Sri Lanka

சம்பந்தன் மரணம்: திருமலை மாவட்ட பா.உறுப்பினராக திரு. சண்முகம் குகதாசன் தெரிவானார்

திரு இராஜவரோதயம் சம்பந்தன் அவர்களின் மரணம் காரணமாக திருகோணமலை மாவட்டத்தில் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்புவதற்கு திரு சண்முகம் குகதாசன் அவர்களது பெயரை அரசாங்கம் வர்த்தமானி மூலம் அறிவித்துள்ளது. இறுதியாக நடைபெற்ற தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பாகப் போட்டியிட்ட திரு. குகதாசன் 16,770 வாக்குகளைப் பெற்றுத் தோல்வியடைந்திருந்தார். அந்த வகையில் இம்மாவட்டத்தின் 4 பாராளுமன்ற உறுப்பினர்களில் அடுத்த இருப்பவர் திரு குகதாசன் ஆவார்.

தேர்தல் சட்டத்தின் பிரகாரம் திரு குகதாசன் அவர்கள் மறைந்த இராஜவரோதயம் சம்பந்தன் அவர்களின் இடத்தை நிரப்பவுள்ளார் என தேர்தல் ஆணையம் வர்த்தமானி அறிவிப்பின் மூலம் தெரிவித்திருக்கிறது.

தற்போது இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளராக இருக்கும் திரு. குகதாசன் நீண்டகால கனடிய குடிமகனாக இருந்து குடியுரிமையைத் துறந்துவிட்டு நிரந்தரமாக இலங்கையில் மீள்குடியேறியவர். கனடாவில் இருந்தபோது அவர் தமிழர் விடுதலை, தமிழ்மொழி வளர்ச்சி, இளையோர் தமிழ்க் கல்வி எனப் பல வழிகளிலும் தொண்டாற்றி வந்தவர். அதே வேளை நல்லாட்சி அரசாங்கத்தின் போது இலங்கை அரசின் தேசிய கொள்கைகள், பொருளாதார விவகாரங்கள் மற்றும் மீள்குடியேற்ற அமைச்சின் கீழ் கிழக்கு மாகாண அபிவிருத்தி இணைப்பாளராகக் கடமையாற்றியவர். இக்காலகட்டத்தில் குறிப்பாக, தமிழகத்தில் முகாம்களில் இடர்படும் அகதிகளை இலங்கையில் மீள்குடியேற்றம் செய்வதில் அவர் ஓரளவு வெற்றி கண்டவர்.

கனடாவிலிருந்து இலங்கை சென்றதும் திருகோணமலை மாவட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியை மீண்டும் கட்டியெழுப்புவதில் முனைப்பாகச் செயற்பட்டு வந்தவர். கனடாவில் கணிசமான வருமானத்தில் பணியாற்றி வந்தும்கூட அவ்வருமானத்தையும், ஓய்வூதியத்தையும் முற்றாகத் துறந்துவிட்டு தமிழ் மக்களுக்குச் சேவையாற்றுவதற்கென இலங்கை திரும்பியவர். கனடாவில் இருந்தபோது திருகோணமலை நலன்புரிச் சங்கம் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கனடா கிளை ஆகிய அமைப்புகளில் இணைந்து செயலாற்றி வந்தவர். இலங்கை திரும்பியதும் அங்கு திருகோணமலை மாவட்ட நலன்புரி அமைப்பில் இணைந்து தொடர்ந்தும் பணியாற்றி வருபவர்.

திரு குகதாசன் அவர்கள் கொழும்பு பல்கலைக்கழகத்தில் திட்டமிடல் நிர்வாகத்தில் சிறப்புப் பயிற்சி பெற்ற பட்டதாரியாவார். இதனைத் தொடர்ந்து மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் அரசியல் விஞ்ஞானத்தில் முதுமாணிப் படிப்பைத் தொடர்ந்தார். இதன் பிறகு அவர் கனடாவிற்குக் குடிபெயர்ந்து கல்வி மேம்பாடு, அகதிகள் புனர்வாழ்வு விடயங்களில் மிகவும் ஆர்வத்தோடு செயற்பட்டு வந்தார்.

அரசாங்கத்தின் வர்த்தமானி அறிவிப்பைத் தொடர்ந்து அடுத்த வாரமளவில் அவர் பாராளுமன்றத்தில் சத்தியப் பிரமாணம் எடுக்கலாமென எதிர்பார்க்கப்படுகிறது.