கோவிந்தனின் புதியதோர் உலகம் – சொல்வதும் சொல்லாததும்
ரவீந்திரன்.பா
[இக் கட்டுரை ஆசிரியரின் வலைப்பதிவான சுடுமணல் இருந்து பெறப்பட்டது. தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் அக்கால நடைமுறைகளை விமர்சிக்கும் வகையில் வெளிவந்த கோவிந்தனின் புதியதோர் உலகம் பரவலாக வாசிக்கப்பட்ட ஒரு நூல். தமிழீழப் போராட்ட வரலாற்றின் முக்கியமானதொரு காலகட்டத்தைப் பிரதிபலிக்கிறதெனக் கருதப்பட்ட இந்நூலின் மூன்றாம் பதிப்பு தற்போது வெளிவந்துள்ள நிலையில் அந்நூலின் குறை நிறைகளை நிதானமாகவும் அங்கீகார தோரணையுடனும் (authenticity) அலசும் ரவீந்திரன்.பா. வின் இவ்விமர்சனமும் அந் நூலைப்போலவே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததும், எதிர்கால வரலாற்று மாணவர்களுக்கு அவசியமானதுமெனக் கருதியதால் ஆவணத் தேவைகளுக்காக நன்றிகளுடன் இங்கே மீள்பதிவு செய்கிறோம்.]

புதியதோர் உலகம் நாவலின் முதல் பதிப்பு 1985 இல் தீப்பொறி குழுவினரால் வெளியிடப்பட்டது. பின்னர் இந் நூலை பிரதிகள் செய்து, தானே அதை நூலாகக் கட்டி தோழர் சபாலிங்கம் பாரிஸ் இல் விநியோகித்தார். இதன் இரண்டாவது பதிப்பு 1997 இல் வெளிவந்தது. இதை தீப்பொறிக் குழுத் தோழர்கள் விடியல் பதிப்பகத்தினூடாக வெளியிட்டிருந்தார்கள். (புத்தக வடிவமைப்பை நான் செய்திருந்தேன்). இப்போ மூன்றாவது பதிப்பாக தமிழகத்தின் சிந்தன் புக்ஸ் 2023 இல் வெளியிடுகிறது. 37 வருட காலத்தின் பின்னும் இந்த நூல் மறுபதிப்பாக வருவது அதன் முக்கியத்துவத்தை காட்டுகிறது. இலக்கியத் தளம் என்பதைவிட அரசியல் தளத்தில் அதன் பேசு பொருள் இப்போதும் பொருந்துவனவாக இருப்பதே அதற்குக் காரணம்.
இந் நாவலை எழுதிய கோவிந்தன் (டொமினிக், கேசவன்) தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் மத்தியகுழு உறுப்பினராக இருந்தவர். அதைவிட அவர் அன்றைய கால வெளியில் குறிப்பிடத்தக்க மார்க்சியப் பார்வை கொண்டிருந்த ஒரு மனிதர். வடக்கு கிழக்கில் கழகத் தோழர்களுக்கு அரசியல் பாசறைகள் நடத்தியவர். த.ம.வி.கழகம் 1983 இல் அடைந்த திடீர் வளர்ர்ச்சிக்கு இவர்கள் போன்ற -ஒப்பீட்டளவில் தேர்ந்த அரசியல் பார்வையும், நேர்மையும், மக்கள் சார்ந்த அணுகுமுறையும், பிரக்ஞைபூர்வமான உழைப்பும் கொண்ட- தோழர்களே காரணம். அது வீங்கிய அதே வேகத்தில் 1985 இல் வெடித்தும் சிதறியது.
இக் காலகட்டத்துள் நடந்த இயக்கத்தின் துரித உள்ளக மாற்றங்களிலிருந்து பிறந்த கதைதான் புதியதோர் உலகம் நாவல். அது உண்மைகளை அடிப்படையாகக் கொண்டது. புனைவையல்ல. இக் காலகட்டம் நானும் பின்தளத்தில் (தமிழகம்) பயிற்சி முகாமில் இருந்ததால் இதன் உண்மைத்தன்மையில் எனக்கு எந்தச் சந்தேகமுமில்லை.

