சர்வதேச சுயாதீன விசாரணைக்கான பொறிமுறையொன்றை முன்மொழியும்படி தமிழர் அமைப்புகள் பிரித்தானிய அரசிடம் கோரிக்கை


எதிர்வரும் மார்ச் மாதம் கூடவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 46 வது அமர்வின் போது, தமிழ் மக்கள் மீது இலங்கை இராணுவத்தினால் மேற்கொள்ளப்பட்ட, இனப்படுகொலை உள்ளிட்ட போர்க் குற்றங்களை விசாரிக்க “சர்வதேச சுயாதீன விசாரணைக்கான பொறிமுறையொன்றை” முன்மொழியுமாறு பிரித்தானியாவிலுள்ள 250க்கும் மேற்பட்ட தமிழர் அமைப்புகள் ஒன்றிணைந்து அந் நாட்டின் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன.

“போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு ஏறத்தாழ 12 வருடங்கள் ஆகியும், அங்கு போர்க்குற்றங்கள் எதுவும் நடைபெறவில்லை எனக்கூறி அவற்றுக்கான விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதை இலங்கை அரசாங்கங்கள் தொடர்சியாகத் தடுத்து வருகின்றன” என இக் கோரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இம் முன்மொழிவுக் கோரிக்கைக்கான கடிதத்தில் கையெழுத்திட்ட அமைப்புகளில் சில:

தமிழ் இளையோர் அமைப்பு (TYO), தமிழ்த் தகவல் நடுவம் (TIC), பிரித்தானிய தமிழர் வர்த்தக சம்மேளனம் (BTCC), இனப்படுகொலைக்கெதிரான தமிழர் (TAG), இனப்படுகொலைத் தடுப்பிற்கும், வழக்குப்பதிவுக்குமான சர்வதேச நடுவம் (ICPPG), ஈழத்தமிழர் உரிமைகளுக்கான சர்வதேச நடுவம் (ICETR), தமிழ்த் தோழமை (TS), பிரித்தானிய தமிழக் கன்சர்வேட்டிவ் (BTC), தொழிற்கட்சிக்கான தமிழர் (TFL), லிபரல் டெமோக்கிறட்டுகளின் தமிழ் நண்பர்கள் (TFLD), த.தே.கூ. – பிரித்தானியா (TNA-UK), தமிழீழ விடுதலை இயக்கம் – பிரித்தானியா (TELO-UK), நாம் தமிழர்- பிரித்தானியா (NTK-UK), வீரத் தமிழர் முன்னணி – பிரித்தானியா (VTF-UK), என்.எல்.பி. க்கான தமிழர் (TFNLP), தேசங்களற்ற நாடுகள் (NWS), ஏதிலி உரிமைகள் இயக்கம் (RTC) மற்றும் பல பல்கலைக்கழக மாணவ ஒன்றியங்கள்.



இலங்கையால் கூட்டாக முன்மொழியப்பட்டு ஐ.நா. மனித உரிமைகள் சபையில் ஏற்கெனவே நிறைவேற்றப்பட்டிருந்த தீர்மானத்திலிருந்து இலங்கை தன்னிச்சையாக வெளியேறியது தொடர்பாக, பிரித்தானிய வெளிவிவகாரம் மற்றும் பொதுநலவாய அலுவலகத்திறாகான ராஜாங்க அமைச்சர், திரு நைஜெல் அடம்ஸ், கடந்த அக்டோபர் மாதம், தனது கரிசனையை மீளவும் வலியுறுத்தியிருந்தார்.

இலங்கையின் அரசியலமைப்பின் 20 வது திருத்தம் நிறவேற்றப்பட்ட கையோடு, அதன் அதிகாரத்தைப் பாவித்து ஜனாதிபதி ராஜபக்ச இலங்கை மனித உரிமைகள் ஆணையத்தின் பணிப்பாளர்களாக நியமிக்கப்பட்ட அனைவரும் சிங்களவர்களாக இருக்கிறார்கள் எனவும் இதனால் அது சுயாதீனமான ஒன்றல்லவெனவும் இலங்கை மனித உரிமைகள் ஆணையத்தின் முன்னாள் ஆணையாளர் ஒத்துக் கொண்டுள்ளார் என்பதும் இங்கு குறிப்பிடத் தக்கது.

பிரித்தானிய தமிழர் அமைப்புகளினால் வெளியிடப்பட்ட அறிக்கையின் முழு ஆங்கில வடிவத்தை இங்கு வாசிக்கலாம். (Tamil Guardian)