MoneyNewsSri Lankaமாயமான்

சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை மண்டியிடுமா?

மாயமான்

சர்வதேசங்களுக்கென வைத்த பொறியில் தானே மாட்டிக்கொண்டு தவிக்கும் சிறீ லங்கா என்று ஆரம்பிப்பதால் என்னை ஒரு நாட்டுப்பற்றாளன் இல்லை எனக் கருதிவிடவேண்டாம். என்ன இருந்தாலும் 6.9 மில்லியன் மக்களால் வாக்களிக்கப்பட்டு ஆட்சிக்கு வந்ததாக மார்தட்டி நிற்கும் சிங்கம் கோதாபயவிடம் 6.9 மில்லியன் கடனைத் திருப்பித்தா என்று வெளிநாடுகள் முதுகில் தட்டிக்கொண்டு நிற்பதைப் பார்க்கச் சகிக்க முடியவில்லைத் தான். 6.9 மில்லியனுமக்கும் அவருக்கும் அப்படி என்ன உறவோ தெரியாது உழுத்துப்போன பாவிக்காத பசளைக்கும் அவர் 6.9 மில்லியனைக் கொடுத்துவிட்டு வீணி வடித்துக்கொண்டு நிற்பதைப் பார்க்க யாருக்குத் தான் கவலை வராது.

பாம்புக்கு தலையும் மீனுக்கு வாலும் (மரியாதைக்காக மற்றதைச் சொல்லவில்லை) காட்டி இதுவரை சமாளித்துவிட்ட சிறீ லங்காவுக்கு புது வருடம் கொஞ்சம் சவாலாகத்தான் இருக்கப் போகிறது. உணவகத்துக்குச் சாப்பிடப் போன நாமல் ராஜபக்சவையையும் அவரது மகாராணியாரையும் அங்கிருந்த மக்கள் விரட்டியடித்திருப்பது ஒரு சோறு பதம் எனப் பார்க்கலாம்.

பாட்டுக்காரிக்கு நிலம் கொடுத்த பாரிவள்ளலின் நாட்டில் விரைவில் 6.9 மில்லியன் மக்கள் உணவுக்காக வரிசையில் நிற்கப்போகிறார்கள். அவர்களின் கோபத்திலிருந்து தப்ப பாரி பதுக்கி வைத்திருந்த தங்கத்தை நண்பன் வேலுப்பிள்ளை கணநாதன் உதவியுடன் உகண்டாவுக்கு நகர்த்திவிட்டது மக்களுக்கு மேலும் சினத்தைத் தோற்றியிருக்கிறது. எனவே ஆட்சி மாற்றம் அவசியம் என்பதை 6.9 மில்லியன் மக்களும் இப்போதைக்கு உணர்ந்திருப்பார்கள்.

அடுத்தது என்ன?

‘அங்கால எல்லாளன், இங்கால கடல்’ என்ற துட்ட கைமுனு நிலமையில் தற்போது இருக்கும் கோட்ட கைமுனுவுக்கு ‘அங்கால கடன் காரர் இங்கால மக்கள்’ நிலைமை. இதிலிருந்து தப்ப அவருக்கு இரண்டே வழிகள் தானுண்டு. ஒன்று கடன்காரரிடம் மேலும் கடன் வாங்கி அதிலிருந்து வட்டியைக் கொடுப்பது, அல்லது சர்வதேச நிதியத்தின் கால்களில் தடாலென்று விழுவது. அதற்கும் கடன்காரர்கள் கட்டைகளைப் போடலாம்.

சர்வதேச நாணய நிதியம்

இடதுசாரிகளின் வாய்ப்பாட்டில் அதிகம் பாராயணம் செய்யப்படும் ‘முதலாளித்துவ எதிரியான’ சர்வதேச நிதியம் எப்போதுமே ஒரு பூச்சாண்டி நிலையில்தான் இருந்துவருகிறது. ஆனால் முதலாளித்துவ பொருளாதார வாய்பாடுகளை இதர தேவைகளுக்குப் பயன்படுத்திக்கொண்டு கடன் வாங்கும் விடயத்தில் மட்டும் ‘நிதியத்தைப்’ பூச்சாண்டியாகக் காட்டுவது நல்லதல்ல.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு கஷ்டப்படும் நாடுகளுக்கு ‘உதவிசெய்யவென’ இரண்டு நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன. நீண்டகால பெருந்திட்டங்களை நிறைவேற்ற கடன் வழங்கும் நிறுவனமாக உலக வங்கியும், குறுங்கால நிதி நெருக்கடிகளைச் சமாளிக்கவெனக் கடன் தரும் நிறுவனமாக சர்வதேச நாணய நிதியமும் உருவாக்கப்பட்டன.

