சிவசேகரம் கவிதைகள்- 1970-2020
எம். ஏ. நுஃமான்

முழுத் தொகுப்புக்கான முன்னுரை
பேராசிரியர் சி. சிவசேகரம் இலங்கைப் பேராதனைப் பல்கலைக்கழக பொறியியல் பீடத்திலும் லண்டன் இம்பீரியல் கல்லூரியிலும் இயந்திரப் பொறியியல் துறையில் நீண்டகாலம் பணியாற்றி ஓய்வுபெற்றவர். அவருடைய புலமைத் துறையான இயந்திரப் பொறியியலில் அவருடைய பங்களிப்பு பற்றி எனக்கு எதுவும் தெரியாது. ஆனால், கடந்த சுமார் அரைநூற்றாண்டு காலமாக தமிழ்மொழி, இலக்கியத் துறையிலும் அரசறிவியல் துறையிலும் அவருடைய பங்களிப்பு அத்துறைகள் சார்ந்த பல பேராசிரியர்கள் செய்ததை விடக் காத்திரமானது என்பது என்னுடைய கணிப்பு.
தமிழின் நவீனத்துவப் பிரச்சினைகள் பற்றி அவர் அதிகம் எழுதியிருக்கிறார். இலங்கையின் இனத்துவ அரசியல் பற்றியும், சர்வதேச அரசியல் பற்றியும் அவர் அதைவிட அதிகம் எழுதியுள்ளார். இவை எல்லாவற்றையும் விட படைப்பிலக்கியத் துறையில் அவருடைய பங்களிப்பு முக்கியமானது. நவீன தமிழ்க் கவிதை வரலாற்றில் முக்கியமான ஆளுமைகளுள் அவரும் ஒருவர். சிறுகதை எழுத்தாளர், விமர்சகர், நாடக ஆசிரியர், முக்கியமான மொழிபெயர்ப்பாளர் எனப் பன்முக ஆற்றலுடையவர்.

1970களின் நடுப்பகுதியிலிருந்து கவிதைத் துறையில் அவர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். ”நதிக்கரை மூங்கில்” (1983), ”செப்பனிட்ட படிமங்கள்” (1988), ”தேவி எழுந்தாள்” (1991), ”போரின் முகங்கள்” (1996), ”ஏகலைவ பூமி” (1998), ”வடலி” (1999), ”இன்னொன்றைப் பற்றி” (2003), ”கல்லெறி தூரம்” (2008), ”முட்கம்பித் தீவு” ( 2011 ) ஆகிய அவரது ஒன்பது கவிதைத் தொகுதிகளும், ”மாஓ சேதுங் கவிதைகள்” (1976), ”பணிதல் மறந்தவர்” (1993), ”பாலை” (அடோனிஸ் கவிதைகள் (1999), ”மறப்பதற்கு அழைப்பு ”(2003) ஆகிய நான்கு மொழிபெயர்ப்புக் கவிதைத் தொகுதிகளும் இதுவரை வெளிவந்துள்ளன. ”ஆச்சியின் கொண்டை ஊசிகள்” என்ற கவிதைத் தொகுதி ஒன்றும் வெளிவர இருக்கின்றது. அவ் வகையில் என்னைப் போன்ற தொங்கோட்டம் ஓடுபவர்களுடன் ஒப்பிடுகையில் அவரது கடந்த சுமார் அரைநூற்றாண்டு கால கவிதைப் பங்களிப்பு கணிசமானது, நிறைவானது எனலாம்.
சிவசேகரம் என்னைவிட இரண்டு வயது மூத்தவர். இவ்வாண்டு (2022) அவருக்கு எண்பது வயது நிறைகிறது. அதை ஒட்டி என்று இல்லாவிட்டாலும், தேவையும் முக்கியத்துவமும் கருதி இலண்டனை தளமாகக் கொண்ட ”சமூக இயல்” பதிப்பகம் , சிவசேகரத்தின் மொத்தக் கவிதைகளையும் “ சிவசேகரம் கவிதைகள் 1970- 2020 “ என்ற தலைப்பில் ஒரு தனித் தொகுப்பாக பதிப்பிக்கிறது. அவ்வகையில் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ள நண்பர் பௌசர் நமது பாராட்டுக்கு உரியவர்.
