சர்வதேச நிதியத்திடம் மண்டியிடுவதை விட கஞ்சா விற்றுக் கடனை அடைக்கலாம் – டயானா கமகே
சர்வதேச நிதியம் போன்ற கடன் தரும் நிறுவங்களின் முன் மண்டியிடுவதை விட கஞ்சா எண்ணை ஏற்றுமதி செய்து கடனை அடைத்துவிட முடியும் என அரசாங்கத்தை ஆதரிக்கும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் டயானா கமகே பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
கஞ்சா பாவனையைக் குற்றமெனக் கருதும் சட்டத்தை நீக்கவேண்டுமன்பதற்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர் கமகே.
“கஞ்சா எண்ணையை (CBD) ஏற்றுமதி செய்வதன் மூலம் பில்லியன்களைச் சம்பாதிக்கலாம். 73 வருடங்களுக்கு மேலான காலனித்துவ காலத்துப் பழமையான சட்டத்தைத் தூக்கி எறிந்துவிட்டு வணிக ரீதியாகக் கஞ்சா விவசாயம் செய்வதை அனுமதியுங்கள். நாட்டின் கடனைத் தீர்ப்பதற்கு அதுவே இலகுவான வழி” என கமகே பாராளுமன்றத்தில் பேசும்போது தெரிவித்துள்ளார்.
“ஆயுர்வேதச் சட்டத்தின் 8 ஆவது பிரிவின் கீழ், கஞ்சாவை ஒரு மருந்து மூலிகையாக, வணிக ரீதியாக வளர்க்க ஆயுர்வேத ஆணையாளர் ஆணையிடலாம். எங்கள் கடவுள்களும், இயற்கையும் எமக்கு இந்த வணிகப் பயிரைத் தந்துள்ளன. ஐரோப்பிய முதலீட்டு வங்கியின் கருத்துப்படி அடுத்த வருடத்தில் கஞ்சா பாவனை 1,000 வீதத்தால் அதிகரிக்கவுள்ளது. 2018 இல் இவ் வர்த்தகத்தின் பெறுமதி 4-5 பில்லியன் டாலர்கள். 2027 இல் அது 140 பில்லியன் ரூபாய்கள் பெறுமதியுள்ளதாக இருக்கும். பலவிதமான வியாதிகளித் தீர்க்க கஞ்சா உபயோகப்படுகிறது. இவ் வர்த்தகத்தின் மூலம் நாம் பல் பில்லியன் டாலர்களைச் சம்பாதிக்கலாம். கஞ்சா பாவனையைக் குற்றமாக்கும் 19ம் நூற்றாண்டுச் சட்டத்தை இப் பாராளுமன்றம் தூக்கி எறியுமென நான் நம்புகிறேன்” எனப் பா.உ. டயானா கமகே தனது உரையின்போது குறிப்பிட்டார்.