Columnsமாயமான்

சர்வதேச நாணய நிதியத்தின் கடனும் அதன் விளைவுகளும் – ஒரு பார்வை

மாயமான்

ஏற்கெனவே எதிர்பார்த்தது போல் இலங்கைக்கு வழங்குவதாக இருந்த US$ 2.9 பில்லியன் கடன் தொகையை வழங்க சர்வதேச நாணய நிதியம் முன்வந்துவிட்டது. நான்கு வருடங்களில் இத்தொகை வழங்கப்படுமெனத் தெரிகிறது. கடந்த வருடம் ஏப்ரல் மாதம் இலங்கை சர்வதேச நிதி நிறுவனங்களிலிருந்து பெற்ற கடனைத் “திருப்பிக் கொடுக்க முடியாது” என இலங்கை கைகளைத் தூக்கிக்கொண்டது. இதனால் அதற்கு மேலும் கடன்களைத் தர சர்வதேச வங்கிகள் மறுத்துவிட்டன. நாடு பொருளாதார ரீதியில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்தது.

உலகின் பல நாடுகளும் அரச பணமுறிகள் (soverign bonds) எனப்படும் ‘உறுதிகளை’க் கொடுத்து தமக்குத் தேவையான பணத்தைக் கடனாகப் பெறுவது வழக்கம். இலங்கையும் இப்படியான பணமுறிகளை சர்வதேச வங்கிகள், முதலீட்டாளர்களுக்கு விற்றுத் தனது இறக்குமதி போன்றவற்றுக்குத் தேவையான பணத்தைப் பெற்றிருந்தது. தனியார் பணமுறிகளை விட அரச பணமுறிகளுக்கு வட்டி குறைவாக இருந்தாலும் அவை உரிய காலத்தில் திருப்ப வழங்கப்படுமென்ற நம்பிக்கையில் தான் கடன்கள் வழங்கப்படுகின்றன. ஆனால் ஏப்ரல் 22, 2022 இல் அரச பணமுறிகளின்மீது முதலிட்டவர்களுக்கு பணத்தைத் திருப்பித் தரமுடியாது எனக் கைகளை உயர்த்தியிருந்தது. சுதந்திர இலங்கையின் 70 வருட வரலாற்றில் இலங்கை முறித்துக்கொண்ட பண முறி ஒப்பந்தம் இதுவே முதலாவது.

காரணம்

சர்வதேச பொருளாதார நிலைமை, கோவிட் பெருந்தொற்று ஆகியவை பலநாடுகளை நெருக்கடிக்குள் தள்ளியிருந்தாலும் இலங்கை இந்த நிலைமைக்குச் சென்றதற்கு இவை எதுவும் காரணமில்லை. ஏறத்தாள அரசினால் எடுக்கப்பட்ட தான்தோன்றித்தனமான முடிவுகளே இதற்குக் காரணமென சர்வதேச நிதி நிபுணர்கள் கூறிவருகிறார்கள். 2019 இல் கோதாபய ராஜபக்ச ஜனாதிபதியாக வந்ததும் அவர் தனக்கு ஆலோசகர்களாகச் சில ‘நிபுணர்களை’ நியமித்திருந்தார். இவர்களில் பெரும்பாலானோர் கலாநிதிகள். இவர்களின் ஆலோசனைகளுக்கு இணங்க, பொருளாதாரத்தை மீட்டெடுக்க பல முதலாளித்துவ நாடுகள் பின்பற்றும் வரிக்குறைப்பு நடவடிக்கையை கோதாபய அரசும் முன்னெடுத்தது. ஆனால் ஊழல் மலிந்ததும், செயற்திறன் குறைந்ததுமான இலங்கையில் அது பலனளிக்கவில்லை. இதனால் அரச திறைசேரிக்கு பணம் வருவது வெகுவாகக் குறைந்தது. ஊழியர்களுக்குச் சம்பளம் வழங்கப் பணம் போதவில்லை. இதனால் பெருந்தொகையான நாணயத்தாள்களை அரசு அச்சிட்டது. இது பணவீக்கத்தை மிக மோசமாக உயர்த்திவிட்டது. பண்டங்களின் விலைகள் உயர்ந்தன. அது மட்டுமல்லாது நிபுணர்களின் ஆலோசனைப்படி கோதாபய செயற்கை உரத்தின் இறக்குமதியையும் திடீரென நிறுத்திவிட்டார். இதன் மூலம் விவசாய உற்பத்திகளும் மந்தமடைந்தன. ஏற்றுமதி தளர்ந்தது. டாலர் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் சர்வதேச கடன்களைத் திருப்பமுடியாத நிலைமைக்கு இலங்கை தள்ளப்பட்டது. அதனால் கைகளை உயர்த்திக்கொண்டது.

