Spread the love

சென்னை ஜூன் 22, 2020: 2016 இல் நடைபெற்ற சங்கர் என்பவரின் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த சங்கரின் மனைவி கெளசல்யாவின் தந்தை சின்னச்சாமி நிரபராதியென சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இச் சம்பவத்தின்போது, தேவர் சாதியைச் சேர்ந்த கெளசல்யா, தாழ்ந்த சாதியினர் எனக் கருதப்படும் சங்கரைக் காதலித்து மணம் முடித்த காரணத்தால், வாடகைக்கு அமர்த்திய கொலைகாரர்களைக் கொண்டு கெளசல்யாவின் தந்தை சின்னச்சாமி, சங்கரைக் கொலை செய்தார் எனக் குற்றம் சாட்டப்பட்டிருந்தார்.

இச் சம்பவம் 2016 இல் உடுமலைப் பேட்டையில் நடைபெற்றிருந்தது. சங்கர், கொலைகாரர்களால் அடிக்கப்பட்டுக் காயமடைந்த நிலையில் தெருவில் விடப்பட்டிருந்து பின்னர் மரணமானார். தீவிர காயங்களுக்குள்ளான கெளசல்யா மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டதால் உயிர் பிழைத்துவிட்டார். இக்கொலை CCTV கமராவில் பதிவாகியிருந்தது.



இக்கொலையை ஏவியதற்காக கெளசல்யாவின் குடும்பத்தினரும், கொலையாளிகளும் குற்றவாளிகள் என மாவட்ட நீதிமன்றத்தால் காணப்பட்டு எல்லோருக்கும் மரணதண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

பின்னர் இவ்வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யப்பட்டிருந்தது. நீதிபதிகள் எம். சத்தியநாராயணன், எம். நிர்மல் குமார் ஆகியோர் முன்னிலையில், இவ்வழக்கு விசாரிக்கப்பட்டு, இன்று (திங்கள்) தீர்ப்பு வெளியானது. அதில் சின்னச்சாமி விடுதலை செய்யப்பட்டும், கொலையாளிகளின் மரணதண்டனை ஆயுட் தண்டனையாகக் குறைக்கப்பட்டு, குறைந்தது 25 வருடங்கள் சிறையிலிருக்கவேண்டுமெனத் தீர்ப்பளிக்கப்படிருக்கிறது. கெளசல்யாவின் தாயாரும் மேலும் இரு குடும்பத்தினரும் விடுதலை செய்யப்பட்டனர். இன்னும் இருவரது தண்டனைகள் தீர்மானிக்கப்படாமல் உள்ளன.

சங்கரைக் கொலை செய்வதற்கான திட்டத்தைக் கெளசல்யாவின் தந்தை சின்னச்சாமி தீட்டியிருந்தார் எனவும், ஜகதேசன், மணிகண்டன், செல்வகுமார், கலை தமிழ்வாணன், மைக்கல் எனப்படும் மதன் ஆகியோரைக் கொண்டு சங்கரைக் கொலை செய்தார் எனவும் அவருக்கு அவரது குடும்பத்தினரும், வேறு சிலரும் உதவி செய்திருந்தனர் எனவும் அறியப்படுகிறது.

டிசம்பர் 12, 2017 இல் இவ் வழக்கை விசாரித்த திருப்பூர் மாவட்ட செஷன்ஸ் கோர்ட் நீதிபதி அலமேலு நடராஜன், சின்னசாமிக்கு 13 வருடங்கள் சிறைத்தண்டனையும் அது முடிவுற்றதும் தூக்குத்தண்டனையும் வழங்கித் தீர்ப்பளித்திருந்தார். ஏனையோர்களுக்கும் 18 வருட சிறைத்தண்டனையும், அதைத் தொடர்ந்து மரண தண்டனையும் வழங்கப்பட்டிருந்தது.

Print Friendly, PDF & Email
Related:  இந்தியா | காப்புறுதிப் பணத்துக்காகத் தனது கொலையைத் தானே திட்டமிட்டவர்!