இத்தொகுப்பில் மொத்தம் 272 கவிதைகள் அடங்குகின்றன. சிவசேகரத்தின் கவிதைகள், பெரும்பாலும் எல்லாவற்றையும் – முட்கம்பித் தீவு தொகுதியைத் தவிர – அவை தொகுப்புகளாக வெளிவந்த காலத்திலேயே படித்திருக்கிறேன். அவைபற்றி நான் எப்போதோ எழுதியிருக்கவேண்டும். அது முடியவில்லை. அவரின் ”போரின் முகங்கள் ”பற்றி ஒரு விமர்சனம் எழுத முயன்றேன் அதுவும் நிறைவேறவில்லை. இப்போது பௌசர் சிவசேகரம் கவிதைகளுக்கு – குறுகிய அவகாசத்தில் எனினும் – ஒரு முன்னுரை எழுத வாய்ப்புத் தந்திருக்கிறார். அவருக்கு எனது நன்றி.
2
1970களின் பிற்பகுதியில்தான் சிவசேகரம் ஒரு கவிஞராக எனக்கு அறிமுகமானார். அவரை எனக்கு அறிமுகப் படுத்தியவர் நண்பர் யேசுராசா. அவர் நல்ல கவிதைகள் எழுதுகிறார், நீங்கள் அவரைப் படித்துப்பார்க்கலாம் என்று யேசுராசா அறிமுகப்படுத்திய பின்னர்தான் நான் சிவசேகரத்தைத் தேடிப் படிக்கத் தொடங்கினேன். அப்போது அவர் ”மணி” என்ற புனைபெயரில் ”குமரன்” சஞ்சிகையில் சில கவிதைகள் எழுதியிருந்தார். வேறு இதழ்களிலும் அவரது கவிதைகள் அவ்வப்போது வெளிவந்தன. அப்போது அவர் மிகக் குறைவான கவிதைகளே எழுதியிருந்தாலும் அப்போதைய அவரது கவிதைப் பாணி அவரை ஒரு முக்கியமான கவிஞராக எனக்கு அறிமுகப்படுத்தியது.
1982 இறுதியில் நானும் யேசுராசாவும் ”பதினொரு ஈழத்துக் கவிஞர்கள் ”தொகுப்புக்காகக் கவிஞர்களைத் தேர்வுசெய்தபோது சிவசேகரம் மிகவும் குறைவாகவே எழுதியிருந்தார். அவரது மா ஓசேதுங் மொழிபெயர்ப்புக் கவிதைத் தொகுதி மட்டுமே வெளிவந்திருந்தது. எனினும், அவருடைய கவிதைகளின் முக்கியத்துவம் கருதி அவருடைய ஐந்து கவிதைகளை அத்தொகுப்பில் சேர்த்துக்கொண்டோம். பதினொரு ஈழத்துக் கவிஞர்கள் மிகவும் தாமதமாக 1984 ஆகஸ்டில்தான் வெளிவந்தது. அதற்கு முன்னர் 1983ல் சிவசேகரத்தின் முதலாவது கவிதைத் தொகுப்பு ”நதிக்கரை மூங்கில்” – வெளிவந்துவிட்டது.
”நதிக்கரை மூங்கில்” வெளியீட்டு விழா யாழ்ப்பாணத்தில் நடைபெற்றபோது நானும் அதில் பேசினேன். என்ன பேசினேன் என்று இப்போது நினைவில்லை. நான் எழுதிவைத்த குறிப்புகளும் புத்தகமும் எப்படியோ தொலைந்துவிட்டன. எனினும், பெரும்பாலும் கோஷ நடையிலான முற்போக்குக் கவிதைகளே வெளிவந்துகொண்டிருந்த அக்காலத்தில் , சிவசேகரத்தின் கவிதைகள் சில அதிலிருந்து விலகி, உள்ளடங்கிய குரலிரல் பெரிதும் இயற்கைப் படிமங்களின் ஊடாகக் கருத்து வெளிப்படுத்தும் தன்மையையும், அவரது ஆரம்பகாலக் கவிதைகள் சிலவற்றில் மா ஓவின் கவிதைப் பாணியின் தாக்கம் இருப்பதையும் சுட்டிக்காட்டிப் பேசியதாக நினைவு. அவருடைய ”மறப்பதற்கு அழைப்பு ”மொழிபெயர்ப்புத் தொகுதியின் வெளியீட்டுவிழா 2003ல் கொழும்பில் நடைபெற்ற போதும் நான் பேசினேன்.