இந் நூல் இலக்கியம் அரசியல் என்ற இரு பரிமாணங்களில் விரிந்தாலும் அது எழுதப்பட்ட நோக்கம் த.ம.வி.கழகத்துள் நடந்த உள் அராஜகங்களையும் ஜனநாயகமின்மையையும் மக்கள்முன் தாமதமின்றி முன்வைப்பதாகும். நீங்கள் வெளியில் நின்று பார்த்து பிரமிப்பது போன்ற அமைப்பல்ல அது, உள்ளே சிதைந்துகொண்டிருக்கிற அமைப்பு என மக்களுக்கு செய்தியை அறிவித்த நூல் அது. ஒரு தலைமறைவு இயக்கத்தின் துண்டுப் பிரசுரம் போல இந்த நூலும் இரகசியமாகவே விநியோகிக்கப்பட்டது.
1985 பெப்ரவரியில் நடந்த மத்தியகுழுக் கூட்டத்தின் பின் உட்கட்சிப் போராட்டத்தில் நம்பிக்கையை முற்றாக இழந்தும் அதன் உளவுப்படையிடமிருந்து தப்பவேண்டும் என்ற எச்சரிக்கையும் கொண்ட சில மத்தியகுழு உறுப்பினர்களும் தளத்திலிருந்த முன்னணிச் செயற்பாட்டாளர்களும் தலைமறைவாகினர். தம்மை தீப்பொறிக் குழு என அடையாளப்படுத்திய அவர்கள் இந் நூலினூடாக இயக்கத்தை அம்பலப்படுத்துவதை செய்தார்கள். அத்தோடு தமிழீழ விடுதலையில் தாம் தொடர்ந்து செயற்படுவோம் என பிரகடனமும் செய்தார்கள். மக்களுக்கு விடுதலையில் நம்பிக்கையீனம் வந்துவிடாதபடி மிக அவதானமாக இந் நூல் எழுதப்பட்டிருக்கிறது.
எப்படியோ பின்னரான காலங்களில் அந்த தீப்பொறி அமைப்பும் உருக்குலைந்து போனது ஒரு முரண்நகையாக அமைந்தது. இதன் ஆசிரியர் கோவிந்தன் அவர்கள் 1991 மே 17ம் தேதி புலிகளால் கடத்தப்பட்டு பின் இல்லாமல் ஆக்கப்பட்டார். அதன்பின்னரும் மீண்டெழ முயற்சித்த தீப்பொறி (தமிழீழ மக்கள் கட்சி) அமைப்புக்குள் ஏற்பட்ட உள்ளக முரண்பாடுகளானது அந்த அமைப்பையும் இல்லாமலாக்கியது. இதற்கான பிரதான காரணமாக அந்த அமைப்புக்குள் நிகழ்ந்த (புலிகளின்) ஊடுருவல் இருந்தது என்ற ஒரு குற்றச்சாட்டும் உண்டு.
இந் நூலின் முக்கிய பாத்திரம் சங்கர். அவரது தந்தை கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தவர். சங்கர் தளத்தில் அரசியல் வேலை செய்து, பின் பின்தளத்துக்கு (தமிழகத்துக்கு) பயிற்சிக்காக செல்கிறான். இடையில் பயிற்சி முகாமிலிருந்து சென்னையிலுள்ள கழகக் காரியாலயத்தில் பணிபுரிய சந்தர்ப்பம் கிடைக்கிறது. பின் விசாரணைக்காக B-முகாம் சவுக்கம் காட்டினுள்ளிருந்த சித்திரவதைக் கொட்டிலுக்குள் சிறை வைக்கப்படுகிறான். அங்கிருந்து தப்பியோட உதவி கிடைக்கிறது. ஒருவாறு தப்பிவிடுகிறான்.