இலங்கை இந்நிலையை நோக்கிச் செல்லும்போதே எதிர்க்கட்சி உறுப்ப்பினரும் பொருளாதார நிபுணருமான ஹர்ஷா டி சில்வா போன்றோர் சர்வதேச நாணய நிதியத்திடம் கடனுதவியைப் பெறும்படி வற்புறுத்தினர். ஆனால் விமல் வீரவன்ச போன்ற தீவிர அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்களின் அழுத்தத்தினாலும் அப்போதைய மத்தியவங்கி ஆளுனர் கப்ரால் போன்றவர்களின் மடமையினாலும் இலங்கை அரசு அதைச் செய்யவில்லை. இதனால் வேறு வழியின்றி இலங்கை அரசு கைகளை உயர்த்தவேண்டி ஏற்பட்டது.

நிவர்த்தி

இப் பிரச்சினை மனிதரால் உருவாக்கப்பட்ட ஒன்று (man made crisis) எனச் சர்வதேசம் தீர்ப்புக்கூறி அதை நிவர்த்தி செய்யவென சர்வதேசம் எனப்படும் அமெரிக்கா ஆட்சி மாற்றத்தையும் கொண்டுவந்தது. கத்தியின்றி, சொற்ப இரத்தத்துடன் ‘அரகாலயா’ என்ற சாத்வீகப் புரட்சியுடன் நடைபெற்றது. இந்த ஆட்சி மாற்றத்தில் மக்களால் விரட்டப்பட்ட ரணில் விக்கிரமசிங்க முடிசூடப்பட்டார். ராஜபக்சக்களின் பெரமுன கூட்டில் இருந்த ஏகாதிபத்திய எதிர்ப்புவாதிகள் ஓரங்கட்டப்பட்டு ‘சர்வ கட்சி’ அரசு என்ற போர்வையில் விக்கிரமசிங்க தனது கையாட்களை நியமித்தார். அரகாலயா ஒரே நாளில் பிசுபிசுத்துப் போனது. இதில் ஏமாந்தவர்கள் பலர்.

இலங்கையில் சீனா காலூன்றாமல் தவிர்க்க சர்வதேசம் தன் கால்களை வெகுவாகப் பதிக்க முயற்சித்து வெற்றியும் கண்டுவிட்டது. இதுவரை சர்வதேச நாணய நிதியம் தாய்வீட்டுக்குப் போன புது மனைவி போல் “வருவேன் ஆனால் வரமாட்டேன்” என்ற பாணியில் தனது நிபந்தனைகளைப் பெறும்வரை அடம்பிடித்துக்கொண்டிருந்தது. அல்லது அப்படி நாடகமாடிப் பின்னணியில் பல காரியங்களைச் சாதித்திருந்தது. இலங்கை நிரந்தரமாக உறவை முறித்துவிடக்கூடாது என்பதற்காக இந்தியா அவ்வப்போது தேவையான ‘புறோக்கர்’ வேலைகளையும் செய்து சமாளித்துக்கொண்டது.

சர்வதேச நாணய நிதியம் இக் கடனை வழங்குவதற்கு ‘நிபந்தனைகள்’ பலவற்றை முன்வைத்திருந்தது. மத்திய வங்கியை சுயாதீனமாக இயங்க அனுமதித்தல், அரச நிறுவனங்களைத் தனியார் மயப்படுத்தல் என்று பல நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டன. இவற்றை முன்னெடுக்கக்கூடிய திறமையும், தந்திரமும் கொண்ட சர்வதேசத்தின் நம்பிக்கைக்குரிய ஒருவர் விக்கிரமசிங்க ஒருவர் மட்டுமே. இதே வேளை நாட்டு மக்களின் வறுமைக்குக் காரணம் ராஜபக்சக்களே என்ற பறைகளையும் தொடர்ந்து அடித்துக்கொண்டதால் விக்கிரமசிங்கவே ஆளப்பிறந்தவர் என்ற மனநிலை தற்காலிகமாக மக்களின் மனங்களில் ஊடகங்களால் பதியவைக்கப்பட்டது. இந்தியாவின் கடனுதவிகள் அவ்வப்போது அவரைத் தூக்கி வைத்துக்கொண்டன. தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காணப்போவதாகவும், உள்ளூராட்சித் தேர்தல்களை நடத்தப் போவதாகவும் பல வெடிகளை அவர் கொழுத்திப்போட்டு சகல தரப்பினரையும் ஏமாற்றி சர்வதேச நாணய நிதியத்தின் கடனை உடனடியாகத் தந்துதவும்படி கேட்டுக்கொண்டார். ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் மனித உரிமைகள் மீறல் அது இதுவென்று பல பறைகளை அடித்துக்கொண்டிருந்த ஐ.நா. உடபடப் பல தொண்டு நிறுவனங்கள் சர்வதேசத்தின் கட்டளையின் பேரில் வீடுகளுக்குள் முடங்கிக்கொண்டுவிட்டன. தமிழ் அரசியல் கட்சிக்காரரை இந்தியா முடக்கிக்கொண்டது. இதனால் விக்கிரமசிங்கவின் ஆட்சி எந்தவித பங்கமும் ஏற்படாமல் இனிதே நடைபெறுகிறது.