சர்வதேச நிதியத்திடம் கடன் வாங்குவது பற்றி, பொருளாதார நிபுணர் கலாநிதி அமீர் அலி இப்படி விபரிக்கிறார்: இது காய்ச்சலுக்காகக் குடும்ப வைத்தியரிடம் மருந்து பெறுவதைப் போன்றது. காய்ச்சல் குணமடையும் மட்டும் மருந்தை எடுக்க வேண்டும். அம் மருந்து சீராகச் செயற்படவேண்டுமானால் அக் குறுங் காலத்துக்கு ‘மது, மாமிசத்தைத்’ தவிர்க்கும்படி (பத்தியம்) மருத்துவர் கூறலாம். நோய் தீர வேண்டுமானால் மருத்துவர் விதித்த நிபந்தனைகளைப் பின்பற்றியேயாக வேண்டும்.

அதே வேளை, குடும்ப வைத்தியரைப் பார்க்காது மல்லித் தண்ணியோடு சமாளிக்கலாமென நினைத்து காய்ச்சல் நிமோனியாவாக ஆக்கிப் பின்னர் சிறப்பு வைத்தியர், மருத்துவமனை என்று போய் செலவைக் கூட்டுபவரும் உண்டு. இலங்கை இப்போது மல்லித் தண்ணியுடன் சமாளிக்கப்பார்க்கிறது. இன்னும் நிமோனியா ஆக்கவில்லை. குடும்ப வைத்தியரான ‘நிதியம்’ மட்டுமே அதற்கு இருக்கும் நல்ல தேர்வு.

ஆனாலும் இலங்கை மத்திய வங்கி ஆளுனர் கப்ரால் முதல் ஏனைய முன்னாள் பெட்டிக்கடைக்காரரும் தற்போது பாராளுமன்றத்தில் கதிரை தூக்குபவர்களுமான பாராளுமன்ற உறுப்பினர்கள் வரை ஆடுகின்ற கழைக்கூத்தாட்டத்தால் பொருளாதார விதிகள் பற்றி எதுவுமே அறியாத ஜனாதிபதி, வரவிருக்கும் ஆபத்தை அறியாமல் கைதட்டிச் சிரித்துக்கொண்டிருக்கிறார்.

‘நிதியத்தைப்’ பற்றி ஏராளமான கதைகள் இருக்கின்றன. அது இலங்கைக்கு மட்டுமென எழுதப்பட்டவை அல்ல. அதைப் பாவித்து நாட்டின் பொருளாதாரத்தைச் செப்பனிட்ட நாடுகள் பல. தற்போது இலங்கைக்கு கடன் கொடுத்து உதவியிருக்கும் வங்காளதேசம் கூட 2020 இல் அவசர தேவைகளுக்காக US$732 மில்லியன்களை ‘நிதியத்திடம்’ கடன் வாங்கியிருந்தது. ஆனால் இலங்கை மட்டும் வயிறு வெறுமையானாலும் நெஞ்சை மட்டும் நிமிர்த்திக்கொண்டு நிற்கிறது.

உண்மையில் இலங்கைக்குக் கடன் தரும் சீனா, இந்தியா, பங்களாதேசம் போன்ற நாடுகள் அறவிடும் வட்டியைவிட ‘நிதியத்தின்’ வட்டி வீதம் குறைவு (3.5%). அதைத் திருப்பிக் கொடுக்க 10 வருடங்கள் வரை எடுக்க முடியும். அதன் நிபந்தனைகள் இக் குறுங்காலத்துக்கு கொஞ்சம் கசப்பானவையாக இருப்பதே வழமை. தனிப்பட்ட நாடுகளிடம் பெற்ற கடனைச் செலுத்த முடியாது போனால் நாட்டின் இறைமைக்கு ஆபத்துவருவதைப் போல, ‘நிதியத்திடம்’ கடன்பெறும்போது அப்படியான ஆபத்துகள் இல்லை. மாறாக ‘நிதியம்’ தனது கடனைத் திருப்பிப் பெற வேறுவகையான அழுத்தங்களைக் கொடுக்கும். வேறு நாடுகள் இலங்கைக்குக் கடன் கொடுக்காது, இறக்குமதிகள் தடைப்படும், நாணய மதிப்பு குறையும் இறுதியில் கடனையும் வட்டியையும் கொடுப்பதாக நாடு காலில் விழும். ஆஜெண்டீனா, கிரீஸ் ஆகிய நாடுகள் இதற்கான சமீபத்திய உதாரணங்கள்.

