சந்திரிகா பண்டாரநாயக்காவின் மகன் விமுக்தி குமாரதுங்கவை அரசியலில் களமிறக்க முயற்சி?

இலங்கையில் உருவாகிவரும் பன்முகப்பட்ட அரசியல் பேரணியில் ஒரு பிரபல குடும்பத்தைச் சேர்ந்த இளைஞரைக் களமிறக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக சமாகி ஜன பலவேகய பா.உ. குமார வெல்கம தெரிவித்துள்ளார். அது முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்கவின் மகனான விமுக்தி குமாரதுங்காவாக இருக்கலாம் என கொழும்பு வட்டாரங்கள் ஊகம் தெரிவித்துள்ளன.

“அப்பி சிறிலங்கா” என்ற பெயரோடு ஆரம்பிக்கப்படவிருக்கும் இவ்வமைப்பு தற்போதய அரசாங்கத்துக்கு எதிராகக் கட்டியெழுப்பப்பட்டுவரும் கூட்டணி என வெல்கம தெரிவித்துள்ளார்.

இந்று நாவலவில் நடைபெற்ற பலவிதப்பட்ட அரசியல் கட்சிகள், சிவில் சமூக அமைப்புகள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டமொன்றில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுடன் பேசும்போது வெல்கம மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“மிகப் பிரபலமான குடும்பமொன்றிலிருந்து படித்த வாலிபர் ஒருவர், தோன்றவிருக்கும் பேரணியின் எதிர்காலத் தலைவராக வரவிருக்கிறார்” என அவர் மேலும் தெரிவித்தார்.

தற்போதைய சிறீலங்கா சுதந்திரக் கட்சி தவறான பாதையில் செல்கிறது எனக்கூறி மார்ச் 6, 2020 இல், ‘புதிய லங்கா சுதந்திரக் கட்சி (New Lanka Freedom Party (NLFP)) என்னும் பெயருடைய புதிய கட்சியொன்றை வெல்கம தனது தலமையில் ஆரம்பித்திருந்தார். எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்காவின் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு இக் கட்சி இயங்கும் என அவர் அப்போது தெரிவித்திருந்தார்.

புதிய கூட்டணியில் சுதந்திரக்கட்சி, பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளிலுள்ள அதிருப்தியாளர்கள் இணைந்துகொள்வார்கள் எனத் தான் எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்தார்.

விமுக்தி குமாரதுங்கவை அரசியலி ஈடுபட வைக்க முன்னர் எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத் தக்கது. தற்போது அவர் பிரித்தானியாவில் விலங்கு வைத்தியராகக் கடமையாற்றி வருகிறார்.