அடுத்து என்ன?

சர்வதேச நாணய நிதியம் இப்போது US$ 2.9 மில்லியன்களைக் கொடுக்க இணங்கிவிட்டது. முதல் வேலையாக இலங்கை அரசுக்கு பணமுறிகள் மூலம் கடன்வழங்கிய தனது ‘நண்பர்களை’ நோகாது பார்த்துக்கொள்ள இந்நிதியத்தின் கடன் பாவிக்கப்படும். கடந்த வருடம் இலங்கை தனது கைகளை உயர்த்தும்போது இக்கடன் தொகை US$ 78 மில்லியன்களாக இருந்தன. இவற்றைத் திருப்பக் கொடுத்ததும் சர்வதேச தரப்படுத்தும் நிறுவனங்கள் (rating agencies) இலங்கையை மீண்டும் ஒரு நாணயஸ்தர் எனப் பிரகடனப்படுத்தும். இதைத் தொடர்ந்து வேறு சர்வதேச வட்டிக்காரரும் இலங்கைக்கு கடன் தர முன்வரலாம். மீதியுள்ள பணத்தில் இந்தியா, சீனா போன்ற இதர சில்லறை வட்டிக்காரருடைய வட்டிகளைத் திருப்பிக்கொடுக்கலாம். மீதியில், ஐரோப்பாவிடமிருந்து இறக்குமதி செய்யப்பட்டு தற்போது நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் வெண்ணை போன்ற அத்தியாவசியமற்ற பொருட்களை உடனடியாக இறக்குமதி செய்வதன் மூலம் அவர்களைத் தாஜா பண்ணி ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை தொடர வழிபண்ணுவார்கள். இதன்மூலம் ஒன்றியமும் ‘மனித உரிமைகள், பயங்கரவாதத் தடைச்சட்டம்’ போன்றவை பற்றி இனிமேல் அலட்டிக்கொள்ளாது. எஞ்சிய பணத்தை அள்ளி இறைத்து மக்களைத் தற்காலிகமாகக் குசிப்படுத்தி வரப்போகும் தேர்தல்களில் தாம் சாதனையாளர் என்று காட்டி வாக்குகளை வெல்ல முயற்சிக்கலாம்.

எதிர்க்கட்சிகளின் நிலைமை

விக்கிரமசிங்கவும் சர்வதேசமும் தற்போது கட்டாக்காலி மாடுகள் போன்று இலங்கையில் நட்ந்துகொண்டிருப்பதற்கு முக்கிய காரணம் மிகவும் பலவீனப்பட்டிருக்கும் எதிர்க்கட்சிகள். பிரேமதாச ஆளுமையுள்ள தலைவரல்ல. அனுரகுமார திசநாயக்கா ஒரு மென்போக்காளராக இருந்தாலும் தீவிர இடதுசாரிகளின் பிடிக்குள் அகப்பட்டிருப்பவர். இடதுசாரீயம் செத்துப்போய் நீண்டகாலமாகிவிட்டது. தற்போது அக்கட்சிக்குள் இருப்பது உண்மையான இடதுசாரிகளல்ல வெறும் அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்கள். நவீன உலகில் பொருள் முதல்வாதம் மட்டுமே ஆட்சி செய்கிறது. இச்சுற்றுக்குள் தான் இயங்கவேண்டுமென்றும், இங்கு இப்போது சண்டியனாக இருப்பது அமெரிக்கா என்று தெரிந்தும் சாணக்கியமாக யதார்த்தமான கொள்கைகளை வகுக்கும் கடசியாக அது இல்லை. மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்கக்கூடிய திறமையோ திட்டமோ அவர்களிடம் இல்லை. இது விக்கிரமசிங்கவுக்குக் கிடைத்த வரப்பிரசாதம். ஒருவேளை அவர்கள் ஆட்சியைப் பிடித்தாலும் சர்வதேசத்தின் கெடுபிடிகளும் தந்திரங்களும் அதை நீடிக்க விடாது.