3
சிவசேகரம் இலங்கையில் மார்க்சிய இடதுசாரி அரசியலுடன் நெருக்கமான உறவுடையவர். அவருடைய அரசியல் பார்வை நெகிழ்ச்சியற்றது அல்லது சமரசமற்றது எனலாம். இலங்கையில் பாரம்பரிய மார்க்சிய அரசியல் கட்சிகள் பாராளுமன்ற சந்தர்ப்பவாத அரசியலுக்குப் பலியாகி, பெரும்பான்மை அரசியல் கட்சிகளுடன் சமரசப்பட்டுப்போன பின்னணியில் உருவாகிய மாஓ சார்பு புதிய ஜனநாயக மார்க்சிய லெனினிசக் கட்சியின் ஆதரவாளராகச் செயற்படுபவர் அவர். கட்சியின் இதழ்களான செம்பதாகை, New Democracy ஆகியவற்றின் வெளியீட்டில் முக்கிய பங்களிப்புச் செய்பவர். அவர்களுக்கு நெருக்கமான தேசிய கலை இலக்கியப் பேரவையின் முக்கிய செயற்பாட்டாளர். சிவசேகரத்தின் கவிதைத் தொகுதிகள் தேசிய கலை இலக்கியப் பேரவையின் முயற்சியினாலேயே வெளிவந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது. இதை நான் இங்கு சொல்வதற்குக் காரணம் அவருடைய கவிதைகளின் அரசியல் சார்பைப் புரிந்து கொள்வதற்காகத்தான்.
சிவசேகரம் நான் முன்பு குறிப்பிட்டுள்ளதுபோல் பன்முகப்பட்ட ஆளுமை உடையவர் எனினும் அவருடைய கவிதைகள் ஒருமுகப்பட்டவை என்றே சொல்லவேண்டும். அடிப்படையில் அவை சமூக ‒ அரசியல் சார்புடையவை. அவற்றை மொத்தமாக அரசியல் கவிதைகள் என்றே சொல்லிவிடலாம். தேசிய, சர்வதேசிய அரசியல், வர்க்க அரசியல், இனத்துவ அரசியல், பெண்ணிய , சாதிய அரசியல் என அவரது கவிதைப் பொருள் அவருடைய அரசியல் நிலைப்பாட்டின் வெளிப்பாடுகளாகவே உள்ளன.
அவரது மொத்தக் கவிதையிலும் “இன்னும் ஒரு காதலின் கதை” போன்ற காதல் கவிதை என்று சொல்லக்கூடிய இரண்டொரு கவிதைகள்தான் அகப்படும். அவையும் வழக்கமான காதல் கவிதைகள் அல்ல. நண்பர் தேவராஜாவின் மனைவி இறந்தபோது கலாவின் நினைவாக என்று ஒரு இரங்கல் கவிதையும் எழுதியிருக்கிறார். நண்பர் செந்தில்வேலின் மகன் இறந்தபோதும் வடலி என்ற தலைப்பில் ஒரு கவிதை எழுதியிருக்கிறார். இவை வழக்கமான கையறுநிலைக் கவிதைகள் அல்ல. இயற்கை பற்றிய அவருடைய சில கவிதைகள் இயற்கையின் அழகுபற்றிப் பேசுவதாகத் தோன்றினாலும் உண்மையில் இயற்கைத் தோற்றப்பாட்டின் ஊடாக வாழ்வியல் உண்மைகளையே பேசுகின்றன. இலையுதிர் கால அரசியல் நினைவுகளை ஒரு உதாரணமாகக் காட்டலாம்.
