சந்திரயான் 2 | விக்ரம் இறங்கு கலம் கண்டுபிடிக்கப்பட்டது!
தொடர்பை மீளிணைக்க விஞ்ஞானிகள் முயற்சி
சந்திரனில் தரைபதிக்கு முன்னரே ‘காணாமற் போன’ விக்ரம் இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ‘இஸ்ரோ’ விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள். சந்திரனைச் சுற்றிக்கொண்டிருக்கும் தாய்க்கலம், சந்திரனின் தரையில் கிடக்கும் ‘விக்ரத்தைப்’ படம்பிடித்து அனுப்பியிருக்கிறது.

‘இந்தியா ருடே’ பத்திரிகைக்கு வழங்கிய பிரத்தியேக பேட்டியின்போது தலைமை விஞ்ஞானி கே.சிவன் இதைத் தெரிவித்திருப்பதாக அப்பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
“விக்ரம் இறங்கு கலம் சந்திரனின் தரையில் விழுந்திருக்கும் இடத்தை நாம் கண்டுபிடித்திருக்கிறோம். எத்ரிபார்த்தது போல அது மென்மையான இறங்குதலைச் (soft landing) செய்யமுடியவில்லை. அதனுடனான தொடர்பை இன்னும் ஏற்படுத்த முடியவில்லை. விரைவிலது நடைபெறும்” என கே.சிவன் தெரிவித்தார்.
சந்திரயான் 2 மிகவும் ஆரோக்கியமாக சந்திரனைச் சுற்றி அதன் முன் தீர்மானிக்கப்பட்ட பாதையில் பயணித்துக்கொண்டிருக்கிறது. அதில் பொருத்தப்பட்ட ‘வெப்ப நுகர்வு’ (thermal imaging) ஒளிப்படக் கருவி இப்படத்தை எடுத்திருக்கிறது. இக் கருவி மிகவும் துல்லியமான படங்களை எடுக்கக்கூடியது.
அடுத்த 14 நாட்களுக்குள் விகத்துடனான தொடர்புகளை மீள எற்படுத்துவதற்கான சகல முயற்சிகளையும் இஸ்ரோ விஞ்ஞானிகள் மேற்கொண்டுவருவதாக அறியப்படுகிறது.
விக்ரம் இறங்கும்போது எதிர்பார்க்கப்பட்ட வேகத்தைவிட அதிகமான வேகத்துடன் இறங்கியதாலோ அல்லது அதன் நான்கு கால்களும் முழுமையாகத் தொழிற்படாத காரணத்தினாலோ சில வேளைகளில் விக்ரம் தரையோடு மோதுப்பட்டிருக்கவும் வாய்ப்புண்டு என சில விண்வெளி நிபுணர்கள் தெரிவித்திருக்கிறார்கள். ஈர்ப்பு விசையைக் கணித்து அதன்படி ஏவுகணைகளைச் சரியாக இயக்குவதால் தான் மென்மையான தரையிறக்கத்தை மேற்கொள்ளலாம் என்பது அவர்களின் கருத்து.