AnalysisNews & AnalysisSri Lankaசிவதாசன்

சஜித் பிரேமதாச அரசாங்கத்தின் கைக்கூலியா? – எதிர்க் கட்சிக்குள் வலுத்துவரும் அதிருப்தி

கோவிட் நெருக்கடிகளிலும் தென்னிலங்கையில் அரசியல் கச முசக்களுக்குப் பஞ்சமில்லை. உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புக்களுப் பின்னால் ஆளும் கட்சியின் முக்கிய பிரமுகர் ஒருவர் இருப்பதாகவும், குண்டு வெடிப்புக்களை ஒருங்கிணைத்தது இராணுவ புலனாய்வுப் பிரிவு எனவும், எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களான ஹரின் ஃபெர்ணாண்டோ, மனுஷா நாணயக்கார ஆகியோர் சமீபத்தில் அதிர்ச்சி தரும் பல விடயங்களை பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தனர். கூடவே தே.ம.சக்தி பா.உ. அனுரகுமார திசநாயக்காவும் இவ்விடயத்தில் ஜனாதிபதியை மறைமுகமாகச் சாடி வருகிறார்.

உயிர்த்த ஞாயிறு தற்கொலைதாரிகளை இயக்கியது இராணுவ புலனாய்வுப் பிரிவின் தலைவர் சுரேஷ் சாலி என்பதும், ராஜப்கச ஆட்சியை மீளக்கொண்டுவருவதற்காகவே அது நடத்தப்பட்டது எனவும் அப்போதைய பொலிஸ் புலனாய்வுத் திணைக்கள விசாரணகளின் மூலம் தெரியவந்திருந்தாலும், ஆட்சி மாற்றம் காரணமாக அவ்விடயம் மூடி மறைக்கப்பட்டிருந்தது. கோதாபய ராஜபக்சவுக்கு அஞ்சி ஊடகங்களும் இவ்விடயங்கள் தொடர்பான செய்திகளுக்கு வழக்கமான பரபரப்புகளைக் கொடுக்கவில்லை.

கத்தோலிக்க திருச்சபையும் இது விடயத்தில் எதிர்பார்த்த அளவுக்கு அழுத்தத்தைக் கொடுக்கவில்லை. அதற்குக் காரணம் பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை ஏற்கெனவே சிஙகள பெளத்த தேசியவாதப் போர்வையால் மூடப்பட்டிருந்தார். இக் குண்டுத் தாக்குதல்களுக்காக குண்டுதாரிகளை இயக்கியவர்கள் தேர்ந்தெடுத்த மூன்று முக்கிய தேவாலயங்களும் பரவலாகத் தமிழ்க் கத்தோலிக்கர்கள் தொழுகின்ற இடங்களாக இருந்தன என்பதும் அதற்கு ஒரு காரணமாகவிருக்கலாம். இருப்பினும், கொச்சிக்கடை, நீர்கொழும்பு ஆகியவற்றில் குண்டுவெடிப்பு நடைபெற்ற தேவாலயங்களுக்கு அப்பகுதியிலுள்ள பல சிங்கள கத்தோலிக்கர்களும் செல்வது வழக்கம். இதனால் இக் குண்டுவெடிப்புகளின் சூத்திரதாரிகள் நீதிக்கு முன்னர் நிறுத்தப்படவேண்டுமென ஆயருக்குக் கத்தோலிக்க உயர் மட்டத்தில் கடும் அழுத்தம் இருந்துவந்தது. அதனால் ஆயர் மல்கம் ரஞ்சித் அரசாங்க சார்பாகவும், பாதிக்கப்பட்டவர்கள் சார்பாகவும் மாறி மாறி அறிக்கைகளை விட்டுக் கொண்டிருந்தார்.

குண்டு வெடிப்புகள் தொடர்பாக ஜனாதிபதி விசாரணைக் கமிசனின் அறிக்கை வெளிவந்ததும் கிட்டத்தட்ட குதிரை லயத்தைவிட்டுப் புறப்பட்டு விட்டது. ஏற்கெனவே சந்தேகங்களாகவே வெளியில் உலாவிவந்த பல விடயங்கள் உண்மையென நிரூபிக்கும் பல இரகசியங்களை இவ்வறிக்கை கொண்டிருந்ததும், ‘தேசியப் பாதுகாப்பு’ கருதி, அவற்றை அரசாங்கம் பகிரங்கப்படுத்த மறுத்ததும், சட்டமா அதிபரது அலுவலகத்துக்கு சுரேஷ் சாலி அடிக்கடி சென்று வந்ததும், அரசாங்கம் ‘எங்கப்பன் குதிருக்குள் இல்லை’ என்ற நிலைப்பாட்டை எடுப்பதைப் பகிரங்கப்படுத்திவிட்டது.

