கோவிட்-19 |வடக்கு கிழக்கில் மருத்துவமனைகள் போதிய உபகரணங்களின்றி அவதி- அனைத்துலக மருத்துவ நல அமைப்பு (அமெரிக்கா) $25,000 நிதியுதவி.
நன்கொடைகளை எதிர்பார்க்கிறது!
இலங்கையில் கோவிட் பெருந்தொற்று கட்டுக்கடங்காமல் போய்க்கொண்டிருக்கிறது. விரைவில் நாடு தழுவிய நடமாட்ட முடக்கமொன்றிற்காக அரசாங்கம் தயாராகி வருகிறது.
இதே வேளை மருத்துவ வசதிகளற்ற இடங்களிலிருந்து பெருமளவு நோயாளிகள் சிகிச்சைகளுக்காக வடக்கு கிழக்கிலுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டுவரப்படுவதாக நம்பகரமான செய்திகள் தெரிவிக்கின்றன.

வக்கு கிழக்கிலுள்ள மருத்துவ மனைகள் ஏற்கெனவே நிரம்பல் நிலையில் இருப்பதாகவும், தீவிர சிகிச்சைப் பிரிவில் மேலதிக படுக்கைகள், உபகரணங்கள் இல்லாது முன்நிலை சுகாதாரப் பணியாளர்கள் மிகவும் சிரமப்படுவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. வடக்கு மாகாணத்தின் நிலை தொடர்பாக சமீபத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சுகாதார அமைச்சரிடம் சமீபத்தில் உதவி கோரியிருந்தார்.
இந் நிலையில், அமெரிக்காவைத் தளமாகக் கொண்டியங்கும் அனைத்துலக மருத்துவ நல அமைப்பு இலங்கையிலுள்ள தனது கள அலுவலகங்கள் மூலம் வடக்கு, கிழக்கு, மலையக மக்களின் நோய்த் தொற்று, பரவல் தொடர்பான நிலவரங்களை அவதானித்துக்கொண்டு வருகின்றது. அங்குள்ள மருத்துவ மனைகள், மருத்துவப் பணியாளர்கள் மூலம் தேவைகளையறிந்து உடனடியான உதவிகளைச் செய்து வருகின்றது.
கடைசியாகக் கிடைத்த தகவல்களின்படி, நாட்டில் அதி தீவிரமாகப் பரவிவரும் கோவிட் நோய்த்தொற்றுக் காரணமாக பெருமளவு நோயாளிகள் வடக்கு விழக்கிலுள்ள மருத்துவமனைகளுக்குக் கொண்டுவரப்படுவதாகவும் இருக்கின்ற வசதிகளுடன் இந்தளவு நோயாளிகள் சுமையைக் கையாள முடியாமல் மருத்துவப் பணியாளர்கள் திண்டாடுவதாகவும் அனைத்துலக மருத்துவ நல அமைப்பின் பணிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போது இம் மருத்துவமனைகளில் உயிர்வாயு செறிவாக்கிகள் (Oxygen Concentrators), நோயாளி அவதானிப்பு மானிகள் (Patient Monitors) ஆகியன போதாமையாக உள்ளன. உயிர்வாயு செறிவாக்கி ஒன்று $890 டாலர்களும், நோயாளி அவதானிப்பு மானி ஒன்று $1,400 டாலர்களும் பெறுமதியானவையாகும். இது போன்ற அவசர தேவைகளுக்காக அனைத்துலக மருத்துவ நல அமைப்பு $25,000 டாலர்களை உடனடியாக வடக்கு கிழக்குக்கு அனுப்பியுள்ளது. நிலைமை மோசமாகி வருவதால், அடுத்துவரும் சில தினங்கள் மிகவும் ஆபத்தானவையாக இருக்கக்கூடுமென அஞ்சப்படுகிறது.
இத் தேவைகளைச் சமாளிக்க உடனடி உதவிகளைச் செய்ய விரும்புவோர் பின்வரும் இணைப்பு மூலம் தொடர்புகொண்டு தங்களால் இயன்றளவு நிதியுதவியைச் செய்துகொள்ள முடியும். அனைத்துலக மருத்துவ நல அமைப்பு – அமெரிக்கா (IMHO USA) – நன்கொடை
Related posts:
- ராகம போதனா வைத்தியசாலையில் நிரம்பி வழியும் கோவிட் நோயாளிகள்
- இந்திய கோவிட் பெருந்தொற்று நிதிக்கு அனைத்துலக மருத்துவநல அமைப்பு (IMHO) பங்களிப்பு!
- வடக்கு கிழக்கு எதிர்நோக்கும் கோவிட் அச்சுறுத்தல்; போதிய உபகரணங்களின்றி நோயாளிகள் மரணம்
- கிளிநொச்சி மாணவர்களுக்கு ஆங்கிலக் கல்வி – அனைத்துலக மருத்துவநல அமைப்பு ஏற்பாடு