‘சனல் 4’ விவகாரம்: ராஜபக்சக்களின் அதிர்ஷ்டம்
சிவதாசன்
“‘சனல் 4’ ராஜபக்சக்களுக்கு எதிராக வன்மத்துடன் செயற்படுகிறது” என்கின்றனர் ராஜபக்ச குடும்பத்தினர். “‘சனல் 4’ புலம் பெயர் தமிழர்களுக்கு ஆதரவாக இயங்குகிறது என்கிறார் அமைச்சர் விஜேதாச ராஜபக்ச. “உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு காரணமானவர்களைக் கண்டுபிடிக்க சர்வதேச விசாரணையொன்றை நடத்துவதற்கு இலங்கை தயார்” என்கிறார் ஜனாதிபதி விக்கிரமசிங்க. போதாததற்கு நாட்டை விட்டுத் தப்பியோடி மீள வந்த வாயில்லாப் பிராணி கோதாபயவையே வாய் திறக்க வைத்துவிட்டது ‘சனல் 4’. சூத்திரதாரி மஹிந்த அதிர்ஷ்டம் தன்னை நோக்கி ஓடிவருவதைப் பார்த்து எகத்தாளமாகச் சிரித்துக்கொண்டிருக்கலாம்.
உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பு சம்பவங்கள் பற்றிய ‘சனல் 4’ நிகழ்ச்சி பலரது மனங்களையும் பிழிந்தெடுத்தது. பாதிக்கப்பட்டவர்களை வாட்டியெடுத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இறந்தவர்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும் நீதி வேண்டுமென்றே மறுக்கப்பட்டிருக்கிறது. எந்த ஆட்சியாளர் வந்தாலும் அது நடைபெறப் போவதில்லை. அது சிங்களத்தின் perpetual வெறி. பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவேண்டுமென ‘சனல் 4’ போராடுகிறதா? எனக்கு அதில் சந்தேகம் உண்டு. ராஜபக்சக்கள் தண்டிக்கப்படவேண்டுமென்பது அதன் நோக்கமா? இருக்கலாம். இறுதிப் போரில் தமிழர்களுக்கு அநீதியிழைத்தமை காரணமாக இருக்குமா? இருக்கலாம். அப்போ ‘சனல் 4’ இற்கு ஏனிந்த வஞ்சம்? ராஜபக்சக்கள் கெட்டவர்கள். அவர்கள் தமிழர்களுக்கு மட்டும் எதிரிகளல்ல. மானிடத்துக்குக்கே எதிரானவர்கள். கபடர்கள், திருடர்கள், கொலை அவர்களின் தொழில். அதனால் அவர்களை அரசியல் ரீதியாக நிர்மூலம் செய்யவேண்டும். அதுவே தான் ‘சனல் 4’ இன் கொள்கையாக இருக்கலாம். நல்ல மனிதர்கள் எங்கெங்கு இருக்கிறார்களோ அவர்களும் இதையேதான் விரும்புவார்கள்.
‘Sri Lanka’s Easter Bombings – Channel 4 Dispatches’ என்ற தலைப்பில் செப்டம்பர் 5 ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சி பலரது கவனத்தையும் ஈர்த்தது எனினும் பலருக்கு அது ஆச்சரியத்தைக் கொடுக்கவில்லை. அசாத் மெளலானா என்பவரின் சாட்சியத்தைத் தவிர சாட்சியத்தில் சொல்லப்பட்ட விடயங்கள் உட்பட பெரும்பாலானவை ஏற்கெனவே கசிந்த விடயங்கள். அசாத் மெளலானா இவற்றை உறுதி செய்திருக்கிறார். இதனால் ‘சனல் 4’ இன் இந்த நிகழ்ச்சி எதிர்பார்த்த அதிர்ச்சியை அளிக்கவில்லை என விமர்சகர்கள் சிலர் கூறியிருக்கிறார்கள்.
