சந்திரிகாவின் அங்கத்துவத்தை தற்காலிகமாக ஒத்திவைக்க சிறீலங்கா சுதந்திரக் கட்சி முடிவு
சிறீலங்கா சுதந்திரக் கட்சி அதன் முன்னாள தலைவியும் முனாள் ஜனாதிபதியுமான சந்திரிகா குமாரதுங்கவைக் கட்சியிலிருந்து தற்காலிகமாக விலத்திவைக்கத் தீர்மானித்துள்ளது. இவருடன் கூடவே சமீபத்தில் சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சி அரசில் பதவிகளைப் பெற்ற அங்கத்தவர்களையும் தற்காலிகமாக விலத்திவைக்க கட்சி முடிவு செய்துள்ளது.
நேற்றிரவு (திங்கள்) கூடிய மத்தியகுழுக் கூட்டத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கமைய இம்முடிவு எடுக்கப்பட்டதாக கட்சியின் மூத்த உதவித் தலைவர் பேராசிரியர் றோஹண லக்ஸ்மன் பியதாச தெரிவித்திருக்கிறார். இதன் காரணமாக கட்சியின் ஆயுட்காலக் காப்பாளராக இருக்கும் குமாரதுங்கவின் பதவியும் பறிபோய்விடும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இதே வேளை ரணில் விக்கிரமசிங்க அரசில் பதவிகளைப் பெற்றிருக்கும் அமைச்சர்கள் நிமால் சிறீபால டிசில்வா, மஹிந்த அமரவீரா, லசந்தா அழகியவண்ண, ரஞ்சித் சியம்பலப்பிட்டிய, சாமர சம்பத் தசநாயக்கா மற்றும் ஜகத் புஷ்பகுமார ஆகியோர் சுதந்திரக் கட்சியில் வகித்த பதவிகளும் பறிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
கொல்லப்பட்ட பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்காவின் மகளான சந்திரிகா குமாரதுங்க 1994 முதல் 2006 வரை சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக இருந்தார். 2015 இல் முன்னாள் அமைச்சரான மைத்திரிபால சிறீசேனவை ஜனாதிபதியாக்குவதற்கு குமாரதுங்க முன்னின்று உழைத்திருந்தார். இருப்பினும் 2019 இல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் கோதாபய ராஜபக்சவுக்கு ஆதரவளித்தமைக்காகவும், 2020 பாராளுமன்றத் தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சியுடன் கூட்டு சேர்ந்தமைக்காகவும் குமாரதுங்கா சிறீசேனாவைப் பகிரங்கமாக விமர்சித்து வந்திருந்தார். தற்போது கட்சித் தலைவராக சிறீசேனா இருக்கிறார்.
இருதரபினரிடையேயும் நிலவிவந்த பகை சமீபத்தில் நடைபெற்ற இறந்த பண்டாரநாயக்கா குடும்ப அங்கத்தவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட ஞாபகார்த்த விழாவோடு உச்சத்துக்கு வந்திருந்தது. மறைந்த எஸ்.டலிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கா, சிறிமாவோ பண்டாரநாயக்கா மற்றும் அனுரா பண்டாரநாயக்கா ஆகியோரை நினைவுகூரும் நிகழ்வொன்றை கொரகொல்ல, நித்தம்புவவில் இருக்கும் பண்டாரநாயக்கா நினைவுத்தூபியருகே கொண்டாடுவதற்கு குமாரதுங்கவும் அவரது சகோதரி சுனீத்திரா பண்டாரநாயக்கவும் ஏற்பாடு செய்திருந்தார்கள். ஆனாலும் சிறீசேன தலைமையிலான கட்சி அங்கத்தவர்கள் கொழும்பிலுள்ள பண்டாரநாயக்கா ஞாபகார்த்த மண்டபத்தில் பிறிதொரு விழாவைக் கொண்டாடியிருக்கிறார்கள் எனப்படுகிறது.
சமீபத்தில், பல மூத்த அங்கத்தவர்களின் எதிர்ப்பின் மத்தியிலும் சுதந்திரக் கட்சியின் யாப்புத் திருத்தம் நிறைவேற்றப்பட்டிருந்தது. இத் திருத்தத்தின் மூலம் கட்சியின் தலைவரது அதிகாரங்கள் பலப்படுத்தப்படிருந்தன. இதன் பிரகாரம் கட்சியின் அதிகாரிகளையோ, அங்கத்தவர்களையோ தன்னிச்சையாக நீக்கும் அதிகாரம் கட்சித் தலைவருக்கு வழங்கப்பட்டிருந்தது.