Spread the love

தென் அத்லாந்திக் சமுத்திரத்தில் மனிதக் குடியேற்றமற்ற தீவுகளில் கரையொதுங்கும் பல்லாயிரக் கணக்கான பிளாஸ்டிக் போத்தல்கள் ஒரு புதிய அதிர்ச்சி தரும் செய்தியைச் சொல்கின்றன. இதுவரை நினைத்திருந்தது போல மனிதர்கள் பாவித்ததற்குப் பிறகு கவனமற்று வீசும் பொருட்களல்ல அவை. அவையெல்லாம் சரக்குக் கப்பல்களில் கொண்டுவரப்பட்டு சமுத்திரங்களில் களவாகக் கொட்டப்படும் கழிவுகள் என ஆய்வாளர் கண்டுபிடித்துள்ளனர்.

கடல்களில் கழிவுகளைக் கொட்டக்கூடாது என கடந்த 30 வருடங்களாக அமுலிலிருக்கும் சமுத்திரப் பாதுகாப்புச் சட்டம் சொல்கிறது. இருப்பினும் பிளாஸ்டிக் கழிவுகள் பெருமளவில் கொட்டபடுகின்றன. ஏழை நாடுகளுக்குப் பிளாஸ்டிக் பொருட்களைப் பணக்கார நாடுகள் மறுசுழற்சிக்கென ஏற்றுமதி செய்வது இப்போது பெரும் வியாபாரமாகப் போய்விட்டது. இந் நாடுகளில் சிலவும், சில இடைத் தரகர்களும் இவ்வாறு கழிவுகளைச் சமுத்திரங்களில் கொட்டிவிட்டுப் பணம் சம்பாதிக்கிறார்கள்.

சமுத்திரங்களில் காணப்படும் 80 வீதமான பிளாஸ்டிக் கழிவுகள் தரைகளிலிருந்து நீர் நிலைகள், ஆறுகள் மூலம் கடலை அடைகின்றன எனவே இதுவரை நம்பப்பட்டு வந்தது. மீதி இருபது வீதமும் பிளாஸ்டிக்கில் செய்யப்பட்ட மீன்பிடி வலைகளும் உபகரணங்களுமாகும்.

சமுத்திரங்களில் பிளாஸ்டிக் கழிவுகளைக் கொட்டும் கப்பல்கள்! 1
மனிதரில்லாத் தீவில் கரையொதுங்கிய பிளாஸ்டிக் கழிவுகளுடன் ஆய்வுக் குழுவைச் சேர்ந்த மேஎல் கொண்ணன்.

இந்த ஆய்வுக் குழு 2018 இல், ஒரு கி.மீ. கடற்கரையோரத்தில் 2580 பிளாஸ்டிக் போத்தல்களைச் சேகரித்ததெனவும் அவற்றில் 83% கடிஅசி இரண்டு வருடங்களுக்குள் சீனாவில் தயாரிக்கப்பட்டனவெனவும் கப்பல்களில் அல்லாது இந்த இரண்டு வருடங்களில் இவ்வளவு தூரத்தை அவை அடைந்திருக்க வாய்ப்பில்லை என அவர்கள் தெரிவிக்கிறார்கள்.


சமுத்திரங்களில் பிளாஸ்டிக் கழிவுகளைக் கொட்டும் கப்பல்கள்! 2
தீவில் கரையொதுங்கிய ‘மாஸ்டர் கொங்’ 500 மி.லீ. தண்ணீர்ப் போத்தல்கள்

ஆரம்பத்தில் இப் போத்தல்கள் சீன மீனவர்களிடமிருந்து வந்திருக்கலாம் எனச் சந்தேகித்தாலும் அவர்கள் இக் கடற்பிராந்தியத்தில் மீன் பிடிப்பதில்லை எனப் பின்னர் உறுதிப்படுத்தப்பட்டது. ஆனால் கடந்த சில வருடங்களில் சீனாவுக்கும் ஆசிய, தெனமெரிக்க நாடுகளுக்குமிடையே சரக்கு கப்பல்களின் போக்குவரத்து பன்மடங்கு அதிகரித்திருந்தமையையும் ஆய்வுக் குழு கருத்தில் எடுத்திருந்தது. இதே வேளை தென்னாபிரிக்கா, கென்யா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளின் கப்பல்களிலிருந்தும், கனடாவின் கிழக்குக் கரையோரத்தில் மீன்பிடிக்கு 75 வீதமான மீன்பிடிக் கப்பல்ளிலிருந்தும் பிளாஸ்டிக் கழிவுகள் கடல்களில் சேர்கின்றன என இக் குழு தெரிவிக்கிறது.

சர்வதேச கப்பற் போக்குவரத்துக் கழகம் இது பற்றி அக்கறைகொண்டுள்ளது என்றும் துறைமுகங்களில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் வசதிகள் குறைவாக இருப்பதும் இதற்குக் காரணமென்றும் கூறுகிறது. இவ் விடயத்தில் அபிவிருத்தியடைந்த நாடுகளே அலட்சியப் போக்குள்ளனவென்றும் அபிவிருத்தியடைந்துவரும் நாடுகள் சூழலில் அதிக அக்கறை காட்டுகின்றனவென்றும் இக் கழகம் கூறுகிறது.

குற்றம் செய்பவர்களைக் கண்டுபிடிப்பதில் இருக்கும் சிரமங்களினால் பலர் தப்பிக்கின்றனர் எனவும் இது குறித்தே அதிக கவனம் செலுத்த்வேண்டியுள்ளதெனவும் இக் கழகம் கருதுகின்றது.

Print Friendly, PDF & Email
Related:  வட-கிழக்கில் வீட்டுத் தோட்டம் | செல்வின் இரெனூஸுடன் ஒரு உரையாடல்