‘சப்பிரி கமாக்’ திட்டத்தின் கீழ் கிராமிய அபிவிருத்திக்காக 28 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு


இத் திட்டத்தின் கீழ்:
  • 14,000 கிராமசேவகர் பிரிவுகளுக்கும் அபிவிருத்திக்காக தலா 2 மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்படும்
  • திட்டங்களைக் கிராம சபைகளே தீர்மானிக்கும்
  • நிதிக்கான விண்ணப்பங்களைக் கிராம சபைகள் ஜனவரி 15, 2020 இற்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டும்.
  • நவம்பர் 2020 க்கு முதல், அடையாளப்படுத்தப்பட்ட 9 வகையான திட்டங்களும் நிறைவேற்றப்பட வேண்டும்.

‘சப்பிரி கமாக்’ திட்டத்தின் கீழ் புது வருடத்தில், கிராமிய அபிவிருத்திக்காக 28 பில்லியன் ரூபாய்களை ஒதுக்குவதாக பிரதமரும் நிதியமைச்சருமான மஹிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார்.

உள்ளூர் அரசியல்வாதிகளை உள்ளடக்கிய கிராமச் சபைகள் நாடெங்கும் அமைக்கப்பட்டு அச்சபைகள் மூலம் நடைமுறைப்படுத்தப்படவிருக்கும் திட்டங்கள் அறிவிக்கப்படும். பொதுப்பணித்துறையிலுள்ளோரும் இப்பணிக்கு உள்வாங்கப்ப்டுவார்கள். ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவிலிருந்தும் அப்பிரிவின் அபிவிருத்தி அதிகாரி இச்சபைகளைக் கூட்டுபவராக இருப்பார் என நிதியமைச்சின் அறிக்கை தெரிவிக்கிறது.

இக் கிராம சபைகள் டிசம்பர் 27 க்கு முதல் அமைக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட திட்டங்கள் பற்றிய விடயங்களை அச் சபை பிரிவுச் செயலாளருக்கு டிசம்பர் 31 க்கு முதல் சமர்ப்பிக்க வேண்டும். ஜனவரி 15 க்கு முதல் தேவையான விடயங்களுக்கான கோரிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டு, நவம்பர் 30, 2020 இற்கு முதல் சகல திட்டங்களும் நிறைவேற்றப்படவேண்டும். சட்டம் வரையறுக்குமாப்போல், சகல திட்டங்களும் அவற்றுக்கெனக் கொடுக்கப்பட்ட வரைமுறைப்படி செயற்படுத்தப்படவேண்டுமென அவ்வறிக்கை தெரிவிக்கிறது.

ஜனாதிபதி ராஜபக்சவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்ட ‘செளபாக்ய தெக்மா’ திட்டத்தின் கீழ் பிராந்தியங்களுக்கிடையில் காணப்படும் சமனற்ற தன்மையைச் சீர்படுத்துவதற்காக, ‘சபிரி கமாக்’ திட்டம் அறிவிக்கப்படுகிறது.