Spread the love

ஜூலை 19, 2020: மேற்குத் தொடர்ச்சி மலைக்காடுகளில் ஆட்சி புரிந்து 2004 இல் பொலிசாரால் வஞ்சகமான முறையில் கொல்லப்பட்ட சந்தனக்கடத்தல் வீரப்பனின் மகள் வித்யா தமிழ்நாடு பா.ஜ.க. இளையோர் அணிக்கு உப தலைவராகத் தெரியப்பட்டிருக்கிறார்.

29 வயதுடைய சட்டக்கல்லூரிப் பட்டதாரியான வித்யா கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ‘குழந்தைகளுக்கான பள்ளி’ என்றொரு தன்னார்வ அமைப்பை நடத்தி வருகிறார்.

காவல்துறை, வன இலாகா அதிகாரிகள் உட்பட 150 பேருக்கு மேல் கொலைசெய்யப்பட்டமை, 100 யானைகளுக்கு மேல் கொல்லப்பட்டமை, சந்தன மரங்களைக் கடத்தியமை எனப் பல குற்றச்சாட்டுகளைக் கொண்ட ‘சந்தனக் கடத்தல்’ வீரப்பன் 2004 இல் பொலிஸ் என்கவுண்டரில் கொல்லப்பட்டிருந்தார். 2000 ஆண்டில் கன்னட திரைப்பட நடிகர் ராஜ்குமாரைக் கடத்தியதன் மூலம் வீரப்பனின் பெயர் உலகளவில் பிரபலமாகியிருந்தது.

தமிழ்நாட்டில் நிலைகொள்வதற்குச் சிரமப்படும் பாரதிய ஜனதாக் கட்சிக்கு ‘அறியப்பட்ட பெயர்’ அவசியமாகவிருந்தது. ஏற்கெனவே சமூக சேவையில் ஈடுபட்டு வரும் வித்யா அக் கட்சிக்கு இலகுவான தெரிவாக அமைந்துவிட்டாள். கடந்த பெப்ரவரி மாதமே கட்சியில் இணைந்த அவளுக்கு தமிழ்நாடு இளையோர் அணியின் உபதலைவிப் பதவி வழங்கப்பட்டிருக்கிறது.

“நான் எந்தவொரு சமூகத்தின் பிரதிநிதியுமல்ல. நான் ‘மனிதத்தில்’ நம்பிக்கை கொண்டவள்” என்கிறாள் வித்யா.



தந்தையைப் பற்றிய பேச்சு எழுந்தபோது, “நான் அவரை ஒரே ஒரு தடவை சந்தித்திருக்கிறேன். கர்நாடகாவில் இருக்கும் ஹனூரில் உள்ள கோபிநாதம் கிராமத்தில் நான் அப்போது எனது தாத்தாவின் வீட்டிற்கு விடுமுறையில் போயிருந்தேன். அப்போது எனக்கு ஆறு அல்லது ஏழு வயதிருக்கலாம். நான் விளையாடிக்கொண்டிருந்த இடத்திற்கு அப்பா வந்தார். சில நிமிடங்கள் பேசினார். “நன்றாகப் படித்து டாக்டராக வந்து மக்களுக்குச் சேவை செய்” எனக் கூறிவிட்டுச் சென்றுவிட்டார்” என்கிறார் வித்யா.

சந்தனக் கடத்தல் வீரப்பன் மகள் பா.ஜ.க. இளையோர் அணித் தலைவியாகிறார் 1
சந்தனக் கடத்தல் வீரப்பன்

“எனக்கு உலகம் தெரிந்தபோது அவரது வாழ்வு முடிந்து விட்டது. அவர் வாழ்ந்த சூழல் அவரைத் தவறான பாதையில் செலுத்தியிருக்கிறது. ஆனால் அவரைப் பற்றி நான் அறிந்த சில விடயங்கள் என்னைச் சமூக சேவைகளைச் செய்யத் தூண்டியது” என அவர் மேலும் தெரிவித்தார்.

வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த வீரப்பன இன்னும் அச்சமூகத்தினரால் ‘ றொபின் ஹூட்’ நிலையில் வைத்து மதிக்கப்படுகிறார். அவரது மனைவி முத்துலட்சுமி, விதயாவின் தாய், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் அங்கத்தவராக இருக்கிறார். இது பாட்டாளி மக்கள் கட்சியின் ஒரு அணியாகும்.

Print Friendly, PDF & Email
Related:  மும்மொழித் திட்டத்தைத் தமிழ்நாடு ஏற்றுக்கொள்ளாது - முதலமைச்சர் எடப்பாடி உறுதி