கோவிட்-19 | விசாரணை வேண்டுமென்றதற்காய் அவுஸ்திரேலியாவைத் தண்டிக்கும் சீனா!

கோவிட்-19 | விசாரணை வேண்டுமென்றதற்காய் அவுஸ்திரேலியாவைத் தண்டிக்கும் சீனா!

Spread the love

பார்லி, இறைச்சி இறக்குமதிகளுக்கு அதிக தீர்வை

அவுஸ்திரேலியா மே 21, 2020: கோவிட்-19 நோய்த்தொற்று மீதான சுயாதீன விசாரணைகள் நடத்தப்படவேண்டுமென்ற சர்வதேச அழைப்பை ஆதரித்துக் குரல் கொடுத்ததற்காக சமீபத்தில் சீனா அவுஸ்திரேலியாவுக்குக் கடும் எச்சரிக்கை செய்திருந்தது. “சுயாதீன விசாரணைகள் வேண்டுமென்று குரலெழுப்புவதன்மூலம், அவுஸ்திரேலியா அபாயகரமான பாதையைத் தேர்ந்தெடுக்கிறது” என சீனாவின் தூதுவர் செங் ஜிங்யே, அவுஸ்திரேலியாவுக்கு எச்சரித்திருந்தார்.

“இரு நாடுகளுக்குமிடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டால், அவுஸ்திரேலியாவிற்குப் போகும் சீன உல்லாசப் பயணிகள் யோசிக்கவேண்டி வரும், சீனப் பெற்றொர்கள் கல்விக்காகத் தமது பிள்ளைகளை அவுஸ்திரேலியாவிற்கு அனுப்புவதைக் குறைத்துக்கொள்ளலாம், அவுஸ்திரேலிய வைன் இனி மேல் சீனரால் உட்கொள்ளப்பட்டமல் போகலாம், அவுஸ்திரேலிய இறைச்சியைச் சீனர் விரும்பாமல் போகலாம்” என அத் தூதுவர் எச்சரித்திருந்தார்.

சர்வதேச அழுத்தங்களின் காரணமாக சீனா, தற்போது , சுயாதீன விசாரணை ஒன்றுக்கு இணங்கியுள்ள நிலையில், இந்த வாரம் அவுஸ்திரேலிய பார்லி இறக்குமதி மீது 80% தீர்வையை அறிவித்திருக்கிறது. கடந்த மே 12 இல் நான்கு பெரிய நிறுவனங்களிடமிருந்து இறைச்சி இறக்குமதி செய்வதை முற்றாகத் தடை செய்திருந்தது. அவுஸ்திரேலிய இறைச்சி ஏற்றுமதியின் 35 வீத வீழ்ச்சியாகும்.

அவுஸ்திரேலிய ஜனநாயக அரசியலில் சீனாவின் தலையீடு சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இதனால் அதிருப்தியடைந்த அவுஸ்திரேலியா சீனாவின் ஹுவாவே தொலைத் தொடர்பு நிறுவனம் அவுஸ்திரேலிய மண்ணில் 5G கோபுரங்கள் நிறுவுவதற்குத் தடைவிதித்திருந்தது. தென் சீனக் கடலில் சீனாவின் அதிகரிக்கும் அத்துமீறல்கள், 1 மில்லியன் முஸ்லிம் உயிகுர்களைத் தடுத்து வைத்திருப்பது ஆகியவை பற்றி அவுஸ்திரேலியா தொடர்ந்து குரலெழுப்பி வருகிறது.

இன் நிலையில், அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொறிசன், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்றம்பின் சொல்லுக்கு ஆடுகிறார் என்ற குற்றச்சாட்டை சீனா முன்வைக்கிறது. அதற்குப் பழிவாங்கலாகவே தற்போதய இறக்குமதிக் கட்டுப்பாடும், தீர்வை அதிகரிப்பும் என்கிறார் சிட்னியிலுள்ள லோவி இன்ஸ்டிடியூட்டைச் சேர்ந்த றிச்சார்ட் மக்கிறெகர்.

இப் பிரச்சினையால் அதிகம் பாவிக்கப்படப்போவது அவுஸ்திரேலியா தான். அது சீனாவுக்கு ஏற்றுமதி செய்யும் பொருட்கள், ஏனைய ஐந்து பெரிய ஏற்றுமதிச் சந்தைகளின் மொத்தத்தைவிடப் பெரியது. நிலக்கரி, வாயு, இரும்புத் தாது, கல்வி ஆகியன அவுஸ்திரேலியாவின் ஏற்றுமதிப் பண்டங்களாகும்.

சித்தாந்த ரீதியிலான குரலெழுப்புதலைத் தவிர்த்து தனியே வியாபார ரீதியில் அவுஸ்திரேலியா தன் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமானால் பிரச்சினைகள் தணிவதற்கு சாத்தியமுண்டு என்கிறது புளூம்பேர்க்.

Print Friendly, PDF & Email