இதே வேளை, கோதாபயவின் அரக்கு மாளிகை உருகத் தொடங்கிவிட்டது. கோட்டையைத் தாங்கிக்கொண்டிருந்த பல முக்கிய தூண்கள் ஆட்டம் காணத் தொடங்கி விட்டன. இவற்றில் ஒன்றான புத்த மகாசங்கங்கள், துறைமுகநகர விடயம் தொடர்பாக கோதாபயவுடன் முரண்பட ஆரம்பித்தார்கள். உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்புக்களோ அல்லது அதனால் பாதிக்கப்பட்டவர்களோ அவர்களது கரிசனையாக ஒருபோதும் இருந்ததில்லை. ஞானசார தேரர் போன்றோர் மிரட்டப்பட்டு அடக்கப்பட்டிருந்தாலும் கையில் கனமில்லாத முறெத்தெட்டுவ தேரர் போன்றவர்கள் கோதாபயவைப் பகிரங்கமாக்ச சாட ஆரம்பித்தார்கள். ராஜபக்சக்களை மீளவும் ஆட்சியில் அமர்த்தியவர்களில் முக்கியமானவர் அவரும் ஒருவர். துறைமுக நகரம் சீனாவின் கையிலிருந்து இலங்கையின் கைக்கு மாற்றப்படும் வரை அந்தக் குதிரையை மீண்டும் லயத்துக்குள் கொண்டு வருவது சிரமம்.

இதைவிட வேறு குதிரைகளும் லயத்தை விட்டுப் புறப்பட்டிருந்தன. ‘நாங்களும் ரவுடிகள் தான்’ கணக்கில், அரசாங்கத்தோடு இருக்கும் 11 சிறு கட்சிளுக்கு – திச விதாரண உட்பட – உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் பெரும் பொருட்டாக எப்போதுமே இருந்ததில்லை. மாகாணசபை தேர்தல்களை அரசாங்கம் நடத்தக்கூடாது என்ற ஒரே காரணத்துக்காகவே அவர்கள் ஆளும் கட்சியை எதிர்க்கிறார்கள். தற்போதுள்ள மாகாணசபை முறைமையில் வடக்கு கிழக்குக்கு அதிக அதிகாரங்கள் கிடைத்துவிடும் என்பதற்காக மட்டுமே இந்த முன்னாள் இடதுசாரிகள் எதிர்க்கிறார்கள்.

முஸ்லிம் கட்சிகளை வளைத்துப்போட சாம, பேத , தான தண்டம் அனைத்தையும் பாவித்தார்கள். ஆனால் கோவிட் வந்து அக் குதிரைகளையும் லயத்தை விட்டுத் துரத்தி விட்ட்டது.

ஓரிரு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பற்றிச் சொல்லவே தேவையில்லை. படலை திறந்திருந்தால் லயத்துக்குள் ஓடிவரக் காத்திருக்கும் இக் குதிரைகள் பற்றி அரசாங்கம் ஒருபோதும் கவலைப்பட்டதில்லை.

சிறிலங்கா சுதந்திரக்கட்சி ஒருபோதும் வெளியேறப் போவதில்லை. உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்களைத் தடுத்து நிறுத்தத் தவறிவிட்டார் என அதன் தலைவர் சிறிசேனவை ஒரு குற்றவாளியாக விசாரணைக் கமிசன் கண்டுவிட்டது. வாய் திறந்தால் அவருக்கு ஆபத்து. எனவே அந்தக் குதிரைகளும் லயத்தை விட்டு ஓடாது.

ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு, நாட்டின் தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விளைவிக்க விடுதலைப் புலிகள் உயிரோடு இல்லை. அவர்களை ஒழித்துவிட்டோம் என்று கோதாபய மார்தட்டிக்கொண்டு வேறு இருக்கிறார். இதற்காக அவர்களால் உருவாக்கப்பட்ட புதிய ‘ஆபத்தே’ உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்களைச் செய்த ‘வெளிநாட்டு’ பயங்கரவாதிகள். ஷானி அபயசேகர போன்றோர் இந்த இரகசியத்தை எப்போதோ வெளிக்கொணர்ந்து விட்டனர் என்றாலும் அவர் போன்றோரைக் கைது செய்து சிறையிலடைத்து வாய்ப்பூட்டையும் போட்டாகிவிட்டது. ஆனாலும் உண்மை எப்போதோ தப்பி ஓடிவிட்டது. இப்போது விசாரணக் கமிசன் அறிக்கை அரைவாசி உண்மையோடு வெளிவந்து மக்கள் மனதில் இருந்த சந்தேகத்தை வலுப்படுத்தியிருக்கிறது.

விசாரணைக் கமிசன் அறிக்கையில் பல முக்கிய தகவல்களை ‘தேசிய பாதுகாப்பு கருதி’ அரசாங்கம் வெளியிடவில்லை. ஆனாலும் அதுவும் ஏதோ ஒரு வகையில் எதிர்க்கட்சிகளிடம் போய்ச் சேர்ந்துவிட்டது. ஹரின் ஃபெர்ணாண்டோ, மனுஷா நாணயக்கார, அனுரகுமார திசநாயக்கா போன்ற சில இளம் துணிச்சலானவர்கள், வேறெந்த வகையிலும் சில்லறை வழக்குகளில் ஏற்கெனவே மாட்டியிராதவர்கள், குண்டுத் தாக்குதல்களின் மர்மத்தைத் துலக்க எத்தனிக்கிறார்கள். பாட்டாளி சம்பிக்க ரணவக்க போன்றோர் உரத்துப் பேச முயற்சித்தாலும் அவர்கள் மீது சில்லறை வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. ரஞ்சன் ராமநாயக்கா இதற்கு நல்லதொரு உதாரணம்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள், ஏன், யாரால் நடத்தப்பட்டன என்பது மக்களுக்கு இப்போது புரிந்துவிட்டது. கத்தோலிக்க திருச்சபையின் அழுத்தம் காரணமாக பேராயர் மல்கம் ரஞ்சித், மத நிகழ்வுகளில் மட்டுமென்றாலும், குரலெழுப்ப ஆரம்பித்திருக்கிறார். இது ஹரின், மனுஷா, அனுரகுமார போன்றோருக்கும் துணிச்சலைத் தந்திருக்கிறது. கோதாவின் உண்மை முகத்தை இவர்கள் அம்பலப்படுத்தி வருகிறார்கள். இவர்களின் வாய்களை அடைக்க இப்போது அவர் பாவிக்க முற்பட்டிருப்பது சஜித் பிரேமதாசாவை.

சஜித் பிரேமதாச யார் பக்கம்?

சஜித் பிரேமதாச த்ந்தையாரைப் போல் ஒரு உறுதியான, துணிச்சலான தலைவர் அல்ல. பாராளுமன்றத் தேர்தல்களுக்கு முன்னர் ஐ.தே.கட்சியை உடைக்க ராஜபக்ச தரப்பு சஜித் பிரேமதாசவைப் பாவிக்கிறது என கிசு கிசுக்கள் வெளிவந்திருந்தன. எல்லாம் தெரிந்த ஞானி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் அது தெரியும். கோதாவுக்கு துன்பம் வரும் போதெல்லாம் ஆபத்பாண்டவராகத் தோன்றி அருள் புரிபவர் ரணில். எனவே அவருக்குத் தெரிந்திருக்காத விடயமல்ல இது. சஜித்தின் ஆளுமை பற்றி அவருக்கு நன்றாகவே தெரியும். அதனால் தான் கட்சித் தலைமையை ச்ஜித்திடம் கொடுக்க அவர் விரும்பவில்லை. ஆனால் கட்சிக்குள் அவருக்கு எதிர்ப்பு அதிகமிருந்ததால் சமாகி ஜன பலவேகய உருவாகியது. இதற்கான பெரும் பொறுப்பு மங்கள சமரவீரவுக்குப் போகவேண்டும்.

சஜித் தலைமையில் சமாகி ஜன பலவேகய எதிர்க்கட்சி ஆகியதிலிருந்து ‘நாட்டின் நன்மைக்காக அரசாங்கத்தோடு ஒத்துழைக்கத் தயார்’ என அவர் அறைகூவியிருந்தார். அப்போதே அவரது பலவீனத்தை ராஜபக்சக்கள் கண்டு கொண்டிருந்தனர். நாமல் ராஜபக்ச என்ற இளைஞர் மூலம் இந்த ஒத்துழைப்புப் பாலம் கட்டப்பட்டுவிட்டது.

