India

சனத்தொகை: 2023 இல் சீனாவை மீறப் போகும் இந்தியா

இந்தியாவின் இந்த வருட சனத்தொகை 1.4 பில்லியன். இது தொடருமானால் அடுத்த வருடத்தில் (2023) அது சீனாவின் சனத்தொகையையும் மீறி உலகின் அதி சனத்தொகை கூடிய நாடாகப் பிரகடனப்படுத்தப்படும் என நேற்று (ஜூலை 11) வெளியான ஐ.நா. அறிக்கையொன்று தெரிவிக்கிறது.

இந்த வருடம் நவம்பரில் உலக சனத்தொகை 8 பில்லியனை அடையுமெனவும் 2100 இல் அது 10.4 பில்லியனாக அதிகரிக்குமெனவும் இவ்வறிக்கை தெரிவிக்கிறது. 2011 இல் இந்தியா மேற்கொண்ட சனத்தொகைக் கணிப்பின்படி அதன் சனத்தொகை 1.21 பில்லியனாக இருந்தது. ஒவ்வொரு 10 வருடங்களுக்கு ஒரு தடவை இங்கு சனத்தொகை கணிப்பீடு நடைபெறுகிறது. கோவிட் பெருந்தொற்றுக் காரணமாக 2021 இல் இக் கணிப்பீடு நடைபெறவில்லை.

1950 இலிருந்த் உலக சனத்தொகை வளர்ச்சி மிகவும் மந்தமான வேகத்தில் நடைபெற்று வந்தாலும், 2020 இல் அது முதல் தடவையாக 1% த்தால் வீழ்ச்சியடைந்திருந்தது. ஜனவரி 2020 முதல் டிசம்பர் 2021 வரை கோவிட் பெருந்தொற்றினால் இறந்தவர்களின் எண்ணிக்கை 14.9 மில்லியன் என உலக சுகாதார அமைப்பு கணித்திருந்தது.

ஐ.நா. வின் கணிப்பின்படி 2050 வரை சனத்தொகை அதிகரிப்பை எதிர்நோக்கும் நாடுகளாக கொங்கோ, எகிப்து, எதியோப்பியா, இந்தியா, நைஜீரியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ் மற்றும் தன்சானியா ஆகியன இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. அதே வேளை 2022 முதல் 2050 வரை உலகின் 61 நாடுகளில் சனத்தொகை 1% த்தால் குறையலாமெனவும் ஐ.நா.வின் அறிக்கை எதிர்வு கூறுகிறது.