‘சமாதானத்தைக்’ கொண்டுவந்த மைக்குறோவேவ் போர்- சீனாவின் புதிய ஆயுதம்?
பதினைந்தே நிமிடங்களில் இந்தியப் படைகள் அனைவரும் வாந்தி எடுக்கத் தொடங்கி விட்டனர். அக்கணமே அனைவரும் அவ்விடத்தை விட்டு ஓடிவிட்டனர். இப்படித்தான் நாங்கள் எமது அவ்விடத்தைக் கைப்பற்ற முடிந்தது
பெய்ஜிங் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜின் கான்றொங்
இந்திய-சீன எல்லைப் போர் புதிய பரிணாமங்களுக்குள் அடி எடுத்து வைக்கிறது. மேற்கு இமாலய மலைத் தொடரில் நிலைகொண்டிருக்கும் இரண்டு இராணுவத்திற்குமிடையில் சமீப காலமாகக் கைகலப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்த வருடம், ஜூன் 20 இல் இரு தரப்பும் ஆயுதப்பாவனைகளின்றி மோதிக்கொண்டதில் இந்திய தரப்பில் 20 பேரும் சீன தரப்பில் அறியப்படாத எண்ணிக்கையில் பலரும் கொல்லப்பட்டிருந்தனர். இம் மோதலின்போது மலைச் சூழலுக்குப் பழகிப்போன, இந்தியாவில் வாழும் திபெத்திய அகதிகளில் பலர் இந்தியப்படைகளோடு சேர்ந்து போரிட்டிருந்தனர். இதனால் சீன தரப்புக்கு பாரிய இழப்பு ஏற்பட்டிருந்தது எனக் கூறப்பட்டது. கனரக ஆயுதங்கள் பாவிக்கப்பட்டால் பெரும் போர் மூள்வதற்கான சாத்தியம் உண்டென்ற படியால் இருதரப்பும் அதைத் தவிர்த்து வந்தன.
இப்போது சீனா கனராக ஆயுதத்தைத் தவிர்த்து தொழில்நுட்ப ஆயுத மூலமாகப் போர்க்களத்தில் புதிய பரிணாமத்தைத் திறந்து விட்டிருக்கிறது. மைக்குறோவேவ் எனப்படும் அதி சக்திவாய்ந்த அலைக்கற்றையை மனிதர்கள் மீது குறி வைத்து பாய்ச்சுவது. உணவைச் சூடாக்குவதுபோல் இது மனித உடலையும் பலவகைகளிலும் சூடாக்குவதன் மூலம் உஅடலுக்குத் தீங்கு விளைவிக்கிறது. தற்போது கிடைத்திருக்கும் தகவல்கள் உண்மையானால், அடுத்த கட்டம் அதி சக்தி வாய்ந்த அணுக்கதிர்களாக இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
கடந்த பல வருடங்களாக சீனா 5G தொழில்நுட்பத்தில் பல ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. இத் தொழில்நுட்பத்திலும் மைக்குறோவேவ் அலைக்கற்றைகள் தகவல் தொழில்நுட்பத்தின் காவிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. மைக்குறோவேவ் அலைக்கற்றைகளுக்கு நீண்ட தூரம் பயணம் செய்யும் ஆற்றல் இல்லை. அதனால் மக்கள் வாழும் இடங்களில் அக்கற்றைகளைப் பரிவர்த்தனை செய்யும் கோபுரங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இக் கோபுரங்களிலிருந்து பாய்ச்சப்படும் ஒலிக்கற்றைகள் மனிதரின் உடல்நலத்துக்குத் தீங்கு விளைவிக்குமா என்ற ஆராய்ச்சியில் சீனா உட்படப் பல நாடுகளும் ஆராய்ச்சி செய்து வருகின்றன. தற்போது சீன இராணுவம் இத் தொழில்நுட்பத்தை இந்திய எல்லைப் படைகளின் மீது பரீட்சித்துப் பார்த்திருக்கிறதா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் லடாக் மற்றும் சீனாவின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் திபெத் ஆகிய மலைப் பிரதேசங்களில் மிக மோசமான சூழலிலும் இரு நாடுகளும் பல்லாயிரக்கணக்கான படைகளைக் குவித்துவருகின்றன.
சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கிலுள்ள றென்மின் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜின் கான்றொங் கூறியதாக ரைம்ஸ் வெளியிட்டுள்ள இக் கட்டுரையில், கடந்த ஆகஸ்ட் மாதம் 29 ம் திகதி சீன எல்லைப் படையினர் இந்த மைக்குறோவேவ் ஆயுதத்தைப் பாவித்து அப் பகுதியையே மைக்குறோவேவ் ஓவண் மாதிரி ஆக்கிவிட்டிருந்தனர் எனத் தெரிவித்திருக்கிறது.
“பதினைந்தே நிமிடங்களில் இந்தியப் படைகள் அனைவரும் வாந்தி எடுக்கத் தொடங்கி விட்டனர். அக்கணமே அனைவரும் அவ்விடத்தை விட்டு ஓடிவிட்டனர். இப்படித்தான் நாங்கள் எமது அவ்விடத்தைக் கைப்பற்ற முடிந்தது” என அப் பேராசிரியர் கூறியதாக ரைம்ஸ் கட்டுரை கூறுகிறது. இவ் விடயத்தை இரு பகுதியினருமே வெளியில் சொல்லவில்லை. இந்திய தரப்பிற்கு இது ஒரு மிக மோசமானதும் வெட்கத்துக்குரியதுமான விடயம் என்பதால் அது இவ்விடயத்தை அமுக்கி விட்டது.
ஆரம்பத்தில் இந்தியாவினால் அனுப்பப்பட்ட திபெத்திய உதவிப்படைகளின் தாக்குதலை சீனப் படைகள் எதிர்பார்த்திருக்கவில்லையாதலால் அவர்கள் பின்னடைவைச் சந்தித்திருந்தனர். அவர்களது படையிழப்பு பற்றி எதுவுமே தெரிவிக்கவில்லை. அதன் பழிவாங்கலாக அவர்கள் தற்போது இந்த தொழில்நுட்ப உத்தியைக் கையாண்டு வெற்றிகண்டுள்ளனர். ஒரு துப்பாக்கி ரவையும் பாவிக்கப்பாடாமல் தமது நிலத்தைக் கைப்பற்றிவிட்டதாக சீனா இப்போது புளகாங்கிதமடைகிறது.
இச் சம்பவத்தின் பின்னர் இரு தரப்பும் தமது படைகளையும் கனரக ஆயுதங்களையும் பின்னகர்த்திவிட்டு படைகளில்லாத பிரதேசத்தை உருவாக்கி ஆளில்லா வேவு விமானங்களின் மூலம் கண்காணிப்புகளைச் செய்யும் திட்டங்கள் பற்றிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இரு தரப்பிற்குமிடையில் பல மோதல்கள் ஏற்பட்டிருந்தும் இருவருமே தமது நீண்டகால ஒப்பந்தமான “ஒரு துப்பாக்கி ரவையும் பாவிக்கப்படக்கூடாது” என்ற வாக்குறுதியை இதுவரை மீறவில்லை.