ArticlesColumnsசிவதாசன்

சதி(ர்) கொண்டாடும் சிறீலங்கா

சிறீலங்காவிலும் ஒரு ‘ஒக்டோபர் புரட்சி’ நடைபெற்றிருக்கிறது. அதன் அதிபர் மைத்திரிபால சிறீசேன திடீரென்று எந்தவித சலசலப்புமில்லாமல் தனது பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்கவைப் பதவி நீக்கம் செய்ததுமல்லாமல் சகல அமைச்சரவைகளையும் கலைத்து விட்டு புதிய அமைச்சரவையை நியமித்திருக்கிறார். அதன் புதிய பிரதமராக முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சவை நியமித்துமிருக்கிறார். அத்தோடு பாராளுமன்றத்தையும் இரண்டு வாரங்களுக்கு மூடிவிட்டிருக்கிறார்.

அரசியலமைப்புச் சட்டத்திற்கு இது விரோதமானது எனப் பல சட்ட மேதைகளும் சர்வதேசங்களும் சொல்லியிருந்தும்கூட சிறீசேன எதையும் கருத்தில் கொள்ளவில்லை. புதிய பிரதமரையும், அமைச்சரவையயும் இதுவரை சீனா ஒன்றே அங்கீகரித்திருக்கிறது.

தன் மீதும் முன்னாள் பாதுகாப்பு மந்திரி கோதாபாய ராஜபக்ச மீதும் இந்தியாவின் உளவு நிறுவனமான றோ வினால் கொலை முயற்சி செய்யப்பட்டதெனவும் அதுபற்றி முறையிட்டும்கூட பிரதமர் விக்கிரமசிங்க எதுவித நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டின் பேரில் பிரதமரைப் பதவி நீக்கினேன் என்பதே சிறீசேனாவின் குற்றச்சாட்டு. இருப்பினும் இச் சதியின் மூலகர்த்தா மகிந்த ராஜபக்சவே தான் என்பது பலரதும் ஊகம்.

ஆனால் அரசியலமைப்புச் சட்டத்தின் பிரகாரம் பதவிலிருக்கும் பிரதர் ஒருவரின் 1) இறப்பின் காரணத்தாலோ, 2) சுய விருப்பில் பதவி விலகினாலோ, 3) மூளை செயலிழந்து போனாலோ அல்லது 4) சித்த சுயாதீனமுற்றிருந்தாலோ மாத்திரமே அதிபர் புதிய பிரதமர் ஒருவரை நியமிக்கலாம். ரணில் விக்கிரமசிங்கா இந்த எவ்வித வகையிலும் அடங்காத பட்சத்தில் அவரைப்  பதவியிலிருந்து நீக்க முடியாது.

அதே வேளை புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ச நியமிக்கப்பட்டிருந்தாலும் விக்கிரமசிங்க தனது உத்தியோக பூர்வ இல்லமான அலரி மாளிகையைலேயே தொடர்ந்தும் வசித்து வருகிறார். இதனால் ஆத்திரமடைந்த சிறீசேன அலரி மாளிகைக்கு மின், நீர் வசதிகளை வழங்காமல் நிறுத்தி விட்டார்.

ஊடக அமைச்சு பதவியை முன்னாள் ஊடக அமைச்சர் கெஹெலிய றம்புக்வெல வீற்கு கொடுத்த உடனேயே அவர் குண்டர்கள் சகிதம் அரச ஊடக நிலையங்களுக்குச் சென்று அவற்றைத் தன் வசப் படுத்தியுள்ளார்.

இவற்றையெல்லாம் பார்க்கும்போது நடந்து முடிந்தது ஒரு அரசியலமைப்புச் சதி என்றவாறே மேற்கு நாடுகள் அணுகுகின்றன. அத்தோடு அதை முறியடித்து மீண்டும் விக்கிரமசிங்கவின் அரசை ஆட்சி பீடத்தில் அமர்த்த அவை முயன்று வருகின்றன. இதன் காரணமாக பாராளுமன்றத்தை உடனடியாகத் திறந்து நம்பிக்கை வாக்கெடுப்பை நிகழ்த்தி ஜனனாயக முறையில் தீர்வொன்றை எட்டுமாறு ஐ.நா. சபை முதல் பல மேற்கு நாடுகளும் கேட்டு வருகின்றன. அப்படி நிகழும் பட்சத்தில் விக்கிரமசிங்கவின் பக்கம் போதுமான வாக்குகள் இருப்பதனால் அவரே பிரதமர் என்பது மீண்டும் உறுதிப்படுத்தப்படும்.