இலங்கை என்று வரும்போது சஜித் தானும் ஒரு தேசியவாதிதான் என்பதை வெளிப்படையாகக் காட்டி வருபவர். சிங்கள, பெளத்தத்துக்கு முதலிடம் கொடுக்கப்படுமெனினும் இதர மொழி, மதங்களுக்கு சம உரிமை கொடுக்கப்படுமென அவர் கூறி வருபவர். அதே வேளை சஜித் அரசியலுக்குப் புதியவர். நெழிவு சுழிவுகளைப் புரியாதவர். முக்கியமாக ராஜப்கச அரசியலை முற்றிலும் புரியாதவர். அனுரா பண்டாரநாயக்காவை ஒரு இரவிலேயே சகோதரிக்கு எதிராகத் திருப்பியவர் மஹிந்த. சாம பேத, தான, தண்டக் கலையை முறையாகப் பிரயோகிப்பவர்கள் அவர்கள் தான்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்களின் சூத்திரதாரி சஹ்ரான் அல்ல, அது ஒரு உள்வீட்டு விடயம் என்பது அம்பலப்படுத்தப்பட்ட நிலையில் ராஜபக்சக்கள் இப்போது சஜித் பிரேமதாசவை நாடியிருக்கிறார்கள். ஆரம்ப காலங்களில், ‘கோவிட் காளையை வெற்றிகரமாக அடக்கியமைக்காக’ சீன நண்பரிடமிருந்தும், உலக சுகாதார நிறுவனத்திடமிருந்தும் விருதுகளை வாங்கும்போது அப்பெருமைக்கு அவர் மட்டுமே உரியவராக இருந்தார். இப்போது கோவிட் குதிரை தப்பியோடிவிட்ட பிறகு அதைப் பிடித்துக் கட்டுவதற்கு எதிர்க்கட்சியையும் நாமல் மூலம் துணைக்க்ழைக்கிறார்கள் ராஜபக்சக்கள். அதன் சூட்சுமம் கோவிட் அல்ல, உயிர்த்த ஞாயிறுக் குண்டுத்தாக்குதல்கள்.

ஹரின் ஃபெர்ணாண்டோ, மனுஷா நாணயக்கார ஆகியோரது குரல்கள் நாட்டு மக்களிடம் ராஜபக்சக்களை அம்பலப்படுத்த ஆரம்பித்துவிட்டன. ராஜபக்ச பரம்பரை ஆட்சிக் கனவு சரிவடைவது அவர்களுக்குத் தெரிகிறது. ஹரின், மனுஷா போன்றோரின் குரல்களை அடைக்க சஜித் மூலம் முயற்சிகள் நடைபெறுகின்றன எனவும், ‘இக் கோவிட் தொற்று நாட்டைச் சீரழித்துவரும் காலத்தில் அரசாங்கத்தை இக்கட்டான நிலைக்குள் தள்ள வேண்டாமென’ சஜித் கட்சிக்காரரைக் கேட்டுக்கொண்டதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.

இதே வேளை, சஜித் பிரேமதாச, இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவோடு நெருங்கிய உறவைப் பேணிவருபவர் என்பதும், அவருக்கு விதிக்கப்பட்ட பயணத் தடையை நீக்கும்படி அமெரிக்காவிடம் பல தடவைகள் கோரிக்கை வைத்தவர் என்பதும் ஏற்கெனவே தெரிந்த விடயங்கள். தனது கட்சி உறுப்பினர்களைக் காவலதிகாரிகள் மிகவும் கொடுமையாக நடத்தியபோதும் சஜித் பலமான எதிர்க்குரலெதையும் எழுப்பவில்லை. இது அவரது சுபாவம்.