அதற்காக ‘சனல் 4’ ஐ நாம் ஒதுக்கிவிட முடியாது. தமிழருக்கு அது நிரம்ப உதவி செய்து வருகிறது. 14 ஜூன் 2011 இல் அது முள்ளிவாய்க்கால் இறுதிப் போர் தொடர்பாக ‘Sri Lanka’s Killing Fields’ என்றொரு விவரணப் படமொன்றை வெளியிட்டிருந்தது. பிரித்தானிய வரலாற்றிலேயே மிகவும் குரூரமான காட்சிகளைக் கொண்ட படமெனக் கூறப்பட்ட இவ்விவரணச் சித்திரம் தமிழரின் நீதிக்கான போராட்டத்தை உலகறியச் செய்தது மட்டுமல்ல அதன் நியாயத்தையும் வலியுறுத்தியிருந்தது. இதற்கு முன்னர் 1984 இல் கம்போடியாவின் கெமெர் ரூஜ் ஆட்சி நடைபெற்றபோது நடைபெற்ற கொடூரங்களை வர்ணிக்கும் திரைப்டமொன்று ‘The Killing Fields’ என்ற பெயரில் வந்து உலகின் மனச்சாட்சியைப் புரட்டிப் போட்டது. அதற்கடுத்த படியாக ‘Sri Lanka’s Killing Fields’ அதே நேர்மையான மனங்களில் அதே வகையான உணர்வுகளைக் கிளப்பியிருப்பினும் உலகம் தமிழருக்கான நீதியை மறுத்துவிட்டது. அப்படியிருந்தும் இவ்விவரணப் படம் ஐ.நா.மனித உரிமைகள் சபையின் 17 ஆவது அமர்வில் காட்டப்பட்டதுடன் அமெரிக்க காங்கிரஸ், மனித உரிமை அமைப்புகள், அவுஸ்திரேலியா, நியூ சீலந்து எனப் பல இடங்களிலும் காட்டப்பட்டது. ஆனாலும் ‘The Killing Fields’ கம்போடிய கொடூரர்களுக்கு வாங்கிக் கொடுத்த தண்டனைகளின் அளவுக்கு ‘Sri Lanka’s Killing Fields’ இனால் எதையும் செய்ய முடியவில்லை. ‘Sri Lanka’s Easter Bombings’ பற்றிய விவரணச் சித்திரம் ‘Sri Lanka’s Killing Fields’ விவரணத்தின் ‘திருத்திய பதிப்பு’ எனக் கூறலாம். அதனால் தயாரிப்பாளர் எதிர்பார்த்த அந்த ‘அதிர்ச்சி’ value கொஞ்சம் குறைவுதான்.
‘Sri Lanka’s Easter Bombings’ விவரணச் சித்திரம் வெளிவந்ததும் நண்பர் ஒருவர் அழைத்து “இதை நாம் குற்றவாளிகளை உலக நீதிமன்றங்களில் ஏற்றுவதற்கு இப்படத்தை நாம் வெற்றிகரமாகப் பயன்படுத்த வேண்டும்” என்றார். உண்மை தான். ஆனால் அதன் எதிர்வினை எப்படி இருக்கும் என்பதை நினைக்க – இது என் கருத்து மட்டுமே – கொஞ்சம் சங்கடமாக இருக்கிறது.
ஆரம்பத்தில் குறிப்பிட்டபடி ராஜபக்சக்களுக்கு அதிர்ஷ்டம் எப்போதும் அருகிலேயே இருந்து வந்திருக்கிறது. சுனாமி, இரட்டைக் கோபுரத் தாக்குதல், உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் என்று அத்தனை அவலங்களையும் வளைத்துப் போட்டு பிணங்களின் மீது நின்று வெற்றிக் கூச்சல் போடுபவர்கள் அவர்கள். இன்னுமொரு அவலம் அவர்களுக்காகக் காத்திருக்கவில்லை என உறுதியாகக் கூறிவிட முடியாது.
‘Sri Lanka’s Easter Bombings’ எப்படி எதிர்வினையைத் தரலாமென நான் நினைப்பது இதுதான். துட்ட கெமுனு எல்லாளனைத் தோற்கடித்ததை இத்தனை நூற்றாண்டுகளாகக் கொண்டாடும் சிங்கள மக்கள் ‘மா வீரனென’ உலகம் அதிசயித்த பிரபாகரனை வென்ற ராஜபக்சக்களை இன்னும் பல நூற்றாண்டுகளுக்குக் கொண்டாடும் என்பதில் சந்தேகமில்லை. விடுதலைப் புலிகள் ‘வெற்றி கொள்ளப்பட முடியாத வீரப்படை’ எனத் தமிழர்கள் புளகாங்கிதமடைந்திருந்த நேரத்தில் அதையே மகிந்தவும் தென்னிலங்கையில் விதைத்திருந்தார். “இப்படியான ஒரு வீரப்படையை முறியடித்து நாட்டை மீளப்பெற்ற மகா வீரன் நான்” என அவர் தன்னையும் தன் குடும்பத்தினரையும் கூடவே தேசிய வீரர்களையும் (National Heroes) மக்களின் மனங்களில் பச்சை குத்தி விட்டார். இவற்றை அகற்றுவது இலகுவான காரியமில்லை.