நமது தோல்விக்கான மிகப் பெரும் பாடத்தை கற்றுக்கொள்வதற்கான பல தளங்கள் இந் நூலினுள் காணக் கிடைக்கின்றன. அந்த வகையில் இந் நூல் தனியே த.ம.வி.கழகத்தையும் தாண்டி ஒரு விடுதலைப் போராட்ட அமைப்பு சந்திக்க வேண்டியிருக்கிற சவால்களை அடையாளம் காட்டுவதாலேயே கழகம் இல்லாமல் போனபின்னும்கூட இந் நூல் அதன் வாழ்காலத்தை இளமையாகவே வைத்திருக்கிறது. தமிழ்ச் சினிமாபோல ஏதோ கழகத்துள் நல்லவர்களும் கெட்டவர்களும் இருந்தார்கள். அவர்களுக்கிடையிலான போராட்டம் என்ற மாதிரியான எளிமைப்படுத்தப்பட்ட வடிவத்துள் நாம் சுழல முடியாது என்பதை பிரதி கட்டுடைக்கிறது.
கழகம் இடதுசாரியக் கண்ணோட்டம் கொண்டவர்களை கொண்டிருந்ததால் தளத்தில் அரசியல் சிந்தனையில் அது முன்னிலைப்படுத்தப் பட்டதாகவும் செயற்பாட்டில் ஒரு பிரக்ஞைபூர்வமும் கொண்ட தோழர்களை அது தன்னகத்தே உருவாக்கத் தொடங்கியிருந்தது. அதற்கான நிர்வாகக் கட்டமைப்புகளும் உருவாக்கப்பட்டிருந்தன. பெண்களினது பங்களிப்பும் முக்கியத்துவப்படுத்தப் பட்டது. ஆனால் பின்தளம் அப்படியிருக்கவில்லை. அங்கு வெளிப்படைத்தன்மை இருக்கவில்லை. இடதுசாரியத்தன்மை குறிப்பிட்ட நபர்களோடு மட்டும் குறுகியிருந்தது. இராணுவப் பயிற்சியாளர்களிடமும் பயிற்சி எடுத்தவர்கள் பலரிடமும் இடதுசாரியத்தன்மை அறவே இருக்கவில்லை. இந்த விடயங்கள் இந் நூலில் வரும் சம்பவங்கள் உரையாடல்கள் மூலம் வெளிக்கொணரப் படுகிறது.
சமூகத்தின் பண்பாட்டிலும் (பாடசாலை, குடும்பம்) போன்ற சிவில் சமூக அமைப்புகளிலும் இயல்பாக ஊறியிருக்கும் வன்முறையின் கூறுகளும் அதற்கான அதிகார நிலைகளும் மனப்பான்மையும் ஏற்பு அல்லது ஜீரணிப்பும் என உலாவிய வன்முறைக் கூறுகள் இங்கு விடுதலை இயக்க முகாம்களினுள்ளும் உலவவே செய்தன. அது இராணுவத்தை மேன்நிலையில் வைத்ததன் மூலம் வளர்ந்தது என்பதைவிடவும் தனது உளவியல் சிக்கலை (பழிவாங்கும், தண்டனை வழங்கும், அதில் இன்பம் காணும் மனவமைப்பை) தீர்த்துக் கொண்டது என்பதே உண்மை என்பது இந் நூலில் வரும் சித்திரவதை முகாம் நவடிக்கைகளில் மட்டுமல்ல கடைசி மத்திய குழு விவாதத்திலும் இந்தப் போக்கு வெளிப்பட்டதை காண முடிகிறது.
