Spread the love

வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும்விடுதிகளில் ஏற்பட்டுள்ள கொவிட்-19 கிருமிப் பரவலுக்கும் ஊழியர்களின் தனிப்பட்ட சுகாதாரப் பழக்கவழக்கங்கள் மற்றும் வாழ்க்கைமுறைக்கும் தொடர்புள்ளதாக வாசகர் கடிதம் ஒன்று ‘சாவ்பாவ்’ நாளிதழில் செவ்வாய்க்கிழமையன்று வெளியிடப்பட்டிருந்தது.

“இக்கடிதம் குறிப்பிட்ட ஒரு சாராருக்கு எதிராக வெறுப்புணர்வைத் தூண்டுவது. இங்கு வெளிநாட்டு ஊழியர்களிடையே கொவிட்-19 கிருமித்தொற்று ஏன் ஏற்பட்டது என்பதற்கான புரிந்துணர்வு அக்கடிதத்தில் இல்லை” எனச் சட்ட, உள்துறை அமைச்சர் கா.சண்முகம் நேற்று (ஏப்ரல் 17) ஹெரிவித்திருக்கிறார்.

நாளிதழுக்குக் கடிதம் எழுதியிருந்த வாசகர் லீ ஷிவான், “தங்கும்விடுதிகளில் கிருமிப் பரவல் ஏற்படுவதற்கு வெளிநாட்டு ஊழியர்களே காரணம்; கூட்டு வாழ்க்கையைக் கடைப்பிடிப்பதன் மூலம் தனிப்பட்ட சுகாதாரத்தைப் பேணாமல் இருக்கிறார்கள்” எனக் குறிப்பிட்டிருந்தார். பின்தங்கிய நாடுகளிலிருந்து வரும் வெளிநாட்டு ஊழியர்கள் ‘கைகளால் சாப்பிடுவது, மரத்தடியில் சாப்பிடுவது’ போன்ற பழக்கவழக்கங்களையும் கொண்டுவருவதாக அவ் வாசகர் தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

சிங்கப்பூரில், கடந்த சில நாட்களாக அறிவிக்கப்பட்ட நூற்றுக் கணக்கான நோய்த் தொற்று வெளிநாட்டுப் பணியாளர்கள் தங்கும் விடுதிகளில் ஏற்படும் சம்பவங்களாக உள்ளன.

வெளிநாட்டுப் பணியாளர்கள் சமூகச் சூழலில் வசிப்பதால் கிருமித்தொற்று சம்பவங்கள் அதிகரிக்கின்றனவே தவிர, ஒருவரது தனிப்பட்ட சுகாதாரப் பழக்கவழக்கங்கள் காரணம் அல்ல என்று ‘சாவ்பாவ்’ சீன செய்தித்தாளிடம் அமைச்சர் சண்முகம் தெரிவித்தார்.

“கூட்டுச் சமையல், கூடியிருந்து கதைப்பது, ஒரே அறையில் பல உறங்குவது, நீண்ட நேரம் அருகருகே இருந்து சல்லாபிப்பது போன்ற பழக்க வழக்கங்கள் வீடுகளில், அதிக உறுப்பினர்களைக் கொண்ட குடும்பங்களில் நடைபெறுவது போன்ற சாதாரண நிகழ்வுகள் போன்றது” என பத்திரிகைக்கு அனுப்பிய தனது பதிலில் குறிப்பிட்டுள்ளார்.

“ஒருவரை ஒருவர் குறை கூறாமல், வெளிநாட்டுப் பணியாளர்களைப் பாதுகாக்கச் சிங்கப்பூர் மக்கள் திரள வேண்டும்” என அவர் அறைகூவல் விடுத்துள்ளார்.

சிங்கப்பூரின் நகர சுத்தி மற்றும் உள் நிர்மாணப் பணிகளில் பல வெளிநாட்டுப் பணியாளர்கள் கடமையாற்றுகிறார்கள். அவர்கள் தனிமையைத் தவிர்ப்பதற்காகவும் பொழுதுபோக்குகிற்காகவும் கூட்டு வாழ்க்கை மேற்கொள்வதும் புதிய நிகழ்வுகளல்ல. சிங்கப்பூரின் வளர்ச்சிக்கும் அதன் மேம்பாடு பேணப்படுவதற்கும் இப் பணியாளார்களின் பங்களிப்பு முக்கியமான ஒன்று.

“கடிதத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ள உணர்வுகளைக் காட்டிலும் நாம் பெருந்தன்மை கொண்டவர்கள், அன்பு, கருணை மற்றும் தாராள மனம் கொண்டவர்கள்” என அமைச்சர் சண்முகம் தெரிவித்தார்.

இன்றய (சனி 18) கணக்குப்படி, சிங்கப்பூரில் புதிதாக அறிவிக்கப்பட்ட 942 பேருடன் உறுதி செய்யப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 6,000 ஐ அண்மிப்பதாக அந் நாட்டின் சுகாதார அமைச்சின் அறிக்கை கூறுகிறது.

நோய்த் தொற்றாளர்களில் பெரும் பகுதியினர் வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் வசிக்கும், வேலைக்கான அனுமதியுடன் வந்திருக்கும் பணியாளர்கள் எனக் கூறப்படுகிறது.

Print Friendly, PDF & Email
Related:  பிரேசில் | சுதேசிகளைக் கொன்றொழிக்கும் கொறோணாவைரஸ்