கத்தோலிக்க திருச்சபை

உயிர்த்த ஞாயிறு சம்பவங்கள் தொடர்பாக ஜனாதிபதி விசாரணைக் கமிசனின் அறிக்கை வெளிவந்த நாள் முதல் கத்தோலிக்க திருச்சபை சஜித் பிரேமதாசாவைச் சத்திக்க முயன்று கொண்டிருக்கின்றது. குண்டுவெடிப்பு சம்பவங்கள் தொடர்பாக மேலும் அதிர்ச்சி தரும் தகவல்கள் தொடர்பாக உரையாடுவதற்கு ஆயர்கள் சந்தர்ப்பம் கேட்டிருந்தனர். இரண்டு தடவைகள் சதிப்பிற்காகத் தவணைகள் கொடுக்கப்பட்ட பின்னர் இரண்டு தடவைகளிலும் அவை சஜித்தினால் ஒத்திப்போடப்பட்டன. இரண்டாவது தடவைக்காக ஒதுக்கப்பட்ட நாளில் இராணுவ புலனாய்வுப் பிரிவினர் கத்தோலிக்க திருச்சபையைச் சந்தித்திருந்தனர்.

ஹரின் ஃபெர்ணாண்டோ, மனுஷா நாணயக்கார ஆகியோர் சபையில் ஆற்றிய திடுக்கிடும் உரைகளைத் தொடர்ந்து, லக்ஸ்மன் கிரியெல்ல தலைமையில் சமாகி ஜன பலவேகய பா.உ. க்கள் சிலர் கத்தோலிக்க தலைவர்களை மருதானையில் சந்தித்திருந்தனர். இச் சந்திப்பின்போது உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புக்களின்போது குண்டுதாரிகளோடு தொடர்புகளைப் பேணிய பொலிஸ் புலனாய்வு அதிகாரி பற்றியும், கைது செய்யப்பட்டிருந்த அவரை இராணுவ புலனாய்வுப் பிரிவினர் பலவந்தமாகப் பறித்துச் சென்றமை பற்றியும் கலந்துரையாடப்பட்டிருந்தது. இச் சந்திப்பு நடைபெற்ற மறுநாள் இக் கத்தோலிக்கத் தலைவர்களை பொலிஸ் குற்றப்பிரிவினர் விசாரித்திருந்தனர். இது தொடர்பாகவே கத்தோலிக்க ஆயர்கள் சஜித் பிரேமதாசவைச் சந்திக்க விரும்பியிருந்தனர். ஆனால் அவர் இச் சந்திப்பைத் தவிர்த்து வருகிறார்.

ஹரின், மனுஷா ஆகியோரின் பேச்சுக்களுக்குப் பின்னர் ‘ அரச தரப்பின் பலம் வாய்ந்த உயர் மட்டத்திலிருந்தும், பாதுகாப்புத் தரப்பிலிருந்தும் தம் கட்சி மீது அதீத கவனம் செலுத்தப்படுகிறது என சஜித் பிரேமதாச மிகவும் ஆதங்கப்பட்டார் என உட்கட்சித் தகவல்களை மேற்கோள்காட்டி ‘கொழும்பு ரெலிகிராஃப்’ செய்தி வெளியிட்டிருந்தது. அதே வேளை பிரேமதாசவின் சமீப கால நடவடிக்கைகள் தொடர்பாகக் கட்சிக்குள் பல சலசலப்புகளும் தோன்றியுள்ளன என அறியப்படுகிறது.

துறைமுக நகர விடயத்திலும் ஏனையவர்கள் எழுப்பும் குரல்களினளவுக்கு பிரேமதாச குரலெழுப்புவதில்லை.

அரசாங்கம் பல விடயங்களில் தொடர்ந்தும் தவறான முடிவுகளை எடுக்கும்போது, ‘எதிர்க்கட்சி சமரசம்’ செய்ய வேண்டுமென சஜித் பிரேமதாச எழுப்பிவரும் குரல் அவரது உண்மையான நோக்கம் பற்றிய சதேகத்தை வலுவடையச் செய்து வருகிறது.

இந் நிலையில், ஆளும் கட்சிக் கூட்டணியிலிருக்கும் 11 சிறு கட்சிகளும், சுதந்திரக் கட்சியும், மீண்டுமொரு தடவை மகாசங்கங்களின் தலைமையின்கீழ் ஒன்று திரண்டு ஆட்சியைக் கவிழ்க்க முயலும் பட்சத்தில் அரசாங்கத்தைக் காப்பாற்ற பிரேமதாசவின் எதிர்க்கட்சியின் உதவியைப் பெற ராஜபக்சக்கள் திட்டமிடுகிறார்களா என்ற சந்தேகம் வலுப்பெற்று வருகிறது.

அரசியல் ஒரு விசித்திரமான கலை.

-சிவதாசன் ( சில தகவல்கள் ‘கொலொம்பொ ரெலிகிராஃபிலிருந்து பெறப்பட்டன)