த.ம.வி.கழகத்தின் தலைமை இடதுசாரியத்தை ஒரு அடையாளமாக வைத்திருந்ததே அல்லாமல், இடதுசாரிய நடைமுறையில் கறாரானதாகவோ சிந்தனைமுறையில் தூர நோக்குடனோ செயற்படவில்லை என்பதையும் இந் நூலில் காணலாம். தோழர் உமாமகேஸ்வரன் என்ற வார்த்தை பெரிசு, பெரியையா என்ற வார்த்தைகளால் இடம்பெயர்க்கப்பட்டது. தலைமை (செயலதிபர்) இதுபற்றி கவலைப்படாமல் அல்லது அதை விரும்பி ஏற்றுக் கொண்டு இருந்ததோடல்லாமல், இராமநாதன், தேவன் போன்ற பாத்திரங்களின் ஊதாரித்தனம் மற்றும் நடத்தைகள் எல்லாவற்றிலும் நசிந்து கொடுத்ததை நூலாசிரியர் சொல்லிச் செல்கிறார். கழகத்துக்கு ஆயுதங்கள் பெறுவதற்காக வெளிநாட்டு கழக உறுப்பினர்கள் சிலர் போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டதைக்கூட செயலதிபர் கறாராக அணுகவில்லை. மாறாக அதை அவர் அனுமதித்தார். வெளிநாட்டு கழகப் பிரமுகர்கள் பின்தளம் வரும்போதெல்லாம் எப்படி ஊதாரித்தனமாக நடந்துகொண்டார்கள் அதில் இராமநாதன் தேவன் போன்றவர்கள் எப்படி தோய்ந்தெழுந்தார்கள் என நூல் உதாரணங்களினூடாகச்; சொல்கிறது. இவ்வாறான விடயங்களில் கண்டும் காணாமல் இருந்துவிடுவது என்ற சந்தர்ப்பவாத நிலைப்பாட்டை செயலதிபர் எடுத்த சம்பவங்கள் இந் நூலில் வருகின்றன.
உளவுப்படையின் செயற்பாடுகள் செயலதிபருக்குத் தெரியாமல் செய்யப்பட்டது என்றவாறாக படம் காட்டப்பட்டது. ஆனால் அந்த உளவுப்படை செய்யும் சித்திரவதைகளில் ஒன்றாக தலைகீழாக கட்டி தொங்கவிட்டு தாக்கும் முறை இருந்தது. அந்த தலைகீழ் நிலையை உளன்றி என அழைப்பர். செயலதிபர் ஏற்கனவே குமுகாயம், கமுக்கம் என பழந்தமிழ் இலக்கியத்திலிருந்து உருவியெடுத்து சொற்களை பாவிக்கும் பழக்கமுள்ளவர். அந்த வழியிலேயே உளன்றி என்ற தூய தமிழ்ச் சொல்லும் செயலதிபரூடாக பயன்பாட்டுக்கு வந்ததென இந் நூலில் குறிப்பிடப்படுகிறது. அதன்மூலம் அவருக்குத் தெரிந்தே இந்த சித்திரவதைக்கூடம் இயங்கியது என்பதை நூலாசிரியர் புரியவைக்கிறார்.
அரசியல் செயலர் கலாதரன் (சந்ததியார்) ஒரு இடதுசாரியச் சிந்தiனாளரும் செயற்பாட்டாளரும் ஆவார். அவரும் செயலதிபரும் கடந்தகால கூட்டுச் செயற்பாடுகளினூடாக மிக நட்பாகவும் நெருக்கமாகவும் இருந்தவர்கள். கூட்டாகவும் பல முடிவுகளை ஆலோசித்து எடுத்தவர்கள். மேற்கூறிய சீர்கேடுகளை அல்லது முரண்செயற்பாடுகளை கலாதரன் செயலதிபரிடம் முன்வைத்தார். முடியாதபோது மத்தியகுழுவரை அதை கொண்டுசென்று போராடினார் என்பதையும் நாவல் சொல்கிறது. பின் கலாதரன் -கழகத்தின் பலமான ஒரு கட்டுமானமாக உருவாகிய- உளவுப்படையின் அராஜகத்துக்கு பலியாகிறார்.