அவரது தனிப்பட்ட மென்னுணர்வுகள் கவிதையில் வெளிப்பாடு பெற்றது அரிது என்றே சொல்லவேண்டும். அவ்வகையில் ”நிலவு ”என்ற ஒரு சிறுகவிதையைத்தான் சுட்டிக் காட்டலாம். தாயை நினைவுறுத்தும் படிமச் செறிவுமிக்க ஒரு அருமையான கவிதை அது. கவிதை பின்வருாறு
”புகையிரத மேடை, பேர்ப்பலகை
மின்விளக்குகள் எல்லாமே
என்னை விலகிச் சென்றுவிட்டன.
மரங்களும் கம்பங்களும்
தலைதெறிக்க ஓடுகின்றன.
யன்னலூடு தலைநீட்டும்
அந்த
நிலவுத் துண்டு மட்டும்
என்னைத் தொடர்ந்து வருகிறது
அம்மாவின்
நினைவுத் துண்டுபோல.”
இத்தகைய சில விலகல்களை விட்டுப்பார்த்தால், பொதுவாகச் சொல்வதானால் கூர்மையான சமூக அரசியல் விமர்சனமும், போராட்ட உணர்வும், நம்பிக்கைக் குரலும் அவரது கவிதைகளின் தொனிப்பொருள் எனலாம்.
4
தன்னைக் கவிதை எழுதத் தூண்டிய சிந்தனைத் தாக்கம் பற்றி ”நதிக்கரை மூங்கில்” தொகுப்புக்கு எழுதிய முன்னுரையில் சிவசேகரம் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்
”கலையும் இலக்கியமும் அரசியல் – சமுதாயச் சார்புடையனை என்ற உணர்வும், என் இளமைக் காலத் தீவிர தமிழ் இன உணர்வின் பிடிப்பினின்று மீட்சிம், மார்க்சியச் சிந்தனையின் ஈர்ப்புமே என்னை எழுதத் தூண்டின என்று நினைக்கிறேன்”
”தேவி எழுந்தாள் ”தொகுப்புக்கு எழுதிய முன்னுரையில் பின்வருமாறு எழுதுகிறார்.
”முற்போக்கு இலக்கியம் சமூதாயத்தைப் பிரதிபலிக்கும் ஒரு கண்ணாடியாக மட்டுமன்றி, சமுதாயத்தை மாற்றியமைக்கும் ஒரு கருவியாகவும் அமைய வேண்டும். இது நமது வரலாற்றுத் தேவை. அந்த அளவில் இலக்கியத்தின் சமுதாய விமர்சனப் பணி முற்போக்கு இலக்கியத்தில் அதிக அழுத்தம் பெறுகிறது. என்னுடைய கவிதைகளில் முன்னை விட அதிக அளவில் இப்போது இவ்வாறான அழுத்தம் உள்ளது என நினைக்கிறேன். இதற்கான காரணங்களில் இன்றைய அரசியற் தேவைகள் பற்றிய எனது மதிப்பீடு முக்கியமானது” .
”போரின் முகங்கள்” தொகுப்புக்கு எழுதிய முன்னுரையில் இதுபற்றி மேலும் பின்வருமாறு குறிப்பிடுகிறார்
”என் சமூக விமர்சனங்களைக் கட்டுரைகளில் மட்டுமன்றிக் கவிதைகளிலும் முன்வைத்து வருகிறேன். இத்தொகுதியிலுள்ள விமர்சனங்கள் பெருமளவு நேரடியானவையும் கடுமையானவையும் என நினைக்கிறேன். இக் கவிதைகள் எவரையும் மகிழ்விக்கும் நோக்குடையனவல்ல. இது மகிழ்ச்சிக்கான வேளையுமல்ல. என் கருத்துக்களுடன் எவரும் உடன்பட வேண்டும் என நான் எதிர்பார்க்கவில்லை”.
