Spread the love

திங்கள் முதல் வெளியிடங்களில் 6 பேருக்கு மேல் கூட முடியாது.

செப்டெம்பர் 08, 2020: மீண்டும் கோவிட்-19 தொற்று வேகம் அதிகரிப்பதால், பிரித்தானியா தனது கோவிட் நடமாட்ட விதிமுறைகளை மேலும் இறுக்குகிறது.

சமூக வைபவங்கள், திருமணம் போன்ற நிகழ்வுகளுகளில் அதிக பட்சம் 30 பேர் வரையில் பங்கு பற்றலாமெனத் தளர்த்தப்பட்டிருந்த விதி திங்கள் முதல், 6 பேராகக் குறைக்கப்பட்டிருக்கிறது. வீடுகளில் நடக்கும் நிகழ்வுகளில் இரண்டு குடும்பங்களுக்கு மேல் பங்குபற்ற முடியாது என்ற விதியில் மாற்றம் செய்யப்படவில்லை.

சில மாதங்களின் முன், கோவிட் தொற்று உச்சத்தைத் தொட்ட நாளிலிருந்து, படிபடியாகக் குறைந்து வந்த தொற்று வேகம் இப்போது திடீரென அதிகரிக்கத் தொடங்கியிருப்பதும், அதே வேளை, 30 பேர் கொண்ட குழு சட்ட ரீதியாகச் சேரும்போது அவர்களை ஒழுங்குக்குள் வைத்திருப்பது பொலிசாருக்குச் சிரமமாக இருப்பதாக அவர்கள் முறையிட்டிருந்ததும், இப் புதிய விதிகளுக்குக் காரணம் எனக் கூறப்ப்டுகிறது.

கடந்த ஞாயிறு, திங்கள், இரண்டு தினங்களிலும் 3,000க்கு மேல் தொற்றுக்கள் பதியப்பட்டன எனவும், செவ்வாயன்று மட்டும் 2,400 தொற்றுக்கள் பதியப்பட்டுள்ளன எனவும் தரவுகள் கூறுகின்றன.

இதே வேளை, பிரதேசவாரியாக, தொற்று அதிகமுள்ள இடங்களில் உள்ளூர் ஊரடங்குகள் இப்போதும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந் நடவடிக்கை தொடருமென அறிவிக்கப்படுகிறது.

புதிய விதிகள்:

  • பொதுப் பூங்கா, வீட்டின் வளவு, குடி நிலையங்களுக்கு வெளியே அல்லது பொது இடங்கள் எங்காயினும் 6 பேருக்கு மேல் கூடி நிற்க முடியாது.
  • ‘Bubble’ என்று சொல்லப்படும் ஏற்கெனெவே ஓரிடத்தில் வதியும் குழு (உ+ம் குடும்பம்), 6 பேருக்கு மேலாயிருப்பின் அது ஏற்றுக்கொள்ளப்படும். இப்படி இரண்டு ‘bubble’ கள் திருமணம், மரணச் சடங்கு, ஒழுங்குபடுத்தப்பட்ட விளையாட்டு வைபவம் ஆகியவற்றில் பங்கு பற்றலாம். அனைவரும் கோவிட் விதிகளைப் பின்பற்ற வேண்டும்.
  • வேலை அல்லது கல்வியின் நிமித்தம் இப்படி 6 பேர்களுக்கு மேற்பட்ட ‘bubble’ அனுமதிக்கப்படும்.
  • 6 பேர் உச்ச வரம்பு சகல வயதினருக்கும் பொருந்தும்.
  • ஸ்கொட்லாந்து, வேல்ஸ் பிரதேசங்களில் இவ் விதிகள் நடைமுறைக்கு வராது. அந்தந்த பிரதேசங்களுக்குரிய விதிகளே நடைமுறைப்படுத்தப்படும்.
  • பொலிசாரின் ஆலோசனைகளையோ, புத்திமதிகளையோ அனுசரிக்காத பட்சத்தில், இவ் விதிகளை மீறுபவருக்கு 100 பவுண்டுகள் அபராதம் விதிக்கப்படும். ஒவ்வொரு தடவையும் மீறும்போது தண்டம் இரட்டிப்பாகி அதிக பட்சம் 3,200 பவுண்டுகள் மட்டும் அபராதம் அறவிடப்படும்.
Print Friendly, PDF & Email
Related:  கோவிட்-19 | இரண்டு மடங்கு நோயாளிகள் உணவகங்களில் உணவருந்தியவர்கள் - ஆய்வு
கோவிட்-19 | 6 பேருக்குமேல் கூடமுடியாது – இறுக்குகிறது இங்கிலாந்து!

கோவிட்-19 | 6 பேருக்குமேல் கூடமுடியாது – இறுக்குகிறது இங்கிலாந்து!