ஆரம்பகாலத்தில் சுந்தரம் என்ற த.ம.வி.கழகத் தோழர் புலிகளால் சித்திரா அச்சகத்தில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார். நமது விடுதலைப் போராட்டத்தில் குட்டிமணி, செட்டி போன்ற கள்ளக்கடத்தல் தாதாக்கள் மற்றும் ஊர்ச் சண்டியர்கள் என்பவர்களின் பாத்திரம்-அவர்களது தொழில் சார்ந்து- பொலிஸ் உடன் மோதிய பின்னணி கொண்டதால் பெயர் பெற்றவை. ஆயுதங்களை பாவிக்கவும் அவர்களில் பலருக்குத் தெரிந்திருந்தது. அதனால் இவர்கள் புதிதாக எழுந்த ஆயுதப் போராட்டத்தில் ஆரம்பகால முன்னோடிகளாக ஆகிய சந்தர்ப்பங்கள் அதிகம். இவ்வாறே சுந்தரத்துடன் திரிந்த குழு -அவரது கொலைக்குப் பின்- சுந்தரம் படைப் பிரிவு என அழைக்கப்பட்டார்கள். அவர்கள் கழக இராணுவ கட்டமைப்பினுள் ஒரு பிரிவு அல்ல. அரசியலிலும் இராணுவத்திலும் ஒருசேர ஈடுபாடு கொண்டு இயங்கியவர் சுந்தரம். தலைமைப் பண்புக்குரிய எல்லா அம்சங்களும் கொண்டவர் என கழகத்தினுள் நல்ல பெயரொன்று இருந்தது. ஆனால் அவரது விசுவாசிகள் சுந்தரத்தின் கொலைக்கு பழிவாங்கும் வெறிகொண்டவர்களாகவும், இடதுசாரிய போராட்டம் குறித்தோ விடுதலை அரசியல் பற்றியோ எந்த அக்கறையுமில்லாதவர்களாகவும் இருந்தவர்கள். கழகத் தலைமைக்கு அடிவருடிகளாக இருந்த அவர்களில் சிலர் மத்திய குழுவிலும், தளத்தில் இராணுவப் பிரிவு பொறுப்புகளிலும் பலமானவர்களாக மாறினர். உளவுப் படையிலும் அவர்களே இருந்தனர். கழகத்துள் நிலவிய இராணுவ வாதத்துக்கு முகாம்களில் பயிற்சி எடுத்தவர்கள் அல்ல பொறுப்பாளர்கள். இந்த லும்பன்களே பொறுப்பானவர்கள். இதை இந்த நூல் அழுத்தமாக முன்வைக்கவில்லை.
அத்தோடு B-முகாமின் பொறுப்பாளர் (மதன்) தப்பியோடி பின் பிடிபட்டு முகாமுக்கு அதிகாலை இழுத்துவரப்பட்டு முகாம் தோழர்கள் முன்னிலையில் சித்திரவதை செய்யப்பட்டதில் மேற்கூறிய லும்பன்களே ஈடுபட்டவர்கள். அந்த சம்பவத்தை கண்ணால் கண்ட 300 க்கு மேற்பட்ட தோழர்களில் நானும் ஒருவன். எந்த முகாம் தோழருமே அதில் சம்பந்தப்படவில்லை. ஆனால் இந்த நூலில் முகாம் தோழர்களும் தாக்கியதாக கூறப்பட்டிருப்பது அதிர்ச்சியாக இருந்தது. அதில் எந்த உண்மையும் இல்லை. அதை ஆதாரப்படுத்த, துணிவு காணாது என ஒரு ‘சோணகிரியை‘ (மோசமான வார்த்தைப் பிரயோகம்) அழைத்து அடிக்க விட்டார்கள் என்கிறார் நூலாசிரியர். நாவல் என்ற இலக்கிய வகைமைக்குள் இதை ஒரு புனைவாக விட்டுவிடலாம். ஆனால் அரசியல் ரீதியில் மிகப் பெரிய கருத்து மாற்றம் ஒன்றை அது செய்துவிடுகிறது என்பதால் அதுபற்றி குறிப்பிட்டாக வேண்டும். உண்மையில் அது அந்த இடத்தில் நடந்தது அல்ல. மதன் உளன்றியில் தொங்கவிடப்பட்ட பின்னரே அந்த கொட்டிலுக்குள் (நாலாம் மாடி) நிகழ்த்தப்பட்ட கொடுமை அது. தாக்குவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டவர் என்னுடன் இருந்த தோழர் என்பதோடு அத் தாக்குதல் பகலில் மூடிய கொட்டிலுக்குள் நடந்தது.