”ஏகலைவ பூமி” என்ற கவிதைத் தொகுப்பின் முதலாது கவிதையாக இடம்பெறும் அவரது கவிதைக் கோட்பாட்டின் பிரகடனம் போல் அமையும் ”இந்த எழுத்து” என்ற தலைப்பிலான கவிதையின் இரண்டாவது பகுதி பின்வருமாறு –
இந்த எழுத்து –
ஓ, மதிப்பீட்டாளரே
பிறப்பவை யாவும் இறப்பது உறுதி
எனவே மீண்டும்
அடித்துச் சொல்கிறேன்
இந்த எழுத்து
கற்பகத் தருவிற் காகிதம் செய்து
அமிர்தங் குழைத்து அச்சிற் பதித்த
அமர காவியம் இல்லவே இல்லை
மனித இனத்தின் மேன்மை பேண
ஒடுக்கு முறைக்கு எதிராய் இணைந்து
ஓங்கி உயரும் கைகளில் வாளாய்
நீளுந் துவக்காய்
அல்லது அதனுட் சின்னத் துணிக்கையாய்
விரையுங் கால்களில் செருப்பின் தோலாய்
கொடுமைக் கெதிராய்க் கிளர்ந்தெழும் போரிற்
கோபக் கனலின் சிறுபொறி ஒன்றாய்
ஒருகணப் பொழுதே உயிர்த்து மரிப்பினும்
இந்த எழுத்தின் அச்சிறு உயிர்ப்பு
எந்த அமர நிலையினும் உயரும்”
சிவசேகரத்தின் இந்த வரிகள் அவரது மட்டுமன்றி பொதுவாகவே அரசியல் கவிதைகளின் பயன்பாட்டு நோக்கை உரத்துப் பேசுகின்றன.
5
அரசியல் கவிதைகளை நாம் எவ்வாறு புரிந்துகொள்வது, எவ்வாறு வரையறுப்பது? ஒரு பரந்த அர்த்தத்தில் கவிஞனின் சமூகக் கடப்பாட்டில் (social commitment) மையம்கொண்ட கவிதையை அரசியல் கவிதை என்று சொல்லலாம். சமூக, அரசியல், பண்பாட்டுப் பிரச்சினைகள் அனைத்தையும் இது உள்ளடக்குவதாகக் கொள்ளலாம்.
அவ்வகையில், அவற்றின் பொருள் காரணமாக அரசியல் கவிதைகளைக் கவிதைகளே இல்ல என்று கூறும் ஒரு கூட்டம் இன்னும் தமிழில் செல்வாக்குடன் இருக்கின்றது. இன்று ஜெயமோகனை இவர்களின் தலைமைச் சிந்தனையாளர் என்று கூறலாம். தூய கவிதை என்ற ஒரு மாயமானைப் பற்றி உரக்கப் பேசுபவர் அவர். பாரதி தூய கவிதைகள் அதிகம் எழுதாததால் தமிழின் மகாகவி வரிசையில் பாரதிக்கு இடம் இல்லை என்றும் அவர் அடித்துச் சொல்கிறார்.
தூய கவிதை என்றால் என்ன என்பதே நமக்குப் புரிவதில்லை. அரசியல், சமூக சார்பற்ற கவிதைகளைத்தான் அவர்கள் அவ்வாறு கருதுகிறார்கள் போலும். இரண்டாயிரம் வருடத் தமிழ்க் கவிதை வரலாற்றில் நாம் அத்தகைய தூய கவிதையைத் தேடிச் சென்றால் நமக்கு அது இலகுவில் அகப்படாது. உலகில் எந்த மொழியிலும் வெளிப்படையாகவோ மறைமுக மாகவோ சமூக அரசியல் சார்பற்ற கலை, இலக்கியங்கள் என்று பெரும்பாலும் எதுவும் இல்லை. தூய கவிதைச் சிந்தனைக்குப் பின்னால் போனால் புறநானூறை, சிலப்பதிகாரத்தை, திருக்குறளை எல்லாம் நாம் மறந்துவிட வேண்டும். அவ்வகையில் இந்தத் தூய கவிதை என்பதை நாம் புறக்கணித்துவிடலாம்.
