சர்வதேச நாணய நிதியத்தின் காலில் விழப்போகும் இலங்கை?
நிதி
வெளிநாட்டுச் செலாவணிப் பற்றாக்குறையால் பெற்ற கடன்கள் மற்றும் பணமுறிகள் (bonds) ஆகியவற்றைத் திருப்பிக்கொடுக்க டொலரில் நாணயமின்மையால் இலங்கை மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பது தெரிந்ததே. இந்த வருடத்திற்குள் திருப்பிக் கொடுக்கவேண்டிய தொகை US$ 6.9 பில்லியன் எனவும் ஆனால் இதுவரை 3 பில்லியன்களே கையிருப்பில் உள்ளது எனவும் கூறப்படுகிறது.
இதே வேளை இந்தியாவிடமும் சீனாவிடமும் மேலும் கடன்களை வாங்குவதற்காக உள்நாட்டுச் சொத்துக்களை ‘அடகு வைப்பதற்கு’ எதிராக இடதுசாரிகளும் சிங்களக் கடும்தேசியவாதிகளும் போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில் இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தின் கால்களில் விழுவதைவிட வேறு வழியில்லை.
இதுகுறித்து நாட்டின் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச ‘ஃபைனான்சியல் ரைம்ஸ்’ பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் “கடன் ஒப்பந்தங்களிலிருந்து வழுவுவதைத் தவிர்ப்பதற்காகவும் தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து ம்ள்வதற்காகவும் அரசாங்கம் சகல வழிகளிலும், சகல தரப்புக்களுடனும் பேரம் பேசிவருகிறது. சர்வதேசப் பணமுறிகள், வாங்கிய கடன்கள் அவற்றுக்கான வட்டிகள் எனப் பலவகைகளில் பணத்தேவை அரசாங்கத்திற்கு இருக்கிறது. எனவே அது சர்வதேச நாணய நிதியமாக இருந்தாலும்சரி ஏதோ ஒரு வழியில் இதற்குத் தீர்வு காண வேண்டும். சகலதரப்புகளுடனும் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டிருக்கிறோம்” எனத் தெரிவித்திருக்கிறார்.
பெலீஸ், சிம்பாப்வே, எகுவாடோர் போன்ர நாடுகள் சமீப காலத்தில் தமது கடன்களைத் திருப்பிக் கொடுக்கமுடியாமல் அதில் மூழ்கிப்போயிருந்தன. இலங்கையும் அப்படியான நிலைமைக்குத் தள்ளப்படுமெனப் பல முதலீட்டாளர்கள் எதிர்வுகூறியிருந்தனர்.
இலங்கைக்கு வெளிநாட்டு செலாவணியை உழைத்துத்தரும் இரண்டு முக்கிய துறைகளாக சுற்றுலா மற்றும் வெளிநாட்டு இலங்கைப் பணியாளர்கள் மூலம் கிடைக்கும் சம்பாத்தியமுமே இருந்தன. கோவிட் பெருந்தொற்ரு இந்த இரண்டு வருமானங்களின் மீதும் மண்ணை அள்ளிப் போட்டுவிட்டது. ஆனால் அது மட்டுமல்ல பிரச்சினைக்குக் காரணம். கோதாபய ராஜபக்ச ஆட்சிக்கு வந்ததும் அவர் மேற்கொண்ட வரிக்குறைப்பினால் கஜானாவுக்கு வரும் பணத்தில் 40% துண்டுவிழுந்தது. இதனால் கஜானாவில் பணம் விரைவில் தீர்ந்துபோனது.
இதற்குள் மத்திய வங்கி ஆளுனர் நிவாட் கப்ரால், “நாங்கள் சர்வதேச நாணய நிதியத்தின் கால்களில் விழப் போவதில்லை. வேறு வழிகளில் நாம் எஅமது கடன் சுமையைச் சமாளித்துக் கொள்வோம்” எனக் கூறிவருகிறார். அதே போல் ஜே.வி.பி. மற்றும் இடதுசாரித் தொழிற்சங்கங்களும், அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்களும் சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை கடன் வாங்குவதற்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில், அரசு சீன, இந்திய கடனுதவியில் மட்டுமே கண்வைத்திருந்தது.
“நாங்கள் 6.9 பில்லியன் கடன் கொடுப்பனவு மட்டுமல்ல, அதற்கும் மேல் உணவு, மருந்து, மூலப் பொருட்கள், எரிபொருள் போன்ர பல பண்டங்களை வாங்குவதற்கும் பணம் தேவை” என நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
இக் கடன் தொகையின் மீன்றிலொரு பங்கு வெளிநாட்டு பணமுறி முதலீட்டாளர்களிடம் இருக்கிறது. அவர்களுக்கு மட்டும் கடந்த வாரம் 500 மில்லியன்கள் கொடுக்கப்பட்டது. வருகிற ஜூலை மாதம் மேலும் 1 பில்லியன் திருப்பப்படவேண்டும். ஆனால் அதற்குள் நாடு வங்குரோத்தாகிவிடுவதற்கான சாத்தியமே உண்டு என நிதி ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதற்குள் பணமுறிகளின் உண்மையான பெறுமதியைத் திருப்பித் தரமுடியாவிடில் அதில் அரைவாசியையாவது தந்தால் போதுமென்ற நிலையில் முதலீட்டாளர்கள் இருப்பதாகவும் இதைச்சாதகமாகப் பாவித்து அரசாங்கம் அவர்களோடு பேரம்பேசிவருகிறதென்றும் (restructuring) கூறப்படுகிறது. இதே வேளை சீனாவின் கடன் ஏற்கெனவே 10% த்தால் வளர்ந்துள்ள நிலையில் அதன் கடனையும் மீள் ஒழுங்கு செய்யும்படி இலங்கை அரசு பேரம்பேசி வருவதாகவும் அறியப்படுகிறது.
சீனாவின் கடனின் பெரும்பாலான பங்கு உட்கட்டுமானத்தில் செலவழிக்கப்பட்டது எனவும் அதனால் நாட்டுக்கு வருமானமீட்டித்தர முடியாது எனபதைப் பல பொருளாதார நிபுணர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். இக் கட்டுமான வேலைகளுக்காக சீனா தனது பணியாளர்களையே கொண்டுவந்ததுடன் அவற்றிற்கான ஒப்பந்தங்களும் சீன நிறுவனங்களுக்கே கொடுக்கப்பட்டதால் சீனா தனது கடனின் பெருபங்கை ஏற்கெனவே மீட்டுவிட்டது.
இந் நிலையில் சர்வதேச நாணய நிதியம் மற்றும் இந்திய உதவியுடன் மட்டுமே இந் நெருக்கடியிலிருந்து தற்காலிகமாக வெளியில் வரமுடியுமெனப் பொருளாதார நிபுணர்கள் கருதுகிறார்கள்.