இயக்கங்களுக்கு இடையில் தளத்தில் ஒற்றுமை நிலவியது என்பது நானும் அனுபவித்த ஒன்றுதான். முரண்கள் வந்துவிடாதபடி அரசியல் பிரிவுத் தோழர்கள் மிக எச்சரிக்கையாகவே இருந்தனர். மக்களும் எல்லா இயக்கத்தவர்களுக்கும் ஆதரவு, அடைக்கலம் கொடுத்ததும் உண்மை. சிறையில் அகப்பட்டிருந்த எல்லா இயக்க தோழர்களுக்கு இடையிலும் ஒற்றுமை இருந்தது என்பதையும் இந் நூல் தெளிவாக முன்வைக்கிறது. இந்த எல்லா நேரம்சங்களும் எப்படி உருத்திரளத் தொடங்கியிருந்தது என்பதை நாவலில் நாதன் என்ற கதாபாத்திரத்தினூடாக தெளிவாக முன்வைக்கப்பட்டிருக்கிறது. இந்த நேரம்சத்துக்கு இடையூறாக இருந்ததில் புலிகள் தரப்பில் அதன் தலைவர் த.வி.ம.கழகத்தின் தலைவருக்கு ஆரம்பத்தில் வழங்கியிருந்த மரணதண்டனைத் தீர்ப்பும் அதை பாண்டிபஜாரில் நடைமுறைப்படுத்த எத்தனித்து தோல்விகண்டதும் ஒரு காரணம் எனில், மறுபக்கம் சுந்தரத்தின் கொலைக்கு பழிவாங்கத் திரிந்த சுந்தரம் படைப்பிரிவு லும்பன்கள் மறுபக்கக் காரணம். இந்தக் குழுவை கழக இராணுவம் என்ற பொதுமைப்படுத்தலுக்குள் இந் நூல் கடந்துசெல்வதாகத் தோன்றுகிறது.
இந் நூலில் ஒரு தொகை பாத்திரங்கள் வந்து போகின்றன. அதை வாசகர் கதையாக வாசிப்பதில் சிரமம் ஏற்படும். ஆனால் நூல் அதைத் தாண்டிச் சென்று சமூகமனநிலைக்குள் ஊடுருவுவதால் இந் நூல் அரசியலாளர்களை மட்டுமல்ல, எல்லா வாசகர்களையும் காலம் தாண்டியும் உள்ளிழுத்து விடுகிறது. அது மக்களை எதுவும் தெரியாத மந்தைகளாக உருவகிக்காமல் மக்களை ஆதாரசக்திகளாக நிகழ்வுகளினூடாக முன்நிறுத்துகிறது. அது எவ்வாறு போராட்டத்தோடு மாற்றமடைந்து பொதுப்புத்தியின் மட்டத்தை உயர்த்துவதிலும் சமூகப் பிரக்ஞையை (கூட்டுப் பிரக்ஞையாக) கட்டியமைப்பதிலும் சென்றுகொண்டிருந்தது என்பதை (தளத்தில்) பாத்திரங்களினூடாக வெளிப்படுத்துகிறது. சங்கரின் அம்மா, சங்கரின் காதலி நிர்மலா, அவளது தாய் தந்தை, நாதனுக்கு உதவிய வயோதிப தம்பதிகள் என்பவர்கள் இந்த உருமாற்றத்தை அடைவதை நாவல் அழகாக முன்வைத்திருக்கிறது. அந்த பரிணாம வளர்ச்சியை இலக்கிய நயத்துடனும் அரசியல் இயங்கியலுடனும் எழுதிச் செல்கிறார் நூலாசிரியர். இந்த அம்சம் நாவலின் அழகியல் எனலாம். விடுதலை உணர்வு எவ்வாறு வர்க்க வேற்றுமைகள் தகர்கிற பொதுப்புள்ளியை வந்தடைகிறது என்பதை நிர்மலாவின் பாத்திரத்தினூடாக நூல் வெளிப்படுத்துகிறது.
