சமாஜி ஜாதிக பலவேகய என்ற பெயரில் சஜித் கூட்டணி

Spread the love
பிளவுபடும் ஐ.தே.கட்சி

ஐ.தே.கட்சியின் பிரேமதாச அணி அமைக்கும் கூட்டணியின் பெயர் சமாஜி ஜாதிக பலவேகயா எனவும் அக்கூட்டணி சட்டபூர்வமாகப் பதிவுசெய்யப்பட்டுவிட்டதென்றும் தெரியவருகிறது. சஜித் அணியும், அவரது பங்காளிக் கட்சிகளும் சேர்ந்து ‘அப்பே ஜாதிக பெரமுன’ என்ற கட்சிப் பெயரைப் பதிவிசெய்திருந்ததாகவும் பின்னர் அது சமாஜி ஜன பலவேகய என மாற்றப்பட்டுள்ளதாகவும் செய்திகள் கசிந்துள்ளன. இக் கட்சியின் தலைவராக பிரேமதாசவும், பொதுச் செயலாளராக மொனராகல மாவட்ட பா.உ. மட்டும பண்டார இருப்பாரெனவும் கூறப்படுகிறது.

கட்சியின் பெயர் மாற்றம், தலைவர், செயலாளர்களது நியமனங்கள் ஆகியவற்றைத் தாம் ஏற்றுக்கொண்டுள்ளதாக தேர்தல் ஆணயத்தின் செயலாளர் நாயகம் சமன் சிறி றத்னாயக்க அறிவித்துள்ளார். கட்சியின் சின்னமாக இருதயம் தெரிவிசெய்யப்பட்டுள்ளது.

ஐ.தே.கட்சி அதன் சின்னமான யானையின் கீழ்தான் தேர்தலில் அதன் வேட்பாளர்கள் நிற்கவேண்டுமென அதன் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கேட்டிருந்தும் பிரேமதாச அணி அதை உதாசீனம் செய்துவிட்டு இருதய சின்னத்தைத் தமது கட்சிச் சின்னமாக ஆக்கிக்கொண்டிருக்கிறது.

இலங்கையின் ஆரம்பகாலக் கட்சியான ஐ.தே.கட்சி பிளவுபடுவது இது முதல் தடவையல்ல. 1990 இல் கட்சியின் மூத்த் உறுப்பினர்களான காமினி திசநாயக்கா, லலித் அத்துலத்முதலி ஆகியோர் பிரிந்து சென்று ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி என்ற பெயரில் தேர்தலைச் சந்தித்தார்கள். 1999 இல் சரத் அமுனுகம தலைமையில் சிலர் சந்திரிகா பண்டாரநாயக்காவுடன் சென்றனர். 2007 இல் சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையில் 17 ஐ.தே.க. உறுப்பினர் மஹிந்த ராஜபக்ச அரசுடன் சேர்ந்திருந்தனர்.

இதற்கிடையில், சமாஜி ஜாதிக பலவேகய கட்சியைப் பதிவுசெய்ய வேண்டாமென்று ஐ.தே.கட்சி தேர்தல் ஆணையத்தின் தலைவரிக் கேட்டுள்ளது.

ஐ.தே.கட்சியின் சட்டச் செயலாளர் நிசாங்க நாணயக்காரா, P.C., தேர்தல் ஆணயத்திடம் இதை எழுத்துமூலம் கேட்டுள்ளார். ‘சமாஜி ஜாதிக பலவேகய’ என்ற பெயரை ஆங்கிலப்படுத்தும் போது அது ‘United National Power’ என்ற பெயரைப் பெறும் எனவும் அதன் சுருக்கம் UNP என வருவதால் தேர்தலில் மக்கள் குழப்பமடையக்கூடும் என அவர் ஆணையத்திற்கு விளக்கமளித்துள்ளார் என அறியப்படுகிறது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

>/center>