சந்திக் கலம்பகம்: கனடாவின் அடுத்த பிரதமர் ஜான் ஷரே (Jean Charest) ? – பட்சி சொல்கிறது!
மாயமான்
அடடா என்ன தலைப்பு. இப்படி ஒரு கலம்பகத்தைச் சந்தியில் வைத்து ஆரம்பித்தால் மக்கள் கவனித்துவிடுவார்களா? வாய்ப்பே இல்லை ராஜா என்கிறீர்கள். கனடிய தேர்தல் ஏதோ நாளை மறுநாள் நடக்கவிருப்பது போல. சரி இருக்கட்டுமே. இரண்டு மாதமென்ன இரண்டு வருடங்கள் எடுத்தாலும் அடுத்த ஆட்சி கன்சர்வேட்டிவ் கட்சி என்று பட்சி சொல்லி விட்டது. தயாராக வேண்டியதுதானே. நம்ம ‘கொத்து ரொட்டி மன்னன்’ ஊரோட ஓடும் ட்றூடோவைத் துரத்த வல்லவர் வேறு யார் இருக்கிறார்கள்? கன்சர்வேட்டிவ் கட்சிக்கும் எனக்கும் எந்தவிதமான உடன்பாடும் இல்லை. ஆனால் அல்பேர்ட்டாவின் ‘சிவப்புக் கழுத்துக்காரர்’ அடுத்த பிரதமராக வந்துவிடக்கூடாது என்பதில் மட்டுமே எனக்கு அக்கறையுண்டு.
கடந்த சில நாட்களாக கனடிய தொலைக்காட்சிகளில் அவதானித்திருப்பீர்கள். கனடிய கன்சர்வேட்டிவ் கட்சிக்கான அடுத்த தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கென விவாதப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. ஆறு பேர் தர்க்கித்தார்கள். கோவில்களில் வெளி வீதிச் சமா போல வெளுத்து வாங்கினார்கள். இவர்களில் இருவர் நமக்குப் பரிச்சயமானவர்கள். பிரம்டன் நகரபிதா பற்றிக் பிரவுண் மற்றது முன்னாள் கியூபெக் முதலமைச்சர் ஜான் ஷரே. மற்றவர்களில் பியெர் பொலியெவ் என்பவர் தற்போது பாராளுமன்ற உறுப்பினராக இருப்பவர். லெஸ்லின் லூவிஸ் ஒர் கறுப்பினப் பெண் என்ற முறையில் நமது அவதானத்தைப் பெறுபவர். மற்றவர்கள் பாவம். மொத்தம் ஆறு பேர் ஒரு நாற்காலிக்காகச் சண்டை பிடிக்கிறார்கள். நாற்காலியைக் கைப்பற்றுபவர் கனடாவின் அடுதத பிரதமராகும் வாய்ப்பிருக்கிறது எனப் பட்சி எப்போதோ சொல்லிவிட்டது. ஏன் எப்படி என்பதை நீங்கள் பட்சியிடமே கேட்டுக்கொள்ளுங்கள்.
ஷரே, பிரவுண் இருவரையும் தெரியாதவர்களுக்கு ஒரு வரலாற்று வகுப்பு.
ஜான் ஷரே கியூபெக் மாகாணத்தைச் சேர்ந்தவர். தமிழர் நண்பரான பிரதமர் மல்றோனியின் அமைச்சரவையில் உதவிப் பிரதமராக இருந்தவர். 1986 இல் திக்குத் தெரியாத அத்லாந்திக் கடலில் அமிழப்போகும் படகுகளில் உயிருக்காகப் போராடிக்கொண்டிருந்த 156 தமிழர்களைத் ‘திருப்பி அனுப்புங்கள்’ என்று கோசமிட்ட போதும் “அவர்கள் இங்குதான் வாழப் போகிறார்கள்” என்று ஓங்கிக் குரல் கொடுத்தவர்கள் பிரதமர் மல்றோனியும், ஜான் ஷரேயும். அந்த ஆபத்பாந்தவர் ஜான் ஷரே இப்போது பிரதமராக வர விரும்புகிறார்.
