சதுரங்கம்: உலக வீரர் மக்னஸ் கார்ள்செனைத் தோற்கடித்த தமிழ்ச் சிறுவன் ரமேஷ்பாபு

கடந்த ஞாயிறன்று (பெப்ரவரி 20) நடைபெற்ற ‘எயர்திங்ஸ் மாஸ்டர்ஸ்’ (Airthings Masters) சதுரங்கப் போட்டியில் உலகின் முதலாவது இடத்திலுள்ள மக்னஸ் கார்ள்செனைத் தோற்கடித்து வெற்றிவாகை சூடியுள்ளார் தமிழ்நாட்டைச் சேர்ந்த 16 வயது தமிழ்ச் சிறுவன் ரமேஷ்பாபு பிரக்னானந்தா.
2013 முதல், 5 தடவைகள் உலக சம்பியனாக இருந்துவந்த கார்ள்செனைத் தோற்கடித்ததன் மூலம் பிரகா என அழைக்கப்படும் பிரக்னானந்தா அதி வயது குறைந்த உலக சதுரங்க சம்பியனாக அறிமுகமாகிறார். இவ்வெற்றி மூலம் நோர்வேயைச் சேர்ந்த கார்ள்சென் என்ற கிராண்ட் மாஸ்டரை வென்ற இந்தியாவின் மூன்றாவது ‘கிராண்ட் மாஸ்டர்’ என்ற பெருமையும் அவருக்குக் கிடைக்கிறது. இதற்கு முன்னர் விஸ்வநாதன் ஆனந்த், பெண்டாலா ஹரிகிரிஷ்ணா ஆகியோர் இவ் விருதை வென்றிருந்தார்கள்.
சென்னையைச் சேர்ந்த பிரகாவின் தந்த ரமேஷ்பாபு போலியோ நோயினால் பாதிக்கப்பட்டவர். தாயார் நாகலக்ஷ்மி. மூத்த சகோதரியான வைசாலியும் ஒரு சர்வதேச மாஸ்டர் தரத்திலுள்ள சதுரங்க ஆட்டாக்காரர். தாயாரே இருவரையும் இவ்வாட்டப் பயிற்சிக்கு அழைத்துச் செல்வது வழக்கம்.
பிரகாவுக்கு 3 வயதாகவிருக்கும்போதே சகோதரியுடன் சேர்ந்து அவரது சதுரங்க ஆட்டத்தில் பங்குபற்ற ஆர்வம் காட்டியதாக ரமேஷ்பாபு கூறுகிறார். இருப்பினும் அக்காவைப்போல் அவரும் சதுரங்கத்தில் வாழ்க்கையை அர்ப்பணிப்பதை தான் அதிகம் விரும்பவில்லை என ரமேஷ்பாபு தெரிவித்துள்ளார்.
2013 இல், அவரது 7 ஆவது வயதில் 8 வயதுக்குக் கீழான பிரிவில் உலக இளைஞர் சதுரங்க சம்பியனாக வந்ததிலிருந்து தொடர்ச்சியாக அவர் வருடா வருடம் பற்பல விருதுகளையும் சாதனைகளையும் வென்று குவித்து வருகிறார். உலக சம்பியனான கிராண்ட்மாஸ்டர் கார்ள்சனைத் தோற்கடித்ததன் மூலம் பிரகாவுக்கு முடிசூட்டப்பட்டிருக்கிறது.