நிபந்தனைகள்

நாடுகளுக்குக் கடன் தரும்போது ‘நிதியம்’ சில நிபந்தனைகளை முன்வைக்கிறது. அது சில வேளைகளில் அமெரிக்கா போன்ற மேற்கத்தைய நாடுகளுக்குச் சாதகமாக அமைகின்றன என இடதுசாரித் தோழர்கள் முந்வைக்கும் குற்றச்சாட்டுகளில் ஒன்று. அதில் கொஞ்சம் உண்மையும் இருக்கிறது. ஆனாலும் வேபெண்ணை கசப்பது போலவே நோயாற்றும் குணமும் அதற்கு உண்டு. உள் நாட்டு நிதி நிலைமையை (fiscal strength) முன்னேற்றும்படி நிதியம் கேட்பது நிதியத்தின் முதல் நிபந்தனை. இதைச் சாதிக்க அந்த நாடு சில விடயங்களைச் செய்யவேண்டியிருக்கும். அவை:

  1. வருமான வரியை அதிகரித்து அரசாங்கத்தின் வருவாயை அதிகரிக்கும்படி கேட்கலாம்;
  2. தேவையற்ற பொதுச் செலவு விரயங்களைக் குறைக்கும்படி (reduce wasteful public expenditures) கேட்கலாம்;
  3. பொருளாதாரச் சீர்திருத்தத்தை (economic reforms) முன்னெடுக்கும்படி வலியுறுத்தலாம்;
  4. சில வேளைகளில் நாணயத்தின் பெறுமதியைக் குறைக்கும்படி நிதியம் நிர்ப்பந்திக்கவும் கூடும்.

சிக்கல்கள்

இலங்கையைப் பொறுத்த வரையில் இவை அனைத்தையும் உடனே செயற்படுத்த அதனால் முடியாது. காரணம் அதன் ஊழல். ஊழல் பட்டியலில் உலகின் 94 ஆவது இடத்தில் இருக்கிறது இலங்கை. அத்தோடு கோதாபய ராஜபக்ச ஆட்சிக்கு வந்ததும் முதல் செய்த வேலை தனது வியாபாரிகள் மற்றும் மேல்தட்டு நண்பர்களுக்காக வருமான வரியையும் VAT வரியையும் (15% த்திலிருந்து 8%) குறைத்தமை. இதனால் பொதுமக்கள் பலன்பெறவில்ல்லை என்பதோடு அரசாங்கத்தின் கஜானாவில் பணம் மிக மோசமாக வற்றிப்போய்விட்டது.

தேவையற்ற பொதுச்செலவு விரயங்கள் என்றதும் முதலில் நினைவுக்கு வருபவை அரச கூட்டுத்தாபனங்கள். இவற்றில் பல ஏற்கெனவே நட்டத்தில் இயங்கிக்கொண்டிருக்கின்றன. இதற்குக் காரணம் அவற்றின் நிர்வாகிகளாக திறமையானவர்களைவிட ஆட்சியாளருக்கு நெருங்கியவர்களே நியமிக்கப்படுகிறார்கள். இவற்றைச் செப்பனிட ‘நிதியம்’ தரும் ஆலோசனை இந்நிறுவனங்களைத் தனியார் மயப்படுத்திவிடுங்கள் என்பதுவாகவே பொதுவாக இருப்பது வழக்கம். இதனால் பலருக்கு வேலையில்லாமல் போக நேரிடும். எனவே தான் ‘தோழர்கள்’ நிதியத்தை வெறுக்கிறார்கள்.

