Sports

சதுரங்கம்: ‘கிராண்ட்மாஸ்டர்’ ஆகும் வைஷாலி

கடந்த வெள்ளியன்று ஸ்பெயினில் நடைபெற்ற பெண்களுக்கான IV El Llobregat Open சதுரங்கப் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆர். வைஷாலி Grandmaster தரத்தை எட்டியதன் மூலம் தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்த்திருக்கிறார். துருக்கியைச் சேர்ந்த FM Tamer Tarik Seibes என்பவரை இரண்டாவது ஆட்டத்தின்போது தோற்கடித்ததன் மூலம் 22 வயதுடைய வைஷாலி ‘கிராண்ட்மாஸ்டர்’ பட்டத்தை வென்றுள்ளார். இப்பட்டத்தைப் பெறும் தமிழ்நாட்டின் முதலாவதும் இந்தியாவின் மூன்றாவதுமான பெண் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்பட்டத்தைத் தட்டிக்கொண்டதன் மூலம் வைஷாலி அவருடைய சகோதரரும் கிராண்ட்மாஸ்டருமான பிரக்ஞ்ஞானந்தாவுடன் இணைந்து உலகின் முதலாவது ‘கிராண்ட்மாஸ்டர்’ சகோதரர்கள் என்ற சாதனையையும் படைத்திருக்கிறார்.

கடந்த ஆகஸ்ட் இல் நடைபெற்ற 2023 ஆம் ஆண்டிற்கான FIDE உலகக் கிண்ணப் போட்டியில் பிரக்ஞ்ஞானந்தா உலகின் முதலாமிடத்திலிருக்கும் மக்னஸ் கார்ள்ஸனுடன் ஆடியிர்ந்தார் எனினும் அவரைத் தோற்கடிக்க முடியாது போனது. பின்னர் உலகின் இரண்டாம், மூன்றாம் இடங்களில் இருந்த இக்காறு நக்கமாறு மற்றும் ஃபபியானோ கறுவானா ஆகியோரைத் தோற்கடித்ததன் மூலம் உலகின் இரண்டாவது சதுரங்க வல்லுனர் என்ற இடத்தைப் பிடித்துள்ளார்.

வைஷாலியின் தந்தை ரமேஷ்பாபு சென்னையில் வங்கியொன்றில் பணிபுரிகிறார். வைஷாலியே முதலில் சதுரங்கத்தில் ஆர்வம் காட்டியிருந்தாலும் அப்போது மூன்றரை வயதாகவிருந்த பிரக்ஞ்ஞானந்தாவும் சதுரங்கத்தில் ஆர்வம் காட்டத் தொடங்கியதாகவும் இருவரையும் சதுரங்க வகுப்புகளுக்கு அனுப்புவதற்கான வசதிகள் இல்லாமல் இருந்தும்கூட சதுரங்க விளையாட்டில் இருவரும் காட்டிய ஆர்வம் காரணமாகத் தானும் மனைவியும் சிரமங்களையும் தாங்கிக்கொண்டு வகுப்புக்களுக்கு அவர்களை அனுப்பியதாகவும் ரமேஷ்பாபு கூறுகிறார்.

வைஷாலி (22), பிரக்ஞ்ஞானந்தா (18) ஆகியோரின் சாதனைகளை மெச்சி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.