சந்திக்கு வரும் மஹிந்த – கோதா இழுபறி
19 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த மஹிந்த அவசரம்
நாட்டின் குழப்பநிலையைத் தணிப்பதற்கு வழியேதும் கிடைக்காமல் திணறும் ஜனாதிபதி கோதாபய ராஜபக்சவுக்கும் ஏற்கெனவே அதிருப்தியில் இருக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்குமிடையில் நிலவும் கருத்து வேறுபாடு மேலும் தீவிரமடைந்து வருவதாக அறியப்படுகிறது.
வீதிப் போராட்டங்களை முன்னெடுத்துவரும் இளையோரைத் திருப்திப்படுத்துவதற்கென ஜனாதிபதி, கடந்த வாரம் அமைச்சரவையைக் கலைத்துவிட்டு ‘இளைய’ தலைமுறையினரை அமைச்சர்களாக்கினார் எனக் கூறப்பட்டது. இதில் மஹிந்தவைத் தவிர வேறு ஒரு ராஜபக்சக்களும் இடம்பெறவில்லை. கட்சியில் கோதாபயவிற்கு நெருக்கமானவர்களுக்கே அமைச்சர் பதவிகள் கொடுக்கப்பட்டன. இப் புதிய அமைச்சரவையின் பதவியேற்பு வைபவத்திற்கு மஹிந்த சமூகமளிக்கவில்லை என்பதிலிருந்தே மஹிந்த – கோதா அதிருப்தி வெளியில் புலப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து “மக்களின் விருப்பப்படி 20 ஆவது திருத்தத்தை ஒழித்துவிட்டு 19 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த நான் தயார்” என மஹிந்த அறிவித்திருந்தார்.
தற்போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவும் 19 ஆவது திருத்தத்தை மீள அறிமுகப்படுத்தும் பிரேரணையைச் சபையில் சமர்ப்பிக்கத் தயார் என அறிவித்திருக்கும் நிலையில் மஹிந்த ராஜபக்ச தானும் 19 ஆவது திருத்தத்திற்கான பிரேரணையை முன்மொழியப்போவதாகத் தெரிவித்துள்ளார். இதே நிலையில் கோதாபயவுக்கு ஆதரவான 13 SLPP உறுப்பினர்கள் மஹிந்தவைப் பிரதமர் பதவியிலிருந்து இறக்கிவிட்டு வேறு கட்சிகளிலிருந்து ஒருவரைப் பிரதமராக்கும்படி ஜனாதிபதியிடம் கோரிக்கையை முன்வைத்துள்ளனர். ஜனாதிபதி இதைச் செய்ய மறுக்கும் பட்சத்தில் தாம் கட்சியிலிருந்து விலகிச் சுயாதீன உறுப்பினர்களாக இருக்கப் போவதாகத் தெரிவித்துள்ளார்கள். அதே வேளை கட்சியிலுள்ள அதிருப்தியாளர்களில் சிலர் ஜனாதிபதி பதவி விலக வேண்டுமென்று குரலெழுப்பி வருகின்றனர்.
இதற்கிடையில் 19 ஆவது திருத்தத்தை மீளக் கொண்டு வரும் திட்டத்திற்கு தான் ஆதரவளிப்பதாகவும் அதற்கு முன்னர் அனைத்துக் கட்சித் தலைவர்களும் ஒன்றுகூடி நாட்டின் குழப்ப நிலையைத் தீர்க்க உடனடியான வழிமுறைகளைத் தேடுவதற்கு முயற்சிகளை எடுக்கவேண்டுமெனவும் ரணில் விக்கிரமசிங்க கேட்டுள்ளார். இதற்கிணங்க இன்றும் நாளையும் கட்சித் தலைவர்கள் கூடவுள்ளனர் எனவும் அதில் முன்வைக்கப்படும் பிரேரணைகளில் ஒன்றாக “கோதாபய பதவி விலகுதல்” இருக்குமெனவும் கூறப்படுகிறது. இந் நிபந்தனைக்கு அனைத்துக் கட்சித் தலைவர்களும் இணங்கும் பட்சத்தில் இம் முடிவை சபாநாயகர் மூலம் ஜனாதிபதிக்கு அறிவிக்கவேண்டும் என்று கட்சித் தலைவர்கள் விரும்புவதாகவும் அறியப்படுகிறது.
இக் கோரிக்கைக்கு ஜனாதிபதி இணங்காத பட்சத்தில் மஹிந்த அதிருப்தியாளர்களின் கோரிக்கைக்கு இணங்கி கோதபய, மஹிந்தவைப் பிரதமர் பதவியிலிருந்து அகற்றிவிட்டுப் புதிய பிரதமர் ஒருவரை நியமிக்கலாமெனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அமைச்சரவை நியமனங்கள் தொடர்பாக கோதாபய ராஜபக்சவுக்கு கட்சியில் ஆதரவு குறைவாக இருப்பதனாலும் 19 ஆவது திருத்தம் தொடர்பாக மஹிந்த-சஜித் அணிகளுக்கிடையே இணக்கம் காணப்படுவதனாலும், 19 ஆவது திருத்தம் மூலம் போராட்டக்காரரைத் திருப்திபடுத்த முடியுமென சகல தரப்பினரும் எண்ணுவதாலும் இந்த இழுபறியில் மஹிந்த அணியே வெற்றி பெறுவதற்கான சாத்தியக்கூறூகள் உண்டு என அவதானிகள் தெரிவிக்கிறார்கள். மாறாக இவ்விழுபறியில் கோதாபய அணி வெற்ற்பெற்று மஹிந்த பிரதமர் பதிவியிலிருந்து நீக்கப்படுவாரானால் சஜித் அணி ஏற்கெனவே திட்டமிட்டு வரும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு ஆதரவளிப்பதன் மூலம் ஆட்சிக் கவிழ்ப்பொன்று ஏற்படுவதற்கும் சாத்தியங்கள் உண்டு எனக் கொழும்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.