அதே வேளை சீனாவின் செல்வாக்கு சிறீலங்காவில் அதிகரிப்பதும் அயல் நாடு இந்தியாவுக்கு மிகுந்த எரிச்சலைக் கொடுத்து வருகிறது. தற்போதய விடயத்தில் உறுதியாகத் தலையிட முடியாத நெருக்கடியில் இந்தியா தள்ளப்பட்டிருக்கிறது. இந்தியாவைச்  சிங்கள மக்களின் எதிரியாகச் சித்தரித்தே இதுவரை சிங்கள ஆட்சியாளர் தமக்குச் சாதகமான நிலைகளை எட்டி வந்தனர். இப்பொழுதும் அதே நிலை தான்.

தற்போதுள்ள நெருக்கடியைத் தீர்த்து வைக்க வல்ல ஒரே வழி மேர்கு நாடுகளின் மூலம் அழுத்தத்தைப் பிரயோகித்து விக்கிரமசிங்கவின் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்வதுதான். சிறிலங்கா விவகாரத்தில் தலையிட சீனாவுக்கு அது கொடுத்த கடன் காரணமாயிருப்பது போல மேற்குலகத்துக்கு இருக்கக்கூடிய ஒரே ஆயுதம் ஜனனாயகம் மட்டுமே. தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கும் அவர்களால் பாவிக்கக் கூடிய ஒரே ஆயுதம் ஜன்னாயகம் தான். அதனால் தமிழர் தரப்பும் விக்கிரமசிங்க தரப்போடு நின்று கொள்வதே இப்போதைக்கு உள்ள வழி.

தமிழருக்கு ஏதாவது தீர்வைத் தரவல்ல சிங்களத் தரப்பு மஹிந்தவினுடையது மட்டும் தான் என்ற சி வாதங்கள் முன் வைக்கப்படுகின்றன. எந்த சிங்களத் தலமையையும் நம்ப முடியாது அதிலும் விக்கிரமசிங்கவின் கடந்த கால நடவடிக்கைகள் மேலும் அவர் மீதான நம்பிக்கையைத் தமிழர் இழக்கக் காரணமாக அமைந்திருக்கலாம். இருப்பினும் பல லட்சக் கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்த ஒருவருக்கு ஆதரவளிப்பதன் மூலம் அரசியல் தீர்வொன்றைப் பெற்றுக் கொள்வதில் நியாயமிருக்கிறதா என்ற கேவியும் எழாமலிருக்க முடியாது.

தமிழர் தேசியக் கூட்டமைப்பின் மீது அதிருப்தியடைந்த பலர், முன்னாட் போராளிகள் சிலருட்பட, மகிந்தவின் தரப்புடன் சேர்ந்து தமிழர் பிரதேசங்களை அபிவிருத்தி செய்ய வேண்டுமென்ற ஒரு அணுகுமுறையை முன்வைக்கிறார்கள். இப் பேரத்தில் அரசியற் கைதிகளை விடுதலை செய்யப்போவதாக மஹிந்த உறுதியளித்திருப்பதாகவும் செய்தி ஒன்று வந்தது. அரசியல் தீர்வொன்றுக்காகக் காத்திருந்து ஏமாருவதை விடவும் இது பரவாயில்லை என்ற நியாயப்படுத்தலுக்கும் ஆதரவு இருக்கலாம்.

இருப்பினும் எப்படியான பேரம் பேசலும், உறுதி மொழிகளும், எழுத்து மூலங்களும் தமிழர்களை ஏமாற்றவே இதுவரை பாவிக்கப்பட்டு வந்திருக்கின்றன. சர்வதேச தலையீட்டுடனான அரசியல் தீர்வு ஒன்றே உறுதியானதும் நிரந்தரமானதுமாகும். அதற்கு ஒற்றுமையான தமிழர் தரப்பு ஒன்றையே சர்வதேச சமூகம் எதிர்பார்க்கிறது. தமிழர் தேசியக் கூட்டமைப்பிற்குப் பிறகு அதற்கான சாத்தியமே இல்லை என்பதையே நடக்கும் சம்பவங்கள் தெரிவிக்கின்றன.