Spread the love

கோவிட்-19 நோயைத் தீர்க்கத் தாம் மூலிகை மருந்தொன்றை வெற்றிகரமாகப் பாவித்துள்ளதாக அந் நாட்டின் ஜனாதிபதி ஆண்ட்றி ராஜோலினாஅறிவித்துள்ளார்.

கோவிட்-19 | வைரஸை மடக்கும் மடகாஸ்கார் மூலிகைத் தேனீர்! 1
Artemisia (wormwood)

கோவிட்-ஓர்கானிக்ஸ் என்ற பெயரில் பாவனைக்கு வந்திருக்கும் இம் மருந்தை பல ஆபிரிக்க நாடுகளும் வாங்கி வருகின்றன என்று தெரிகிறது. இருப்பினும், ஐ.நா.வின் சுகாதாரப் பிரிவு, இம் மருந்தைப் பாவிக்க வேண்டாமென்று அறிவித்தல் விடுத்து வருகிறது.

மூலிகைத் தேனீராக இதை அருந்தியவர்கள் 7 நாட்களில் கோவிட்-19 நோயிலிருந்து குணமடந்திருப்பதாக ராஜோலினா ஊடகவியலாளருக்கும், ராஜதந்திரிகளுக்கும் தெரிவித்துள்ளார். மடகாஸ்காரின் இராணுவத்தினர் வீடு வீடாக்ப் போய் இத் தேனீரை வழங்கி வருகிறார்கள்.

மடகாஸ்காரில் இதுவரை 149 பேர் நோய்த் தொற்றுக்கண்டிருந்தும் எவரும் மரணமடையவில்லை.

கோவிட்- ஓர்கானிக்ஸ் இல் என்ன பதார்த்தம் இருக்கிறது?

இம் மருந்து ஆர்டிமிசியா என்ற தாவரத்திலிருந்து செய்யப்படுகிறது. மலேரியாவைக் குணப்படுத்த இம் மருந்து நீண்ட அகாலமாகப் பாவிக்கப்பட்டு வருகிறது என இத் தேனீரைத் தயாரிக்கும் Malagasy Institute of Applied Research கூறுகிறது. மடகாஸ்கார் தீவில் மலேரியாவைக் குணமாக்க இத் தாவரம் 1970 களில் சீனாவிலிருந்து கொண்டுவரப்பட்டது.

தற்போது இது போத்தல்களில் அடைக்கப்பட்டுத் தேனீராக விநியோகிக்கப்பட்டாலும், உடலில் ஊசி மூலம் ஏற்றக்கூடிய வடிவத்தில் அதைச் செய்வதற்கான ஆராய்ச்சிகள் நடைபெறுவதாக ராஜோலினா தெரிவித்துள்ளார்.

உலக சுகாதார நிறுவனம் எதிர்ப்பு?

ஜனாதிபதி ராஜோலினாவின் அறிவிப்பைத் தொடர்ந்து உலக சுகாதார நிறுவனம் இம் மருந்தை உட்கொள்ள வேண்டாமென மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

” உலகத்தின் ஏனைய மக்கள் மீது பரிசோதிக்கப்பட்டு நிரூபிக்கப்பட்ட மருந்துகளை உட்கொள்வதற்கு ஆபிரிக்கர்கள் உரித்துடையவர்கள். இம் மருந்துகள் இயற்கை மூலிகைகளிலிருந்து தயாரிக்கப்பட்டாலும், அது பாதுகாப்பானது, பலன்தரக்கூடியது என கட்டுப்பாடான பரிசோதனைகள் மூலம் நிறுவப்பட்டிருக்க வேண்டும் ” என உலக சுகாதார நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.

அமெரிக்க நோய்க்கட்டுப்பாட்டு மையமும் இது குறித்து மக்களுக்கு எச்சரிக்கையை விடுத்துள்ளது.

அதே வேளை, இம் மூலிகை மருந்தின் பலன். பாதுகாப்பு பற்றிய தரவுகளைக் கேட்டிருப்பதாக ஆபிரிக்க ஒன்றியம் மடகாஸ்காரைக் கேட்டுள்ளது.

மக்களின் அச்சத்தைப் போக்க, ஜனாதிபதி ராஜோலினா, இதன் வெலியீட்டு வைபவத்தில் மக்கள் முன் இத் தேனீரைக் குடித்துக் காட்டினார்.

ஏற்றுமதி

தன்சானியா, லைபீரியா, எக்குவடோரியல் கினி, கினி-பிஸ்ஸோ ஆகிய ஆபிரிக்க நாடுகள் இக் கோவிட்-ஓர்கானிக்ஸ் தேனீரை இறக்குமதி செய்தும், இறக்குமதிக்கான கோரிக்கைகளை விடுத்துமுள்ளன. கடந்த ஞாயிறன்று, தன்சானியாவின் ஜனாதிபதி மகுஃபுலி, விசேட விமானமொன்றை அனுப்பி இத் தேனீரைக் கொண்டுவர ஏற்பாடு செய்துள்ளார். கினி-பிஸ்ஸோ விற்கு மடகாஸ்கார் இலவசமாக இத் தேனீரை ஏற்றுமதி செய்துள்ளது.

Related:  சீன-இந்திய மோதல்: ஆணிகள் பொருத்தப்பட்ட இரும்புக் கம்பிகளைச் சீன இராணுவம் பாவித்திருக்கிறதா?

ஆபிரிக்க கண்டத்தில் லெசோதோ நாட்டைத் தவிர எல்லா நாடுகளுக்கும் நோய் பரவியுள்ளது எனவும் அவர்களில் 1,862 பேர் இதுவரை மரணமாகியிருக்கிறார்கள் எனவும் அறியப்படுகிறது.

இலங்கை, இந்தியா, சீனா போன்ற நாடுகளில் கோவிட்-19 நோய்க்கு மூலிகை மருந்துகள் பலனளிக்குமா எனப் பலவகையான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டு எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சமீபத்தில், நொச்சி, நிலவேம்பு, சித்தரத்தை, பேரரத்தை போன்ற மூலிகைகளில் வைரஸைக் கட்டுப்படுத்தும் குணாதிசயங்கள் உண்டெனவும் அதுபற்றிய ஆராய்ச்சிகள் பல்கலைக்கழகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகிறதென்றும் கூறியிருந்தார்.

Print Friendly, PDF & Email