அடுத்த ஆட்சி

சர்வதேசம் அனுமதித்தால் விக்கிரமசிங்க அடுத்த வருடம் ஜனாதிபதி, பாராளுமன்றத் தேர்தல்களை நடத்தலாம். விக்கிரமசிங்க இத் தேர்தலில் போட்டியிடுவதற்கான சந்தர்ப்பங்கள் குறைவு. சர்வதேச நிதியம் இலங்கையை மீளவும் ஊழல் கொழிக்கும் பூமியாக மாற்றுமானால் அவர் போட்டியிட வாய்ப்புண்டு. ஒரு வருடம் அதற்குப் போதாது. அதற்காக அவர் ஒதுங்கிவிடப் போவதில்லை. அவரது காப்பாளர்களான ராஜபக்சக்களைப் பாவித்து எதிரியான பிரேமதாசவை ஒழித்துக்கட்டவே பார்ப்பார். பிரேமதாச மீதான வஞ்சம் அவரிடம் தொடர்ந்தும் இருக்கும். நாடு பொருளாதார ரீதியில் மேலும் பாதாளத்துக்குப் போனால் ராஜபக்சக்கள் விக்கிரமசிங்கவைப் பலிக்கடாவாக்கி ஆட்சியைக் கைப்பற்றலாம். ஜே.வி.பி. /என்.பி.பி. போலல்லாது அவர்களால் சர்வதேசத்துடன் ஆடு-புலி ஆட்டத்தைச் சிறப்பாக ஆடத் தெரியும். அவர்களை இயக்க சர்வதேசத்திடமும் கயிறுகளுண்டு.

உலகச் சமநிலை

இதே வேளை யூக்கிரெய்ன் போரில் அமெரிக்காவும் நேட்டோவும் மானபங்கப்படுவதற்கான சாத்தியங்கள் நிறைய உண்டு. காலம் போகப்போக ஒன்றிய நாடுகளுக்கிடையே உரசல் அதிகரிக்கும். அமெரிக்காவில் பைடன் துரத்தப்படலாம். குடியரசுக்கட்சிக்கு யூக்கிரெய்ன் மீது அக்கறையில்லை. எனவே ரஸ்யா இதுவரை பிடித்த இடங்களைத் தக்கவைத்துக்கொண்டு யூக்கிரெய்னுடன் சமாதானமொன்றை ஏற்படுத்த முனையும். சீனா இதற்கு உதவிசெய்யும். இதனால் உலகின் மூன்றாவது சமநிலைத் தளமாக தென்னுலகம் (global south) முன்னணிக்கு வரலாம். அப்படியொரு நிலையில் சிலவேளைகளில் ஜே.வி.பி. போன்ற கட்சிகளுக்கு ஆட்சியமைக்கும் சாத்தியங்கள் ஏற்படலாம்.

தமிழர் நிலை

தெற்கில் என்னதான் நடைபெற்றாலும் வடக்கும் கிழக்கும் அதனால் பாதிக்கப்படமாட்டாது. மிகக்கடை நிலையில் வாழப்பழகிக்கொண்ட எமது மக்கள் இனிமேலும் தாழ்ந்துபோக இடமில்லை. அவர்கள் தம்மைத்தாமே முன்னேற்றிக்கொள்ளும் வழிகளைப் பார்த்துக்கொள்வார்கள். இந்தியாவின் பா.ஜ.க. அரசு தமிழர் தாயகத்தை இந்தியாவின் ஒரு மாநிலமாகப் பார்க்க ஆரம்பித்துவிட்டது. இந்தியாவின் பொருளாதார ஆதிக்கமும், அதைத் தக்கவைத்துக்கொள்ளவல்ல அரசியல் ஆதிக்கமும் அங்கு நிலைபெற அது வழிவகுக்கும். அதற்கான பரிசாக இந்தியின் ஆதிக்கத்தையும் இந்திய வியாபாரிகள், பணியாளர்களின் பெருக்கத்தையும் நாம் எதிர்கொள்ள வேண்டி ஏற்படலாம்.

ஜெய் ஹிந்த் / வாழ்க தமிழ்!

(Photo Credit: AP Photo / Eranga Jayawardena)