Sri Lanka

சகல பா.உ. க்களும் சபையில் விரும்பியதைப் பேசும் உரிமையுண்டு – சபாநாயகர் தீர்ப்பு


  • பேச்சு பதிவேட்டிலிருந்து நீக்கப்படவேண்டுமெனப் பல சிங்களக் கட்சி உறுப்பினர்களும் குரலெழுப்பியிருந்தனர்.

ஆகஸ்ட் 28, 2020: “இலங்கைப் பாராளுமன்றத்தில் அதன் உறுப்பினர்கள் தாம் விரும்பியதைப் பேச உரிமையுண்டு” என சபாநாயகர் மஹிந்த யாபா அபயவர்த்தன தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற தொடக்க நிகழ்வின்போது யாழ் மாவட்ட த.ம.தே.கூ. பா.உ. திரு சீ.வீ.விக்னேஸ்வரனின் ‘வடக்கு கிழக்கு தமிழரின் தாயகம்’ எனப் பேசியது தவறெனவும், அது பாராளுமன்றப் பதிவேட்டிலிருந்து நீக்கப்படவேண்டுமெனவும் காலி மாவட்ட ச.ஜ.ப. பா.உ. மனுஷா நாணயக்கார சபாநாயகரிடம் அன்றே கோரிக்கை விடுத்திருந்தார். இக் கோரிக்கையைப் பரிசீலிப்பதாகக் கூறிய சபாநாயகர் இன்று அளித்த தீர்ப்பில் அக் கோரிக்கையை நிராகரித்துத் தீர்ப்பளித்திருக்கிறார்.

“வடக்கு கிழக்கு தமிழரின் தாயகம் எனப் பா.உ. விக்னேஸ்வரன் பேசியது அவர் பாராளுமன்றத்தில் எடுத்த சத்தியப் பிரமாணத்துக்கு முரணானது எனவும் இதன் காரணமாக அப் பேச்சைப் பதிவேட்டிலிருந்து சபாநாயகர் நீக்க வேண்டுமெனவும் பா.உ. நாணயக்கார கேட்டிருந்தார்.

இக் கோரிக்கையை சபாநாயகர் இன்று நிராகரித்திருக்கிறார்.

“ஒரு உறுப்பினர் தன் கருத்தை வெளியிட்டுள்ளார். அவர் அரசாங்க உறுப்பினரா அல்லது எதிர்க்கட்சி உறுப்பினரா என்பது இங்கு முக்கியமல்ல. தனது கருத்தைச் சுதந்திரமாக வெளியிட ஒரு உறுப்பினருக்கு உரிமையுண்டு. அதில் கருத்து வேறுபாடு இருந்தால் அதை நீங்களும் வெளியிட்டு குழப்பத்தை நிவர்த்தி செய்துகொள்ளலாம். அவரது கருத்துக்கள் பதிவேட்டிலிருந்து நீக்கப்பட மாட்டாது” எனச் சபாநாயகர் அபயவர்த்தனா தெரிவித்துள்ளார்.

சபாநாயகரின் தீர்ப்பைத் தொடர்ந்து பல பா.உ.க்கள் தமது கருத்துக்களைத் தெரிவித்தனர்.



குருநாகல் மாவட்ட பொதுஜன பெரமுன பா.உ. சாந்த பண்டார, நாணயக்காரவின் கோரிக்கையை ஆதரித்து, விக்னேஸ்வரனின் பேச்சு பதிவேட்டிலிருந்து நீக்கப்படவேண்டுமெனக் கருத்துத் தெரிவித்தார். “அரசிலயமைப்புச் சட்டத்துக்கு எதிராகவோ அல்லது பாராளுமன்றத்துக்குத் தகாத முறையிலோ ஏதாவது பேசப்பட்டால் அதை நீக்க சபாநாயகருக்கு அனுமதியுண்டு. எனவே ‘பாரம்பரிய தமிழர் தேசம்’ பற்றிய குறிப்பைச் சபாநாயகர் பதிவேட்டிலிருந்து நீக்கவேண்டும்” என அவர் தெரிவித்தார்.
சமா ஜன பலவே

கய கட்சியின் குருநாகல் மாவட்ட பா.உ. நலின் பண்டார பேசுகையில் ” பாராளுமன்றம் ஆரம்பித்த முதலாவது நாளில் சகல உறுப்பினர்களும், “நாடு பிளவுபடுவது பற்றி நேரடியாகவோ, மறைமுகவாகவோ பேசமாட்டோம்” என சத்தியப்பிரமாணம் எடுத்திருந்தார்கள். ஆனால் ஒரு மணித்தியாலத்துக்குள்ளாகவே பா.உ. விக்னேஸ்வரன் அதை மீறிவிட்டார். இதற்காக அவரைப் பாராளுமன்றத்திலிருந்து வெளியேற்ற வேண்டும். சத்தியப் பிரமாணத்துக்கு ஒரு கருத்தேயில்லை எனச் சபாநாயகர் நினைக்கின்றாரா?” என அவர் கேள்வியெழுப்பினார்.

இருப்பினும், சமாகி ஜன பலவேகய பா.உ. ராவுப் ஹக்கீம், இது தொடர்பாகப் பேசுகையில், “பாராளுமன்ற அதிகாரங்கள் மாற்றும் சலுகைகள் சட்டம், ஒரு உறுப்பினர் தனது கருத்தைப் பாராளுமன்றத்தில் பகிரங்கமாகத் தெரிவிக்க இடமளிக்கிறது. இச் சட்டத்தை மனதில் கொண்டு சபாநாயகர் தனது தீர்ப்பை வழங்கியுள்ளார். இந் நாட்டின் சட்டம் ஒன்று மீறப்பட்டிருந்தால் அதுபற்றிப் பொலிஸ்நிலையத்தில் முறைப்பட்டு செய்யலாம். பாராளுமன்றத்தின் சலுகைகள அவமதிக்கத் தேவையில்லை. இவ் விடயத்தில் சபாநாயகர் மிகவும் சரியாகவே நடந்திருக்கிறார்” எனத் தெரிவித்தார்.

பாராளுமன்றத் தொடக்க நிகழ்வின்போது பேசிய பா.உ. விக்னேஸ்வரன் ” தமிழி பேச ஆரம்பித்துப் பின்னர் ஆங்கிலத்தில் தொடர்ந்த போது ” மதிப்புக்குரிய சபாநாயகரே, நான் உங்களை வாழ்த்துவதற்கு, உலகில் வாழும் மூத்த மொழியும், இந் நாட்டின் ஆதிக்குடிகளால் பேசப்பட்டதுமான எனது தாய் மொழியில் ஆரம்பித்த பின்னர் தொடர்பு மொழிக்கு மாறுகிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.