சிவசேகரத்தின் கவிதைகள் பொதுவாக அரசியல் கவிதைகள் என்று சொன்னேன். அவை பலரகப்பட்டவை. பொருள் அடிப்படையிலும் சொல்லும் முறையிலும் வேறுபடுபவை. சர்வதேச, தேசிய அரசியல் நிகழ்வுகள் பற்றிய அவருடைய பார்வை, போர் எதிர்ப்பு, ஜனநாயக அரசியல் பம்மாத்துகள் பற்றிய கிண்டல், இனவாதம், வர்க்க ஒடுக்குமுறை, பெண்ணடிமைத் தனம், சாதி ஒடுக்குமுறை என்பவற்றுக்கு எதிரான குரல் என சமூக அரசில் பிரச்சினைகள் பற்றிய அவரது எண்ணங்களே அவரது கவிதையின் பிரதான உள்ளடக்கம் எனலாம்.
கவிதை வெளிப்பாட்டு முறையிலும் வேறுபாடுகளை அவதானிக்கலாம்.அவருடைய ஆரம்ப காலக் கவிதைகள் பலவற்றில் அரசியல் உள்ளுறைந்து இருக்கும். ”நதிக்கரை மூங்கில்” ,”செப்பனிட்ட படிமங்கள்” தொகுதிகளில் இத்தகைய கவிதைகள் சிலவற்றைக் காணலாம். ஏகாதிபத்தியமும் வலது சந்தர்ப்பவாதமும், எழுச்சி, பயணம், இலை உதிர்கால அரசியல் நினைவுகள் போன்றவற்றை உதாரணமாகக் காட்டலாம். இங்கு தலைப்பில்தான் அரசியல் வெளிப்படையாக இருக்கிறது. கவிதையில் அது மறைவாக இருக்கிறது. கவிதைகள் வெளிப்படையாக இயற்கை நிகழ்வுகளை விபரிப்பனவாகத் தோன்றுகின்றன. ஆனால் உள்ளே அரசியல் செய்திகள் உறுதியாக உள்ளன.
வீரசூரிய வேறொரு கோணம், உன் மண்ணும் என் மண்ணும் போன்றவை வெளிப்படையாக அரசியல் பேசுபவை. சிவசேகரத்தின் பெரும்பாலான கவிதைகள் வெளிப்படையான அரசியல் கவிதைகள்தான். இவற்றுள் பல மரபுசார்ந்த அகவல்பா வடிவிலும், சில விருத்தப்பா வடிவிலும், இன்னும் சில சிந்து கும்மி போன்ற இசைப்பா வடிவிலும் அமைந்துள்ளன. அவருடைய அகவல் பொதுவாகப் பேச்சோசை சார்ந்து புதுக் கவிதைக்குக் கிட்டியதாக இருக்கும். விதிவிலக்காக அவருடைய ஆரம்பகால நதிக்கரை மூங்கில் தொகுப்பில் உள்ள சில கவிதைகள் சங்ககால அகவலுக்குக் கிட்டிய நடையில் உள்ளன. இவற்றைவிட முட்கம்பித் தீவு என்ற தொகுப்பில் இடம்பெற்றுள்ள நாடற்றார் பாடல்கள் என்ற தலைப்பிலான கவிதை நாட்டார் பாடல்களைத் தழுவி அமைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
சிவசேகரத்தின் கணிசமான கவிதைகள் அகவலும் உரைநடையும் கலந்த, வரையறுக்கப்பட்ட சந்தத்துடன் கூடிய, அல்லது சந்தம் அற்ற புதுக்கவிதை வடிவில் அமைந்துள்ளன. வெளிப்படையான அரசியல் கூற்றுகளாகவும் உரைநடைத் தன்மை மிக்கதாகவும் உள்ளன. ஆட்டமும் விதிகளும், றாங்கிபிடித்த தெரு, நுகர்வுப் பொருளாதாரச் சிந்தனை, ஊரடங்கு, ஆகழ்வாராய்வு பற்றிய ஒரு ஆய்வு, வாக்குக் கடதாசியைச் சரியாகப் பயன்படுத்தவது எப்படி, டொன் கிஹோட்டே, பதவிகள் பற்றிய ஒரு ஆராய்ச்சி, தாய்மை எய்தல் பற்றிய ஒரு