இவ் விடுதலைப் போராட்டம் படிப்படியாக பெண் விடுதலை நோக்கிய ஆளுமைகளை உருவாக்கத் தொடங்கியதற்கு கீதா ஒரு உதாரணம். அவளது போராட்டக் குணமும் வெளிப்படைத்தன்மை வாய்ந்த பேச்சுகளும் நேரடியாக விவாதிக்கும் தன்மையும் நூலில் வெளிக்கொணரப் படுகிறது. மகளிர் அமைப்பு உருவாக்கங்களும் செயற்பாடுகளும் மட்டுமன்றி சிறைப்பிடித்துச் செல்லப்பட்ட தமது பிள்ளைகளை விடுவிக்கக் கோரி தாய்மார் வீதிக்கு இறங்கத் தொடங்கிய சமூக அசைவியக்கத்தையும் நூல் பேசுகிறது.
ஒரு விடுதலை அமைப்பு என்பதுள் கூட்டுப் பிரக்ஞை மட்டுமல்ல தனிப் பிரக்ஞையும் முக்கியமானது. இது எல்லாவகை போராட்டங்களிலும் புரட்சிகளிலும் மிக அவசியமானது. ஒரு பொது இலக்கை அடைய கூட்டாக ஒன்றுபடுகிற கூட்டுப் பிரக்ஞை அல்லது கூட்டுருவாக்கம் என்பது அந்த இலக்கு இல்லாமல் போக சிதைந்துபோய் விடுகிறது. அது சிதைந்த பின்னும் அரசியலையும் அறத்தையும் போராட்டக் குணத்தையும் தாங்கிப் பிடிக்கிற தனிநபர் வாழ்முறையானது தனிப் பிரக்ஞை (தன்னுருவாக்கம்) இனூடேதான் சாத்தியமாகும். கம்யூனிஸ்ட் கட்சிகளிலிருந்து வெளியேறியபின் தனது வாழ்நாள் வரை அந்த சமூகம்சார் தனிப்பிரக்ஞையுடன் வாழ்ந்த, வாழுகிற கம்யூனிஸ்டுகளை எம்மில் பலரும் கண்டிருப்போம். உலகில் நடந்த புரட்சிகள் எல்லாவற்றையும் கூட்டுப் பிரக்ஞைதான் சாத்தியமாக்கியது. அது நிகழ்ந்து முடிய அல்லது தோற்றுப் போக கூட்டுப் பிரக்ஞையும் சிதைந்துபோய் விடுகிறது. தனிப் பிரக்ஞையே அதே சமூகம்சார் வாழ்முறையை அவர்கள் தொடரச் செய்கிறது. தாம் சார்ந்த அமைப்பின் கூட்டு ஆளுமைக்குள் கடைப்பிடித்தபடி ஆணாதிக்க மனோபாவம் அற்றவர்களாகவும் சாதிய மனநிலை அற்றவர்களாகவும் சக மனிதர்களை தன்போலவே மதித்து நடப்பவர்களாகவும் இருப்பர். போராட்டம் முள்ளிவாய்க்காலில் வீழ்ந்தபின் உதிரியாகிப்போன ஆண் போராளிகள் பலரும் பெண் போராளிகளை திருமணம் செய்ய தயங்கியதற்கான காரணத்தை இங்குதான் தேட முடிகிறது.
இங்கு சங்கரின் அப்பா தனிப் பிரக்ஞை கொண்டவராக வாழ்கிறார். தனது குடும்பத்துள்ளும் அதை கடைப்பிடிக்கிறார். காதலுக்காக தனது வசதி நிறைந்த வாழ்வை நிர்மலா உதறிவிட்டு சங்கரின் வீட்டுக்கு வர எண்ணியபோதும் அவர் இதையே சொல்கிறார். எந்த சொத்துகளுடனும் இங்கு வரக்கூடாது எனவும் தமது இந்த வாழ்நிலையுள் இணைந்து வாழ தயாராக இருக்க வேண்டும் எனவும் அவளை தனது மகளாக தான் பார்ப்பேன் என்பதையும் கறாராகவே சொல்லிவிடுகிறார். அந்த சூழ்நிலைக்குள் வளர்ந்த சங்கரும் அப்படியே ஆகிறான். சங்கர் பயிற்சிக்காக பின்தளம் போவதை அந்தத் தந்தையால் அனுமதிக்க முடிகிறது, ஜீரணிக்க முடிகிறது. இந்த நிலை பயிற்சிக்கு ஓடிப்போனவர்களில் 95 வீதத்திருக்கும் வாய்த்திருக்கவில்லை.
