News & AnalysisSri Lanka

கோவிட்-19 | யாழ்ப்பாணக் கொத்தணி பெருகுகிறது – மேலும் 20 பேருக்குத் தொற்று

இன்று (புதன்), யாழ்ப்பாணத்தில் மேலும் 20 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதென கோவிட் தடுப்புக்கான கட்டளை மையம் அறிவித்துள்ளது. அதே வேளை ஏற்கெனவே செய்யப்பட்ட PCR பரிசோதனைகளின் பெறுபேறுகள் இன்னும் தமக்கு வந்து சேரவில்லை என யாழ் பிரதேச செயலக அதிகாரி எஸ்.சுதர்சன் தெரிவித்துள்ளார்.

கடந்த 26ம் திகதி அறிவிக்கப்பட்ட தொற்றுக்களில் நாட்டின் அதியுச்ச தொற்றுக்கள் யாழ்ப்பாணத்திலேயே இருந்தன. கடந்த வியாழன் 77 தொற்றுக்களும், வெள்ளியன்று 23 தொற்றுக்களும், சனியன்று 88 தொற்றுக்களும் உறுதி செய்யப்பட்டிருந்தன.

ஞாயிறன்று அறிவிக்கப்பட்ட 63 தொற்றுக்களில் சுன்னாகத்தில் 29 பேருக்கும், யாழ். நகரில் 23 பேருக்கும், கோப்பாயில் 23 பேருக்கும் தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்ததது.

யாழ்ப்பாணக் கொத்தணியின் (cluster) ஆரம்பம் ஒரு சந்தை எனக் கட்டுப்பாட்டு மையம் அறிவித்துள்ளது. யாழ். நகரிலுள்ள பெரும்பாலான கடைகள் மூடப்பட்டுள்ளன. தற்பாதுகாப்பு காரணமாக, 1000 இற்கு மேலான குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. யாழ் மாவட்டத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளன.

விவாக நிகழ்வுகள், அதிக மக்கள் கூடும் நிகழ்வுகள் அனைத்தும் காலவரையின்றித் தடைசெய்யப்பட்டுள்ளது. தேவையற்ற மக்கள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது (கொழும்பு கசெற்)