அது மட்டுமல்ல ஜான் ஷரே கனடாவைத் தோழிற் சுமந்தவர். கியூபெக் மாகாணத்தைச் சேர்ந்த அவர் அம்மாகாணம் கனடாவிலிருந்து பிரிந்துவிடக்கூடாது என்பதற்காக மாகாண லிபரல் கட்சிக்குத் தலைவராகி மாகாண மக்களிடையே பிரசாரம் செய்து மயிரிழையில் அதைக் காப்பாற்றியவர். அப்போது மாகாண மக்கள் பிரிந்துபோய்விடுவோம் என்று வாக்களித்திருந்தால் கியூபெக் இன்று ஒரு தனிநாடு. அதைத் தடுத்து நிறுத்திய போராளி ஷரே. தென்னாபிரிக்காவின் நெல்சன் மண்டேலாவுக்கு விடுதலை பெற்றுத்தருவதற்காகப் போராடிவர் ஷரே என்பது பலருக்கும் தெரிந்திருக்க நியாயமில்லை. கட்சி கன்சர்வேட்டிவ் ஆனாலும் முற்போக்கானவர். கனடாவின் பிரதமராக வருவதற்கு அவருக்கு அத்தனை தகுதிகளும் உண்டு.
சில நாட்களுக்கு முன்னர் அவர் ரொறோண்டோவில் தமிழ் மக்களைச் சந்தித்திருந்தார். அச்சந்திப்பில் கலந்துகொள்ளும் சந்தர்ப்பம் எனக்கும் கிட்டியது. எகத்தாளமில்லாத, பண்பான எந்த நேரமும் நகைச்சுவையோடு பேசும் ஒரு மனிதர். தமிழ் மக்கள் வரலாற்றை விரல் நுனியில் வைத்திருந்தார். அவரது தாயார் அயர்லாந்தில் பஞ்சத்துக்குத் தப்பிக் கனடா வந்தவர். கனடியத் தமிழரது வரவும், கடும் உழைப்பும், விசுவாசமும், நன்றியும் எம்மீது கொண்டிருக்கும் அவரது மதிப்பை உயர்த்தியிருந்ததாகப் பட்டது. அவர் பிறப்பில் அரசியல்வாதியாகப் பிறந்தவர் அல்லர் மனித் நேயத்தால் உந்தப்பட்டு அரசியல்வாதியாகியவர். என்னவோ அவர் பிரதமராகினால் கனடாவுக்கு மட்டுமல்ல இலங்கைத் தமிழருக்கும் சேர்த்தே பிரதமராக இருப்பார் எனப் பட்டது. இது பட்சிக்கும் விளங்கியிருக்க வேண்டும்.
பற்றிக் பிரவுண் ஒரு கனடிய வெள்ளையராக இருந்தாலும் அவர் தப்பிப் பிறந்தவர். தான் ஒரு தமிழரென்றே feel பண்ணுபவர். அவரை எனக்கு நீண்டகாலமாகத் தெரியும். வயதில் இளையவர். அயராத உழைப்பாளி. தான் பிரதமராக வந்தால் விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குவேன் என்று சபதமிட்டிருக்கிறார். அது நம் மக்களை உருக்கி எடுப்பது தெரிகிறது. ஆனால் அது எவ்வளவு தூரம் சாத்தியமாகுமென்பதில் பலருக்குப் போலவே பட்சிக்கும் உடன்பாடில்லை. அதற்காக அவர் பிரதமராக வரக்கூடாது என்பதல்ல. ஆனால் தமிழருக்கும், சீக்கியருக்கும் தெரிந்த அளவுக்கு நாடு தழுவிய ரீதியில் அவரைப் பலருக்கும் தெரியாது. ‘பிரவுண் நிற’ மக்களுடன் அவர் அதிகம் நெருக்கமாக இருக்கிறார் என்பதனால் பல வெள்ளைகளுக்குக் கடுப்பு என்பதையும் பட்சி அவதானித்ததாகக் கூறுகிறது. எனவே இத் தலைமைப் போட்டியில் அவர் வென்றாலும் பொதுத் தேர்தல் என்று வரும்போது அவர் பிரதமராக வருவதற்கான சாத்தியம் அதிகம் இல்லை எனவே கூறப்படுகிறது.
