்டவர்கள். இவர்களில் மூவருக்கு இளம் குழந்தைகள் உண்டு எனவும் ஒருவருக்கு அவசர மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிறது எனவும் சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவிக்கிறது.

சவூதி அரேபியாவில் பணி புரியும் 10 மில்லியன் வெளிநாட்டுப் பணியாளர்களில் 30% மானோர் வீட்டுப் பணிகளுக்கென அழைத்துச் செல்லப்பட்டவர்கள்.

“எதுவித குற்றமும் செய்யாத அப்பாவிப் பெண்களைப் 18 மாதங்களாகத் தடுப்பு முகாம்களில் வைத்திருப்பது கொடிய, மனிதாபிமானமற்ற செயல். தமது குடும்பங்களின் வறுமையைப் போக்குவதற்காக அரேபியாவிற்குச் சென்ற அவர்கள் எந்தவித வருமானமுமில்லாமல், தமது விடுதலைக்காகப் போராடும் வழிகளுமின்றி, எப்போது நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்படுவோம் என்றும் தெரியாது,அனாதைகள் போல அடைக்கப்பட்டு இருக்கிறார்கள்” என சர்வதேச மன்னிப்புச் சபையின் ஆபிரிக்க, மத்திய கிழக்கு பணிப்பாளர் லின் மாலோஃப் தெரிவித்துள்ளார்.

தடுத்து வைக்கப்பட்டிருக்கும் பெண்கள் எவருக்கும் தாம் செய்த குற்றம் என்ன என்பது பற்றியோ அல்லது சட்ட உதவிகள் அல்லது தூதரக உதவிகளைப் பெறும் வழிகள் ஏதாவது இருக்கின்றனவா என்பதைப் பற்றியோ எதுவுமே அறிவிக்கப்படவில்லை. பலர் தமது முதலாளிகளிடமிருந்து விடுபட்டு இலங்கைக்குத் திரும்புவதற்கான வெளியேறும் அனுமதிகளைப் பெறமுடியாத நிலையிலோ அல்லது பணி புரிவதற்கான அனுமதிப் பத்திரங்களைப் பெறமுடியாத நிலையிலோ தடுத்து வைக்கப்பட்டிகிறார்கள். இப்படியானவர்களுக்கு எந்தவித உதவிகளையும் வழங்காமல் காலவரையின்றி அவர்களைப் பூட்டி வைப்ப்பது சவூதி அரேபியாவின் காட்டுமிராண்டித் தனமான சட்டங்களில் ஒன்று.

இப்படித் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களில் 5 பேர் துஷ்பிரயோகம் செய்யும் தமது முதலாளிகளிடமிருந்து, வெளியேறும் அனுமதிகளைப் பெறாமல், தப்பி வந்தவர்கள்.

இன்னுமொருவர் 2018 நடுப்பகுதியில் சவூதி அரேபியாவிற்கு வீட்டுப்பணி செய்வதற்காக வந்ததாகவும் வேலை தொடங்கிய நாள் முதல் தனக்கு சம்பளம் முழுமையாகத் தரப்படுவதில்லை எனவும், தரப்படும் சம்பளத்திலும் கழிப்பறைப் பாவனைப் பொருட்களிற்கான செலவு கழிக்கப்பட்டது எனவும் இதனால் தான் அக்டோபர் 2020 இல் அந்த முதலாளியிடமிருந்து விலகியபோது தனக்கு விமானப் பயணச்சீட்டு வாங்குவதற்கென ஒரு சிறிய தொகையைக் கொடுத்து விமான நிலையத்திற்கு அருகில் ஒரு வீதியில் விடப்பட்டதாகவும் தான் பயணச்சீட்டை வாங்க முயன்றபோது வெளியேறும் அனுமதியப் பெற்றிருக்கவில்லை என்பதற்காக பொலிசாரிடம் கையளிக்கப்பட்டு தற்போது தடுப்பு முகாமில் வைக்கப்பட்டிருப்பதாகவும் கூறுகிறார்.

பிறிதொரு பெண், நீண்ட நேரம், கடுமையான வேலைகளைச் செய்யவேண்டி நேரிட்டது எனவும் அதற்குக்கூட முதலாளியால் சம்பளம் தரப்படாமையால் தான் பொலிசில் உதவி கேட்க அவர்கள் தன்னைக் கைது செய்து 4 மாதங்கள் பொலிசில் தடுத்து வைத்திருந்துவிட்டு பின்னர் தடுப்பு முகாமிற்கு மாற்றியிருக்கிறார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

இன்னுமொரு பெண் தன்னை முதலாளி அடித்து துன்புறுத்துகிறார் என்பதற்காகப் பொலிசில் முறைப்பாடு செய்ததாகவும், அவர்கள் தன்னைத் தடுப்பு முகாமிற்கு அனுப்பி விட்டதாகவும் தான் அங்கு எட்டு மாதங்களாக வசிப்பதாகவும் கூறுகிறார். அவருக்கு மூன்று பிள்ளைகளுண்டு. அவருடைய வருமானத்தை மட்டுமே நம்பி இலங்கையில் அவரது குடும்பம் வாழ்ந்து வந்தது என்கிறார் அவர்.

இத் தடுப்பு முகாமில் வைக்கப்பட்டிருப்பவர்களோடு தொடர்புடைவர்கள், செயற்பாட்டாளர்கள், வீட்டுப் பணியாளர்கள், றியாட்டிலுள்ள இலங்கைத் தூதரகப் பணியாளர் ஒருவர் எனப் 11 பேரிடம் பெற்ற தகவல்களை வைத்து சர்வதேச மன்னிப்புச் சபை இவ்வறிக்கையை வெளியிட்டுள்ளது.

‘எக்சிட் 18’ என்ற தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் பல் நூற்றுக்கணக்கான பெண்களில் இந்த 41 இலங்கையரும் அடங்குவர். இவர்களைத் தத்தம் நாடுகளுக்கு அனுப்புவதற்கு உடனடியாக முயற்சிகளை எடுக்குமாறு சன்வதேச மன்னிப்புச் சபை, மார்ச் 31 அன்று சவூதி அரேபிய அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளது.

இப் பெண்கள் நிலைமை பற்றி சர்வதேச மன்னிப்புச் சபை றியாட்டிலுள்ள இலங்கைத் தூதரக அதிகாரிகளிடம் வினவியபோது, தாம் இப் பெண்களைப் பார்ப்பதானால் அனுமதி பெறவேண்டுமெனவும், அவர்களை விரைவில் இலங்கைக்குக் கொண்டுபோய்ச் சேர்க்க இலங்கையிலுள்ள சவூதி எயர்லைன்ஸ் உடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறியிருக்கின்றனர். ஆனால் இது பற்றி முகாமிலுள்ள பெண்கள் எவரும் அறிந்திருக்கவில்லை. அவர்களுக்கான சட்ட ரீதியான ஆலோசனைகளைக்கூட இலங்கைத் தூதரகம் வழங்கவில்லை என இப் பெண்கள் தெரிவிக்கின்றனர்.