சர்வதேச பெண்கள் சாதனை விருது பெறும் மட்டக்களப்பைச் சேர்ந்த டாக்டர் பாமதி ஞானசெல்வம்!
பெண்கள் கல்விக்காக வாழ்நாளை அர்ப்பணிக்கும் ஒரு அசாதாராண பெண்ணின் கதை
டாக்டர் பாமதி ஞானசெல்வனின் கதை ஆச்சரியம் தருவது. மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பின்தங்கிய விவசாயக் கிராமங்களிலொன்றான அம்பிலாந்துறையிலுள்ள கொக்கட்டிச்சோலை என்னுமிடத்தில் வறுமையான குடும்பமொன்றில் பிறந்து உலகப் புகழ் பெற்ற அறுவைச் சிகிச்சை நிபுணராக உருமாறியிருக்கும் டாக்டர் ஞானசெல்வத்திற்கு குயீன் புக் எனப்படும் சர்வதேச பெண்கள் அமைப்பு இவ்வருடத்துக்கான ‘பெண் சாதனையாளர்’ விருதைக் கொடுத்து கெளரவித்திருக்கிறது.
Dr.Pamathy Gnanaselvam MBBS, MD (Surgery), MRCS, FMAS First Female Surgeon in Batticaloa District, First Female HBP Surgeon in Sri Lanka எனப் பட்டங்களும் பதவிகளும் பின்தொடரும் இப்பெண் மட்டக்களப்பின் போக்குவரத்து வசதிகள் இல்லாத படுவான்கரைக் கிராமங்களிலொன்றான கொக்கட்டிச்சோலையில் ஒரு வறுமையான குடும்பத்தில் பிறந்தவர். தந்தையார் குடிக்கு அடிமையானவர். நான்கு பெண்களில் மூன்றாமவர். ஒரு ஆண் சகோதரரும் உண்டு. தந்தையாரோடு வயல்களில் வேலை செய்தும் இதர கூலி வேலைகளைச் செய்தும் உழைக்கும் பணத்தில் தான் முழுக்குடும்பமுமே வாழ்ந்தது. சில வேளைகளில் ஒரு வேளை உணவுடன் சமாளித்துக்கொள்ள வேண்டிய தேவையும் இருந்தது.
கல்வியில் ஆர்வம் இருந்தும், திறமையிருந்தும் தனியார் கற்பித்தல் (private tution) எதுவும் இல்லாமலேயே அவரது திறமையிலும் உழைப்பிலும் நம்பிக்கை கொண்ட நல்லுள்ளங்களின் உதவியுடன் பாமதி தனது க.பொ.த. சாதாரண, உயர்தரப் பரீட்சைகளை வெற்றிகரமாகத் தாண்டி யாழ். பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரிக்குத் தெரிவாகினார். அவர் வாழந்த பிரதேச செயலக பிரிவிலிருந்து மருத்துவ பீடத்துக்குத் தெரிவான முதல் பெண்ணாக பாமதி திகழ்கிறார்.

கல்வியில் எத்துணை அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வெற்றிகளைத் தேடிக் குவித்தாரோ அதே அர்ப்பணிப்பை அவர் விளையாட்டிலும் செலுத்தத் தவறவில்லை. கதிரவன் விளையாட்டுக்கழகத்தின் பிரதிநிதியாக அவர் ஓட்டம், நீளப்பாய்ச்சல், ஈட்டி (ஜவெலின்) எறிதல், கரபந்தாட்டம் மற்றும் தமிழரின் பாரம்பரிய விளையாட்டான எல்லை ஆகியவற்றில் ஆரவத்தோடு ஈடுபட்டார். மருத்துவ பீடக் கற்கைக்காலம் முழுவதும் அவர் விளையாட்டுகளிலும் சமாமான அர்ப்பணிப்புடனேயே செயற்பட்டார்.
யாழ். மருத்துவ பீடத்தில் MBBS பட்டத்தைப் பெற்றுக்கொண்டு கொழும்பில் அறுவைச்சிகிச்சையில் தனது MD பட்டப்படிப்பையும், பின்னர் இங்கிலாந்தின் Royala College of Surgeons (MRCS-England) பட்டப்படிப்பையும் அதைத் தொடர்ந்து இந்தியாவில் Fellowship in Minimal Access Surgery (FMAS-India) பட்டப்படிப்பையும் முடித்துக்கொண்டார். இதைத் தொடர்ந்து உலகின் நவீன அறுவைச்சிகிச்சை முறைகளைக் கற்றுக்கொள்வதற்காக லண்டனில் இரண்டு வருடங்கள் Post Graduate Surgical Training பயிற்சியையும் முடித்துக்கொண்டு நாடு திரும்பினார்.
