Entertainmentகனடா மூர்த்தி

க/பெ ரணசிங்கம் | திரை அலசல்


கனடா மூர்த்தி

திரையரங்குக்கு போகமுடியாது என்பதால் புதுப்படங்கள் இப்போ ஒன்லைனில்தான்…

“க/பெ ரணசிங்கம்” படத்தை இன்றுதான் பார்த்தேன். “வெளிநாடு சென்று செத்துப்போன கூலித்தொழிலாளி பற்றிய படம்” + “அரபு நாடுகளில் நடக்கும் நீதி மீறல்கள் பற்றிய படம்” + “இந்தியாவின் தண்ணீர் பிரச்சனை பற்றிய படம்” + … என பலபிரச்சனைகளைப்பற்றிப் பேசும் படம்.

க/பெ ரணசிங்கம் - திரை விமர்சனம்

ரணசிங்கம் (விஜய்சேதுபதி) துபாயில் இறந்துவிடுகிறார். காரணம்? “கலவரத்தில் இறந்தார்” என அங்கிருந்து சொல்லப்படுகிறது. ஆனால் அது விபத்தாக இருக்கலாம் என்ற சந்தேகத்தோடு, கணவன் ரணசிங்கத்தின் சடலத்தை ராமநாதபுரத்திற்கே கொண்டு வரவேண்டும் என மனைவி அரியநாச்சி (ஜஸ்வர்யா ராஜேஷ்) போராடுகிறார்.

ராமனாதபுரத்திலிருந்து சென்னை சென்று, ஒரு தற்கொலைப் போராளிபோல திடீரென வாகன வரிசையில் முன் ஓடி மத்திய அமைச்சரை மிரள வைத்து கவனயீர்ப்பு செய்கிறார். பிறகு இன்னொரு கவனயீர்ப்பாக டெல்லி சென்று அணைக்கட்டிலிருந்து குதித்துவிடுகிறேன் என மிரட்டுகிறார். பிரதர் மோடி தலையிடுறார். பிரச்சனையை தீர்க்கவெனவும் எமிரேட்ஸ் அரசை மிரட்டவெனவும் செய்வதுபோல; ரணசிங்கம் உடல் அனுப்பப்படுவதை துபாய் உறுதி செய்யும் வரை அணைக்கட்டுக்கு பக்கத்தில் வீதியருகே உட்கார்ந்தும்விடுகிறார் மோடி! பிறகு என்ன நடந்தது என்பதுதான் கிளைமாக்ஸ்.

வெளிநாடுகளில் இறந்துபோகும் தொழிலாளர்கள் பற்றி பேசும் முதலாவது தமிழ்ப் படம்! பேசப்பட வேண்டிய ஒரு பிரச்னையை குறித்த படம்தான்! ஒரு விழிப்புணர்வை கொண்டுவர முயலும் படம்!! ஆனால் கதையிலிருக்கும் பல சினிமாத்தனங்களால் முற்றுமுழுதாக ‘நல்ல சினிமா’ என்று சொல்லமுடியாதவாறு போய்விட்டது.

உதாரணத்திற்கு தனியே சென்னை சென்ற கதாநாயகி, அந்தப்பெரிய சென்னையில் தன்னோடு சிறுவயதில் படித்த ஒருவனை தற்செயலாக காண்கிறார். அவன் இவருக்கு உதவுகிறான். பிறகு அவர் டெல்லி செல்கிறார்.. அங்கு இவரை ஒரு பத்திரிகையாளர் அடையாளம் கண்டுவிடுகிறார்.. உதவுகிறார். இப்படியெல்லாம் போகிறது கதை. முதல் பாதி ரசிக்கக்கூடியதாக இருக்க, இரண்டாம் பாதியில் இயக்குனர் பிரச்சனையைக் கொண்டுபோகும் பாணியே வைத்தே ‘முடிவு’ சுலபமாக ஊகிக்கக்கூடியதாக இருந்துவிட்டது.

நாயகி சந்திக்கும் பிரச்சினையின் தீவிரத்தை ஒப்பிடுவதற்காக நடிகை ஸ்ரீதேவி இறந்த அதே காலப்பகுதியில்தான் இதுவும் நடக்கிறது என கதையை அமைத்திருக்கிறார்கள். முழுப்படமும் ஜஸ்வரியா ராஜேஷ் பொயின்ற் ஒப் வியூவில்தான் செல்கிறது. படத்திற்கு அரியநாச்சி என்று பெயர் வைத்திருக்கலாமே…

நம்ப ‘தந்தி ரிவி’ ரங்கராஜ் பாண்டே படத்தில் மாவட்டக் கலெக்டராக வருகிறார். அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறார். அவ்வப்போது அரசாங்கம் குறித்தும் அதிகாரிகள் குறித்தும் கருத்துக்களை சொல்கிறார். “அவர் நல்லவரா கெட்டவரா” என்று பட்டிமன்றம் வைக்கலாம். (ஸ்ரீலங்கா ராணுவத்தால் கொல்லப்படும் மீனவர்கள் குறித்து கருத்து சொல்பவர்கள் குறித்து ஒரு சிறு வசனத்துளி காரமாக வருகிறது.) எனக்கென்னவோ ஐஸ்வரியா ராஜேஷ் பொயின்ட் ஒப் வியூவில் கதையை சொல்வதைத் தவிர்த்து ரங்கராஜ் பாண்டேயின் பொயின்ட் ஒப் வியூவில் கதை போயிருந்தால் நன்றாக இருந்திருக்குமோ? என்றுதான் தோன்றியது.படத்தில் எனக்கு பிடித்தது தண்ணீரை படத்தோடு இணைத்திருக்கும் விதம்தான். காய்ந்த பூமியில் மண்ணடி நீரோட்டத்தை கண்டுபிடிக்கும் காதலன்.. மழை.. சென்னையில் குழாய்தண்ணீர் வீணாவது.. தண்ணீர் பிரச்சனைக்கான அணைக்கட்டுமேல் நின்று தற்கொலைக்கு முயல்வது.. அதே அணைக்கட்டை திறந்து வைக்குமாறு கதாநாயகியை பிரதமர் மோடி கேட்டுக் கொள்வது.. அது மிதக்கும் இறுதிக் காட்சியில் வரும் கடல் தண்ணீர்.. இதை ரசித்தேன்.. ஆனால்…

முழுப்படமும் 3 மணி நேரமாக ஆற்றுநீர் இழுப்பதுபோல இழு இழு என்று பார்ப்பவர்களை இழுத்துக் கொண்டு சென்றது.! நீளமான ஆறு.