சிந்தனை, காஸாவின் அபிமன்யு, சிலந்திபற்றி ஒரு சிந்தனை போன்ற கவிதைகளை இதற்கு உதாரணமாகக் காட்டலாம். வாக்குக் கடதாசியைச் சரியாகப் பயன்படுத்தவது எப்படி என்ற கவிதை முற்றிலும் உரைநடையில் பந்திமுறையில் அச்சிடப்பட்டிருப்பதும், காஸாவின் அபிமன்யு பெரும்பகுதி உரைநடையிலும் பந்திமுறையிலும் அமைந்திருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
நான் இங்கு குறிப்பிட்ட கவிதைகளையும் இன்னும் பலவற்றையும் கட்டுரைப் பாங்கான கவிதைகள் என்று சொல்லலாம். இவை கட்டுரைகள் அல்ல கவிதைகள்தான். ஆனால் கட்டுரைப் பாங்கானவை. இவற்றில் பொருளை எடுத்துரைக்கும் தர்க்கமுறை கட்டுரைக்கு உரியதாகவும், மனோபாவமும், தொனியும், வெளிப்பாட்டு முறையும், உள்ளார்ந்த அல்லது வெளிப்படையான கேலியும் கிண்டலும் கவிதைக்குரியதாகவும் இருப்பதால் இவற்றை அவ்வாறு வகைப்படுத்தலாம் என்று நினைத்தேன். பேர்டோல்ட் பிறக்ற், பாப்லோ நெரூடா, நஸீம் ஹிக்மத், அடோனிஸ், மஹ்மூட் தர்வீஷ் போன்ற புகழ்பெற்ற கவிஞர்களின் பல கவிதைகளிலும் நாம் இப்பண்பைக் காணலாம். சிவசேகரத்தின் கவிதைகளில் அவர்களின் செல்வாக்குப் படிந்திருப்பதையும் அவதானிக்க முடிகிறது.
முடிவாகச் சொல்வதானால், சிவசேகரம் இடதுசாரி மரபில் வலுவாகக் காலூன்றிய முக்கியமான கவிஞர். ஒடுக்கப்பட்ட மக்கள் சார்பிலும் அடக்குமுறைக்கு எதிராகவும் தன் கவிதையைப் பயன்படுத்துபவர். 1950களிலிருந்து தமிழில் இடதுசாரி மரபில் வந்த கவிஞர்கள் பலர் இருக்கிறார்கள். சிவசேகரம் அவர்களுள் தனித்துவமானவர். அவரது கவிதைப் பாணி அவருக்கே உரிய தனித்துவமானது. தமிழில் மட்டுமன்றி மூன்றாம் உலக நாடுகளின் முற்போக்குக் கவிஞர்கள் மத்தியிலும் அவர் தனித்துத் துலங்கக் கூடியவர். அவரது கூர்மையான அரசியல் பார்வையும், சமரசமற்ற விமர்சன நோக்கும், காரமான எள்ளலும் கடந்த சுமார் அரைநூற்றாண்டு காலத்தில் தமிழில் வெளிவந்த அரசியல் கவிதைகளுள் அவருடைய கவிதைகளை வேறுபடுத்திக் காட்டுகின்றன. தமிழில் அரசியல் கவிதைகள் பற்றிப் பேசுபவர்கள் சிவசேகரத்தைத் தவிர்த்துவிட்டுப் பேசமுடியாது என்பதை இத்தொகுதி உறுதிப்படுத்துகின்றது எனலாம். அவர் தொடர்ந்தும் தமிழ்க் கவிதைக்குப் பங்களிப்புச் செய்யவேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பு.
இணையத்தில்
www. commonfolks.in
வெளியீடு
Art of Socio Publication
சமூகம் இயல் பதிப்பகம்- லண்டண்
தமிழகத்திற்கு வெளியில் பிரதிகள் தேவையானோர்
தொடர்புகளுக்கு….
Whatsup 0044 7817262980
Email – eathuvarai@gmail.com
நன்றி: எம். ஏ. நுஃமான் / பெளசர்