இச்சாதனைகள் மூலம் டாக்டர் பாமதி மட்டக்களப்பு மாவட்டத்தின் முதலாவது General Surgeon என்ற பெருமையையும் இலங்கையின் முதலாவது பெண் Hepato-Pancreo-Biliary (HBP) Surgeon என்ற பெருமையையும் பெற்றவராகிறார். உடலைக் கீறாமல் துளையிட்டு கமராவின் துணையுடன் சிறிய கருவிகள் மூளம் அறுவைச்சிகிச்சை (laproscopic surgery) செய்வதில் நிபுணத்துவம் பெற்றவர் டாக்டர் பாமதி. ஈரல், சதயம், பித்தப்பை சம்பந்தப்பட்ட அறுவைச்சிகிச்சை நிபுணர்களுக்கு உலகம் முழுவதும் ஏகப்பட்ட கிராக்கி இருந்தும், பெருந்திரளான ஊதியத்தைப் பெறக்கூடிய வாய்ப்புகள் இருந்தும் அவர் தனது நாட்டிற்குத் திரும்பி வந்து சேவையாற்றுவது போற்றுதற்குரியது.
இது மட்டுமல்லாது விஞ்ஞான ஆராய்ச்சிகளிலும் டாக்டர் பாமதி தனது கவனத்தைச் செலுத்துகிறார். இவரது பெயரில் பல ஆய்வறிக்கைகள், கட்டுரைகள் பிரபல மருத்துவ சஞ்சிகைகளில் வெளிவந்துள்ளன. அத்தோடு இளமானி, முதுமானி பட்டதாரிக்கற்கை நெறிகளையும், தாதிகளுக்கான கற்கை நெறிகளையும் இவர் கற்பித்து வருகிறார். இப்பிரந்தியத்தில் இருக்கக்கூடிய மருத்துவப் பணியாளர்களுக்கான் பட்டறைகள் மற்றும் உள்ளூர் மருத்துவக் கல்விசம்பந்தமான விடயங்கள் என அவர் தனது உபரி நேரத்தைச் செலவிடுகிறார். மீதியான நேரங்களில் அவர் பின்தங்கிய பிரதேசங்களிலிருந்து வரும் மாணவர்களது கல்வி மேம்பாட்டிலும், குறிப்பாகப் பெண்கள் கல்வி தொடர்பில் ஊக்கமளிப்பவராகவும் சமூக அக்கறையுடன் செயற்பட்டு வருகிறார்.
டாக்டர் பாமதி ஞானசெல்வத்தின் கதை அசைக்கமுடியாத உறுதிப்பாட்டுடன் சமூக மேம்பாட்டுக்காகத் தன் வாழ்நாளை அர்ப்பணிக்கும் ஒருவரின் கதை. அம்பிலாந்துறை வயல்களில் ஆரம்பித்து (இலங்கையின்) அறுவைசிகிச்சை கூடங்களில் ஆதிக்கம் செலுத்தும் இபெண் நம்பிக்கை, பலம், மாற்றம் ஆகியவற்றின் ஒரு அடையாளமாகவே பார்க்கப்படவேண்டும்.
டாக்டர் பாமதி ஞானசெல்வத்தின் சேவைகள்
பதுளை பொது வைத்தியசாலையில் 2003 ஆம் ஆண்டு பயிற்சி மருத்துவராகப் பணியை ஆரம்பித்த டாக்டர் பாமதி ஞானசெல்வம் அடுத்த மூன்று வருடங்களுக்கு திருகோணமலை பொது வைத்தியசாலையில் மயக்க மருந்து வழங்கல் துறையின் மருத்துவ அதிகாரியாகப் பணியாற்றினார். 2009 இல் அவர் தனது அறுவைச்சிகிச்சைப் பயிற்சியை முடித்துக்கொண்டு கண்டி போதனா வைத்தியசாலையில் பதிவாளராகக் கடமையாற்றினார். இதைத்தொடர்ந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மூத்த பதிவாளராகக் கடமையாற்றினார். இதன் பிறகு அவர் அறுவைச்சிகிச்சை நிபுணத்துவ ஆலோசகராக நியமனம் பெற்று கொழும்பு தேசிய வைத்தியசாலை, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை, அனுராதபுரம் போதனா வைத்தியசாலை ஆகியன உட்படப் பல மருத்துவ நிலையங்களில் கடமையாற்றினார். தற்போது அவர் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அறுவைச்சிகிச்சை ஆலோசகராகப் பணியாற்றுகிறார்.
மட்டக்களப்பின் உழவன் மகளாகப் பிறந்து உலகின் மகளாகத் தன்னைத் தரமுயர்த்திய டாக்டர் பாமதி ஞானசெல்வத்திற்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்!