இந்த இரண்டு பேரும் தமிழருக்கு வேண்டியவர்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் கட்சித் தலைவராக வந்தால் மட்டும் எமக்கு அது உதவியாக இருக்கப் போவதில்லை. பிரதமராக வேண்டும். இலங்கையில் வாடும் தமிழ்பேசும் மக்கள் நீதியாகவும், சமத்துவமாகவும், சமாதானமாகவும் வாழ சர்வதேசங்களையும் இணைத்து எமக்காகக் குரல் கொடுக்க வல்ல ஒருவரே கனடாவின் பிரதமராக இருக்க வேண்டும்.
ஜான் ஷரேயுடனான சந்திப்பின்போது இலங்கை அரசியல் பற்றியும், கனடியத் தமிழர் பற்றியும் பல கேள்விகள் கேட்கப்பட்டன. அவரது பெரும்பாலான பதில்கள் தர்க்க ரீதியாக இருந்தன. சர்வதேச அரசியலையும், சட்டங்களையும், ஸ்தாபனங்களையும், நாடுகளின் செயற்படு வரம்புகளையும் கொண்டதாக அவை இருந்தன. சாத்தியமற்ற அரசியல் வாக்குறுதிகளை அவர் அள்ளி வீசவில்லை. ஆனால் இறுதிப் போரின்போது நடைபெற்ற இனப்படுகொலை, மனிதத்திற்கெதிரான குற்றங்கள், போர்க்குற்றங்கள் ஆகியன பற்றி ஆழமான அறிவைக் கொண்டிருப்பது தெரிந்தது. குரலில் உறுதியும் தெரிந்தது. தானே அடுத்த பிரதமர் என்பதை ஆழமாகப் பதித்துவிட்டுச் சென்றார்.
இந்த இருவரிலும் ஷரே வயதில் மூத்தவர், அனுபவமுள்ளவர், அளந்து வாய் திறப்பவர். அரசியலுக்கு அது அவசியம். பிரவுண் இவற்றுக்கு நேரெதிரானவர். ஷரே குடும்பத்தில் மூத்த அண்ணன் போன்றவர். பொறுப்புள்ளவர். பிரவுண் குடும்பத்தில் கடைசிக்கு மூத்தவர் போன்றவர். கொஞ்சம் துடி துடிப்பானவர். அதனால் வம்பு தும்பில் மாட்டப்படக்கூடியவர் – என்று நான் சொல்லவில்லை பட்சி சொன்னது. நானும் அதை ஆமோதிக்கிறேன்.
அது மட்டுமல்ல கியூபெக்கில் கணிசமான வாக்குகளைப் பெறாமல் கனடாவின் பிரதமராக வருவது கடினம். ஜான் ஷரேயினால் மட்டுமே அதைச் சாதிக்க முடியும். எனவே தர்க்கரீதியாக அவரையே பட்சி endorse பண்ணுகிறது.
மற்ற நால்வர்களிலும், லெஸ்லின் லூவிஸ் ஒரு ‘நம்ம பெண்’ என்ற feeling வந்தாலும் அவராலும் பிரதமராக முடியாது. கனடா இன்னும் நிறப்பிரிகைத் தத்துவத்தைக் கைவிடவில்லை. பியர் பொலியேவ் துரும்பரின் பிடி பிடிப்பவர். மிகையான arrogance தெரிகிறது. தீவிர வலதுசாரிக் கொள்கையாளர். அவருக்கென்று பல ஆதரவாளர் மேற்கு கனடாவில் இருக்கலாம். ஏனைய பகுதிகளில் அவரது ஆதரவு மத்திமம். கெட்டித்தனம் இருக்கலாம் ஆனால் நல்ல தலைவருக்குரிய பண்புகள் அவரிடமில்லை என்பது பட்சியின் அபிப்பிராயம்.
மற்ற இருவர்களும், பாவம் நல்லவர்கள் போல் தெரிகிறது. புதியவர்கள். கடுமையாக உழைத்தால் முன்னேற இடமுண்டு எனப் பட்சி சொல்கிறது.
எனவே பட்சி சாத்திரம் உண்மையானால் ஷரே தான் வெல்வார் போலப் படுகிறது. இன்னும் நாட்கள் இருக்கிறது.