சிங்கள மக்களின் மனங்களில் இவ்வுணர்வுகள் தொடர்ந்தும் கொப்புளிக்கும் நிலையில் வைத்திருக்க வேண்டுமானால் சிங்கள மக்களுக்கு நிரந்தரமான எதிரியொன்று எப்போதும் இருந்துகொண்டே இருக்க வேண்டும். போர் முடிந்த பின்னர் சர்வதேசங்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை மறுத்து ஏமாற்றியமைக்காக 2015 இல் ஒரு soft Aragalaya மூலம் சர்வதேசங்கள் ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவந்தன. அந்த நல்லாட்சி அரசாங்கத்தைக் கவிழ்த்து ஆட்சியைக் கைப்பற்ற உயிர்த்த ஞாயிறு படுகொலைகள் ராஜபக்சக்களுக்கு கைகொடுத்தன. இதில் இறந்தவர்கள் பெளத்தர்களாக இருக்கக்கூடாது என்பதில் ராஜபக்சக்கள் கவனமாக இருந்திருக்கிறார்கள். இனம், மொழி, மதம் என்ற கூரிய ஆயுதங்கள் எல்லோரிடமுண்டு என்பதை நாம் மறக்கலாகாது.
அப்போ விடுதலைப் புலிகளைத் தோற்கடித்த வீராதி வீரன் கோதாபயவை சிங்கள மக்கள் விரட்டியடித்தார்கள் தானே என்கிறீர்கள். அங்கு தான் வித்தியாசம் இருக்கிறது. ராஜபக்சக்களை விரட்டி அடிப்பதானால் அது சிங்கள மக்களினால் மட்டுமே முடியும். அதுவே தான் யதார்த்தம். அவர்களை அகற்ற புற விசைகளினால் ஒரு போதும் – வெளிப்படையாக – முடியாது. 2015 இல் முதன் முதலாக சிவில் சமூகங்களை நாடு முழுவதிலும் உருவாக்கி அவர்கள் மூலம் சர்வதேசம் ராஜபக்சக்களை அகற்றியது. இதில் எதிரி ‘வெளியிருந்து’ வரவில்லை. மக்களது வெறுப்பு ராஜபக்சக்கள் மீது திரும்பியது. 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் ஒரு புற எதிரியை அவர்களுக்கு காட்டியது. ராஜபக்சக்கள் ஆட்சியைக் கைப்பற்றினர்.
இரண்டாவது தடவையாக ‘அரகாலயா’ அவர்களை வீட்டுக்கு அனுப்பியது. இங்கும் புற எதிரியென ஒரு முகமும் காட்டப்படாமல் சர்வதேசம் கவனமாகக் கையாண்டது. மக்களின் வெறுப்பு ‘மகா வீரனை’ நாட்டை விட்டே துரத்தியது. அடுத்த மீள் வருகைக்காக அவர்கள் மந்திராலோசனை நடத்திக்கொண்டிருந்த வேளை உதவிக்கு வந்திருக்கிறது ‘சனல் 4’.
‘சனல் 4’ நிகழ்ச்சி ஒளிபரப்பாகியதைத் தொடர்ந்து அறிக்கைகளை விடுவதற்குப் பாய்ந்து வந்தவர்களைப் பாருங்கள். முதலில் நாமல் ராஜபக்ச பின்னர் ‘நாடோடி மன்னன்’ கோதாபய. வழக்கமாக மெளனம் காக்கும் கோதாபய இதில் முந்தள்ளப்பட்டிருக்கலாம். காரணம் அவர்தான் ‘தேசிய வீரர்’. விடுதலைப் புலிகளின் முதுகை உடைத்து நாட்டைக் காப்பாற்றிய கோதாபய மாவீரன் மீது எப்படி ‘சனல் 4’ அழுக்குகளை அள்ளி வீச முடியும்? போதாதற்கு விஜேதாச போன்ற பக்கவாத்தியக் காரர்கள் எல்லாம் நாங்களும் இருக்கிறோம் என்ற வகையில் சவுண்டுகளைக் கூட்டுகிறார்கள். ஜனாதிபதி தேர்தல் மூலையில் நிற்கிறது. சிங்கள மக்கள் கரங்களில் விரைவில் புத்த பிக்குகள் தாமரை மொட்டுகளைத் திணிக்கப் போகிறார்கள். இளவரசர் ராஜபக்சவுக்கு மஞ்சம் எங்கு இருக்கிறது என்று யாராவது பார்த்துச் சொல்லுங்கள்.
பாவம் ‘சனல் 4’. அது நல்லதை நினைத்தே செய்திருக்கிறது. ஐ.நா. மனித உரிமைகள் சபை கொடியேறுகிறது. திருவிழாவென்றால் சின்ன மேளம் ஒன்று அவசியம் தானே.
நண்பர் கூறியதைப் போல ‘சனல் 4’ கொண்டு ஓடிவந்த தடியை புலம் பெயர்ந்த தமிழர்கள் கொண்டோடவேண்டும் என்பதைக் கொஞ்சம் யோசித்து செய்யவேண்டும். அது ராஜபக்சக்களுக்கு நாம் கொடுக்கும் குளுகோஸாக இருந்துவிடக்கூடாது. முடிந்தால் இன்னுமொரு அரகாலயா நல்லாகத்தானிருக்கும். உஷ்…எதற்கும் ஜூலி ச்சங்கிடம் கேட்டுச் செய்யுங்கள்.