சமாதானம் வேண்டுமென்றால் பிரதேச விட்டுக்கொடுப்பு அவசியம் – யூக்கிரெய்னுக்கு நேட்டோ அறிவுரை

“சமாதானம் வேண்டுமென்றால் அதற்கான விலையைக் கொடுத்தேயாகவேண்டும்” என நேட்டோ செயலாளர் நாயகம் ஜெனெரல் ஜென்ஸ் ஸ்டோல்ட்டென்பேர்க் யூக்கிரெய்னுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். ரஷ்யாவுடன் மேற்கொள்ளப்படவுள்ள சமாதானப் பேச்சுவார்த்தையின்போது யூக்கிரெய்ன் தரப்பு பலமாக இருக்கவேண்டுமென்றால் தனது சில பிரதேசங்களை ரஷ்யாவுக்கு விட்டுக்கொடுக்க அது தயாராக இருக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஃபின்லாந்தில் நடைபெற்றுவரும் குல்டறண்டா பேச்சுவார்த்தைகளின்போது ஃபின்லாந்து ஜனாதிபதி சோலி நீனிஸ்த்தோவுடனான சந்திப்பைத் தொடர்ந்து ஜெனெரல் ஸ்டோல்டென்பேர்க் மேற்கண்டவாறு தெரிவித்தார். தற்போது நிலவி வரும் போரை முடிவுக்குக் கொண்டுவரவேண்டுமானால் சில பிரதேசங்களை ரஷ்யாவுக்குக் கொடுத்தேயாகவேண்டும் என அமெரிக்க நேசநாடுகளின் கருத்தாக இருக்கிறதென அவர் கூறியுள்ளார். இதற்கு உடன்பட்டால் தாம் யூக்கிரெய்னுக்கு ஆயுத உதவிகளைச் செய்யத் தயாராகவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

எப்படியான விட்டுக்கொடுப்புக்களை யூக்கிரெய்ன் செய்யவேண்டும் என அவர் தெரிவிக்காவிட்டாலும் இப் போரில் கடுமையான இழப்புக்களை அடைந்துவரும் தரப்பே அதைத் தீர்மானிக்க வேண்டும் எனவும் இரு தரப்பும் ஒரு உடன்பாட்டுக்கு வந்த பின்னரே தாம் யூக்கிரெய்னின் ஆயுதபலத்தை அதிகரிப்போம் என ஸ்டோல்ட்டென்பேர்க் தெரிவித்துள்ளார்.

இரண்டாவது உலக யுத்தத்தின் பின்னர் ஃபின்லாந்து தனது பிரதேசமான கரெல்லாவை ரஷ்யாவுக்கு விட்டுக்கொடுத்த படியால் தான் ஃபின்லாந்து சுதந்திரமான தனி நாடாக இருக்க முடிகிறது. இந்த உதாரணத்தைப் பாவித்து ஃபின்லாந்து ஜனாதிபதியும் நேட்டோ செயலாளர் நாயகமும் மேற்கொண்ட உரையாடலையடுத்து இந்த ஆலோசனையை ஸ்டோல்ட்டென்பேர்க் யூக்கிரெய்னுக்கு வழங்கியுள்ளார்.

யூக்கிரெய்னினால் இந்தப் போரில் வெற்றிபெற முடியும் என அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகள் வெளிப்படையாகக் கூறிவந்தாலும் யூக்கிரெய்னை ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை ஒன்றுக்குத் தள்ளும் முயற்சியில் இந்நாடுகள் எல்லாம் பின்னணியில் செயற்படுவதாக சமீபத்தில் சீ.என்.என். அறிக்கையொன்று தெரிவித்திருந்தது. யூக்கிரெய்ன் தரப்பை ஆதரிக்கும் நாடுகளில் மக்களிடையே போருக்கான ஆதரவு சரிந்துவருவதால் யூக்கிரெய்ன் பேச்சுவார்த்தைக்குப் போகவேண்டுமென சில நாடுகள் தமக்கு அழுத்தம் தருவதாக யூக்கிரெய்ன் அதிபர் செலென்ஸ்கி சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

இதே வேளை கிரிமியா மற்றும் டொனெட்ஸ்க், லுகான்ஸ்க் குடியரசுகளை விட்டுக்கொடுத்து யூக்கிரெய்ன் சமாதானப் பேச்சுவார்த்தைக்குப் போகவேண்டுமென சமீபத்தில் ஹென்றி கீசிங்கெரும் கேட்டிருந்தார். பேச்சுவார்த்தை ஒன்றுக்குப் பலதடவைகள் செலென்ஸ்கி இணங்கியிருந்தும் பின்னர் அமெரிக்க ஆலோசனைகள், சுய தடுமாற்றம் ஆகியவற்றின் காரணமாக அவர் அம்முயற்சிகளிலிருந்தும் பின்வாங்கியிருந்தார். பேச்சுவார்த்தைகளை முறித்துக்கொண்டு வெளிவரும் ஒவ்வொரு வேளைகளிலும் “டொன்பாஸ் குடியரசில் யூக்கிரெய்ன் கொடியைத் தவிர வேறெதுவும் பறக்கக்கூடாது” என அவர் அறிவிப்பதுண்டு.

“இத்தனை அழிவுகளுக்குப் பின்னர் பிரதேசங்களை விட்டுக் கொடுப்பது இலகுவானதல்ல. ஆனால் இத்தனை வெற்றிகளுக்குப் பின்னரும் ரஷ்யாவும் தான் கைப்பற்றிய பிரதேசங்களை விட்டுக்கொடுக்குமென எதிர்பார்க்க முடியாது. இதனால் சமாதானத்தைக் கொண்டுவருவது மிகவும் சிரமமான ஒன்று. பிரதேசங்களை விட்டுக்கொடுப்பதனால் தான் அது சாத்தியமாகும்” என ஸ்டோல்ஸ்டென்பேர்க்குடனான சந்திப்பின்போது ஃபின்லாந்து ஜனாதிபதி நீனிஸ்த்தோ தெரிவித்துள்ளார்.