Spread the love

பிறர்பொருளெதிரிப் பரிசோதனை (antibody test) மூலம் கண்டு பிடிப்பு

கோவிட்-19 நோய்க்குக் காரணமான SARS CoV-2 வைரஸின் பரவலின் வியாபகத்தை அறிய கனடிய இரத்த சேவைகளும் (Canadian Blood Services), கோவிட்-19 நிர்ப்பீடனச் செயலணியும் (COVID-19 Immunity Task Force (CITF)) இணைந்து சில ஆய்வுகளை மேற்கொண்டிருந்தன.

கனடாவின் சகல மாகாணங்களிலும் வாழும் மக்களின் இரத்தத்தைப் பரிசோதனை செய்து அவர்களில் கொறோணாவைரஸ் தொற்று இருக்கிறதா என அறிவதே இந்த ஆய்வின் நோக்கம். ஒருவருக்கு SARS-CoV-2 தொற்று ஏற்பட்டிருந்தால் அவரது உடல் வைரஸ்களை அழிப்பதற்கெனெ உருவாக்கும் பிறபொருளெதிரி (antibodies) அவரது இரத்தத்தில் இருக்கும். இதன் மூலம் அவருக்குத் தொற்று ஏற்பட்டிருக்கிறதா என அறியலாம்.

மேற்கண்ட இரு அமைப்புக்களும் செய்த, சீரப் பரவல் ஆய்வு (seroprevalence study) எனப்படும் இவ்வாய்வு மே 9 முதல் ஜூன் 18 வரை, எடுக்கப்பட்ட 37,373 பேரின் இரத்த மாதிரிகளில் செய்யப்பட்டது.

கனடிய இரத்த சேவைகள், கியூபெக் மாகாணத்தின் ஹேமா-கியூபெக் ஆகியன தம்மிடம் கனடியர்கள் தானம் செய்யும் இரத்தத்தின் மாதிரிகளை இப்பரிசோதனைக்காகப் பாவித்தார்கள். இதில் கொறோணாவைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டாலும் அவர்களுக்கு அது பற்றி அறிவிக்கப்பட மாட்டாது எனவும் HIV / AIDS போன்ற தொற்றுக்கள் போலல்லாது, இரத்த மாற்று சிகிச்சையின்போது கோவிட்-19 ஒருவரிலிருந்து இன்னொருவருக்குத் தொற்றுவதில்லை என்பதாலும் இந்நடைமுறை கையாளப்படுகிறது என கனடிய இரத்த சேவைகள் அறிவிக்கிறது.

இக்குறிப்பிட்ட ஆய்வின்போது கனடாவின் அத்தனை மாகாணங்களிலும் தானம் செய்யப்பட்ட இரத்தத்தில் 37,373 மாதிரிகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன. இது இந்நிறுவனங்களின் ஆய்வின் முதலாவது கட்டம் (Phase 1).

இப் பரிசோதனையில், 1% த்துக்கும் குறைவானவர்களில் இவ்வைரஸுக்கு எதிரான பிறபொருளெதிரிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்கள் ஒப்பீட்டளவில் சுகதேகிகள் எனக் கூறப்படுபவர்கள்.

இதன் பிரகாரம், கனடியர்களில் பெரும் பங்கினரில் இவ்வைரசுக்கு எதிரான பிறபொருளெதிரிகள் இல்லாமையால் இவர்கள் நோய்த்தொற்றுக்குள்ளாவதற்கான அபாயம் இருக்கிறது என்பதே முடிவு. அதாவது மந்தை நிர்ப்பீடனம் (herd immunity) எனப்படும் இயல்பாக உருவாகும் நோயெதிர்ப்பு 99% கனடியர்களில் இல்லை என்பதே முடிவு.



மாகாண ரீதியாக நிர்ப்பீடன ஆற்றலை உருவாக்கியோரின் பரம்பல்

மாகாணம்சீரப் பரம்பல்
பிரிட்டிஷ் கொலம்பியா0.5%
அல்பேர்ட்டா0.37%
சஸ்கச்செவன்0.46%
மனிற்றோபா0.56%
ஒன்ராறியோ0.96%
நியூபிரண்ஸ்விக்0.26%
நோவா ஸ்கோஷியா0.36%
நியூபவுண்ட்லாண்ட் அண்ட் லாப்றடோர்0.29%
பிறின்ஸ் எட்வார்ட் ஐலண்ட்0.00%
கனடா முழுவதும்0.70%
கியூபெக் (ஹேமா-கியூபெக்கினால் செய்யப்பட்டது / உதேசமாக)2.23%
தகவல்: கனடிய இரத்த சேவைகள்
Lab team members Stacey Vitali, Carissa Kohnen, Andy Tshiula Kalenga and Valerie Conrod support the work of Canada’s Immunity Task Force to provide the data needed to understand the scale of COVID-19 infection in Canada.
இவ்வாய்வைச் செய்த குழுவினர்: ஸ்தேசி வைற்ராலி, கரிசா கோணென், அண்டி கலிங்கா, வலறீ கொன்றொட்

நோய்த் தொற்று அதிகமாகக் காணப்படுபவை பொதுவாக பெருநகரங்கள் எனவும் மாகாண ரீதியாக கியூபெக் மற்றும் ஒன்ராறியோ அதிக நோய்ப்பரவலைக் கொண்டவை எனவும் இவ்வாய்வு தெரிவிக்கிறது. இரத்த தானம் செய்தவர்கள் 17 வயதுக்கு மேற்பட்டவர்கள் எனவும், மிகக் குறைந்த அளவினரே 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் எனவும் கனடிய இரத்த சேவைகள் கூறுகிறது.

Related:  கனடா | மீண்டுமொருதடவை ரயிலைத் தவறவிட்ட கன்சர்வேட்டிவ் கட்சி

இப் பரிசோதனையின் அடுத்த கட்டம் தொடரவிருப்பதாக அது அறிவித்திருக்கிறது.

Print Friendly, PDF & Email
கோவிட்-19 | 1% த்துக்கும் குறைவான கனடியர்களே நோயெதிர்ப்பை உருவாக்கியிருக்கிறார்கள் – கனடா இரத்த சேவைகள் அறிக்கை

கோவிட்-19 | 1% த்துக்கும் குறைவான கனடியர்களே நோயெதிர்ப்பை உருவாக்கியிருக்கிறார்கள் – கனடா இரத்த சேவைகள் அறிக்கை