‘நிதியத்தை’ ஒரு ஏகாதிபத்தியத்தின் பிரதிநிதியாகக் காட்டி மக்களிடையே அதற்கு எதிரான பிரச்சாரங்களை தொழிற்சங்கங்கள் மேற்கொள்கின்றன. அதற்கு காரணம் தோழர்களின் சங்கத்துக்கான வருவாய் பெரும்பாலும் சிவப்பு நாடுகளிலிருந்தே வரவேண்டியிருக்கிறது. எனவே தொழிற்சங்கங்களின் வாக்குகளில் ஆட்சிக்கு வந்த அரசுக்கு இந்த மருந்து ஏற்றுக்கொள்ள முடியாதது. இதற்காகத் தான் ஜே.வி.பி. போன்ற தொழிலாளர் கட்சிகளும் ‘நிதியத்திடம்’ கடன் பெறுவதற்கு எதிராகவுள்ளன.

நாணயத்தின் பெறுமதி குறைக்கப்படும் பட்சத்தில் வெளிநாடுகளில் பணி புரிபவர்கள் வங்கியினூடாகப் பணத்தை அனுப்பாமல் ‘கறுப்புச் சந்தையினூடாக’ பணத்தை அனுப்ப முற்படுவார்கள். இதனால் வங்கியில் வெளிநாட்டுச் செலாவணி மேலும் அருகிக்கொண்டுபோகும். இதன் விளைவாக இறக்குமதிகளுக்கான பணத்தைக் கொடுக்க ‘டொலர்’ இல்லாது அரசாங்கம் இறக்குமதிகளைக் கட்டுப்ப்டுத்த வேண்டி வரும் (தற்போது நடைபெறுவது)

நன்மைகள்

  1. சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெறுவதால் வெளிநாடுகளிலிருந்து முதலீட்டாளர்கள் நம்பிக்கையுடன் முதலிட வருவார்கள் (consumer confidence will increase). அதிக வெளிநாட்டு முதலீடுகள் நாட்டுக்குள் வரும்.
  2. நாட்டின் கடன் திருப்பித்தரும் வல்லமையை மதிப்பிடும் நிறுவனஙகள் (rating agencies) நாட்டின் மதிப்பை உயர்த்துவார்கள். இதனால் மேலும் வெளிநாடுகள், வங்கிகள் குறைந்த வட்டிக்கு கடன்களைத் தரும்.
  3. இலங்கைக்கு ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகையைத் தரும் ஐரோப்பிய ஒன்றியம் போன்ற நாடுகள் தமது சலுகைகளை நீடிக்கும்.
  4. நாணயத்தின் பெறுமதி குறைக்கப்படும்போது பெருந்தொகையான வெளிநாட்டுச் சுற்றுலாவாசிகள் இலஙகைக்கு வருவார்கள். அவர்களது நாணயம் கஜானாவை நிரப்ப அதன் மூலம் மேலும் இறக்குமதிகளை ஊக்குவிக்கலாம்.

இலங்கையின் கற்றோரும், பொருளாதார நிபுணர்களும் சர்வதே நிதியத்திடம் கடன் வாங்குவதே இப்போதைக்கு சிறந்தது என ஆலோசனைகளை வழங்கிவரும் நிலையில் அரசாங்கம் ‘நிதியத்திடம்’ கடனைப் பெறுவதற்குத் தொடர்ந்தும் மறுப்புத் தெரிவித்து வருகிறது. அதற்கு காரணம் ஒன்று ‘தோழர்கள்’ மற்றது தோழர்களுக்குப் பின்னால் நிற்கும் சீனா போன்ற சக்திகள். இந்தியா, சீனா போன்ற நாடுகள் இலங்கை மீது தமது பூகோள அதிகாரத்தை நிலைநிறுத்திக் கொள்வதற்காக நான் முந்தி நீ முந்தி என்று கடன்களை அள்ளி வழங்கி இலங்கையைக் கடன் பொறிக்குள் சிக்கவைக்க முயன்று வருகின்றன. எனவே இந்த விடயத்தில் அவற்றுக்கும் சர்வதேச நிதியம் ஒரு எதிரிதான்.

இதே வேளை, தனது பூகோள இருப்பினைக் காட்டி இன்னும் விலாங்கு அரசியலையே இலங்கை முன்னெடுக்குமானால் கடைசியில் வாலுமில்லாமல் தலையுமில்லாமல் போவதற்கான சாத்தியக்கூறுகளேயுண்டு.