அத்தோடு இலங்கை முழுவதுக்குமான வர்க்கப் புரட்சியை முன்வைத்த கம்யூனிஸ்ட் கட்சியின் தோல்வியிலிருந்து அவர் கற்றுக்கொண்ட பாடம் தேசிய இனப் போராட்டத்தை ஆதரிக்க வைக்கிறது. அதன் மூலம்தான் தமிழ், சிங்கள ஒருங்கிணைந்த புரட்சி சாத்தியம் என நம்புகிறார். இதே கோட்பாட்டை த.ம.வி.கழகம் முன்வைப்பதோடு அல்லாமல் இன்னும் மேலே போய் உலகப் புரட்சியின் ஓர் அங்கம் தமிழீழ விடுதலைப் போராட்டம் என மிகைப்படுத்தி சிலாகித்தது. கழக இலச்சினையிலும் அதையே பிரதிபலித்தது. அதே மிகையை அதிலிருந்து வெளியேறிய தீப்பொறிக் குழுவும் கொண்டிருந்தது என்பதை நூலும் வெளிக் காட்டுகிறது.
“யுத்தம் என்பது இரத்தம் சிந்தும் அரசியல்
அரசியல் என்பது இரத்தம் சிந்தாத யுத்தம்“
என வடமாகாண அமைப்பாளர் கோபாலன் முன்வைக்கிற விளக்கம் பொதுவாக சரிதான். ஒடுக்கப்படும் சக்திகளின் போராட்டம் சார்ந்து இந்த மேற்கோளை அணுகுகிறபோது, அது ஆயுதப் போராட்டத்தினதும் நியாயப்பாட்டை வலியுறுத்துவதாக இருக்கும். அது அன்று சரியாக இருக்கலாம். இப்போ இல்லை. அப்போ சோவியத் யூனியன் தலைமையிலான சோசலிச முகாமும் அமெரிக்கா தலைமையிலான முதலாளித்து முகாமும் என இரு துருவங்களாக உலகம் பிளவுண்டு கிடந்த காலகட்டம். அந்த நிலை 1991 இல் தகர்ந்து போனது. பின் உலகமயமாக்கல் கொண்ட ஒற்றைத் துருவ உலக அதிகாரமே நிலவத் தொடங்கி நீடிக்கிறது. இதில் ஆயுதப் போராட்டம் மீதான கேள்விகள் சோசலிச முகாமை நம்பியிருந்த போராட்ட அமைப்புகளின் தோல்வியுடன் எழத் தொடங்கின. 90 களின் பின்னான இந்த 30 வருட காலகட்டம் பூகோள அரசியலில் ஏற்படுத்தியிருக்கிற மாற்றம் சோசலிசப் புரட்சி என்பதை மறுவரைவு செய்ய வேண்டிய தேவையை கோரி நிற்கிறது.
என்றபோதும் இன ரீதியிலோ சமூக ரீதியிலோ பொருளாதார ரீதியிலோ நிலவுகிற ஒடுக்குமுறைகள் நீங்காத வரையிலும் அதற்கெதிரான போராட்டங்கள் வெவ்வேறு வடிவங்களில் வெளிப்படும் என்பதற்கு நடந்த அரபு வசந்தம் மட்டுமல்ல, இலங்கையில் அண்மையில் நடந்த காலிமுகத் திடல் போராட்டமும் ஒரு சாட்சி. தோல்விகளிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டுதான் வரலாறு முன்னேற முடியும். அந்த வகையில் இன ரீதியிலான ஒடுக்குமுறை நிலவுகிற வரையிலும் புதியதோர் உலகம் நாவல் உயிர்ப்போடு இருக்கும்.
புதியதோர் உலகம் நூலை வாசிக்காதவர்கள் சுடுமணல் வலைப்பதிவில் அதன் இரண்டாவது பதிப்பை வாசிக்கலாம்