Spread the love

உடல் ஆரோக்கியத்தில் எலக்ட்றோனிக்ஸ் முக்கிய பங்கு வகிக்கத் தொடங்கிப் பல தசாப்தங்களாகிவிட்டது. ஆனால் ‘ஸ்மார்ட்’ ஃபோன்கள் வந்த பிறகு இந்த சுகாதார ஸ்மார்ட் எலெக்ட்றோனிக்ஸ் உடலோடு ஒட்டிக்கொள்ள ஆரம்பித்துவிட்டது. தேகாப்பியாசம் செய்பவர்கள் இப்போதெல்லாம் தம்மைக் கண்காணிக்க ஸ்மார்ட் கைப்பட்டிகளைப் பாவிக்க ஆரம்பித்துவிட்டார்கள். கொறோனா வைரஸ், தன் பங்குக்கு இவற்றின் பாவனையை இன்னுமொருபடி உயர்த்தப்போகிறது, தற்போது நடைபெறும் ஆராய்ச்சி வெற்றி பெற்றால்.

ஊறா – ஸ்மார்ட் மோதிரம்

சான் பிரான்சிஸ்கோ, கலிபோர்ணியாவில் உள்ள தொழில்நுட்ப நிறுவனமொன்று ஸ்மார்ட் மோதிரமொன்றைப் பரீட்சித்துக்கொண்டிருக்கிறது. ஊரா (Oura) எனப் பெயரிடப்பட்டுள்ள இம் மோதிரம், கோவிட்-19 போன்ற நோய்த் தொற்றுள்ளவரை அதன் ஆரம்ப நிலைகளிலேயே அடையாளம் காட்டுவதற்காகப் பாவிக்கப்படவிருக்கிறது. உடல் வெப்பநிலை மற்றும் இதர சில அறிகுறிகளை முற்கூட்டியே அறிவிப்பதற்காக இந்த ஸ்மார்ட் மோதிரம் வடிவமைக்கப்படுகிறது.

2000 பேர் பங்குபெறும் இவ்வாராய்ச்சி மூன்று மாதங்களுக்கு நடைபெறவிருக்கிறது. அதன் நோக்கம், உடலின் பல்வேறு அறிகுறிகளின் தரவுகளைச் சேமித்து அவற்றின் மூலம் வரப்போகும், அல்லது உருவாகிக்கொண்டிருக்கும் நோயை உய்த்தறிய வல்ல மென்பொருள் ஒன்றை உருவாக்கப்போகிறார்கள். வெற்றி பெறுமாயின், இம் மென்பொருள் ஏற்கெனவே பாவனையிலிருக்கும் இதர ஸ்மார்ட் அணிகலன்களிலும் பாவிக்கப்படும். ஆனால் இம் மென்பொருள் தயாரிப்பு இன்னும் ஆரம்ப நிலையிலேயே இருக்கிறது என்கிறார் இவ்வாராய்ச்சியின் முதன்மை ஆராய்ச்சியாளர், டாக்டர் ஆஷ்லி மேசன்.

கோவிட்-19 நோயை ஆரம்பத்திலேயே இக் கருவி கண்டுபிடிக்குமானால், அந் ‘நோயாளி’ உடனடியாகவே சுய தனிமைப்படுத்தலைச் செய்துவிட முடியும். கொறோனாவைரஸ் நோயாளிகளை எதிர்கொள்ளும் முன்னணி சுகாதாரப்பணியாளர்கள் பரீட்சார்த்தமாக இந்த ஸ்மார்ட் மோதிரத்தை அணிந்துகொள்வதன் மூலம், அவர்களுக்குத் தொற்று வந்துவிட்டது என்பதை அறிந்தவுடனேயே தம்மை விலக்கிக் கொண்டுவிட முடியும்.


இருதயத் துடிப்பு (வீதம்), சுவாச வீதம் ஆகியவற்றை இம் மோதிரம் விரல்களில் இருந்து பெற்றுக்கொள்ளும் வழியில், மோதிரத்தின் உட் பக்கத்தில் அவற்றை உணரும் ‘சென்சர்கள்’ பொருத்தப்பட்டுள்ளன. இரவும் பகலும் தொடர்ச்சியாக எடுக்கப்பட்ட உடல் வெப்பநிலையின் சராசரியை இது கணக்கிட்டு ஒவ்வொரு நிமிடத்துக்கும் எப்படி அது மாறுகிறது என்பதஹிக் கூறிவிடும். ஒருவரின் உடலில் நோய்த் தொற்று ஏற்படும்போது உடலின் எதிர்ப்பாற்றல் உக்கிரமடைகிறது என்பதை உடல் வெப்பநிலை மூலம் அறிந்துவிடலாம். உடலின் அறிகுறி மாற்றங்களை ஒப்பிடுவதன் மூலம் மருத்துவர்கள் நோயின் முன்னேற்றம் பற்றி உய்த்துணர முடியும் என்கிறார் ஊறா நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஹார்ப்பீட் ராய்.

ஊறா மேற்கொள்ளும் இப்பரிசோதனையில், உலகம் முழுவதுமிருந்து பல முன்னணி சுகாதார சேவைப் பணியாளர்கள் கலந்துகொள்கிறார்கள். சான் பிரான்சிஸ்கோ சுகாதார சேவைப் பணியாளர்கள் 2000 பேருக்கு இம் மோதிரங்களை ஊரா வழங்கியுள்ளது. காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் இருப்பின் அப் பணியாளர்கள் ஊறாவுக்கு பிரத்தியேகமாக அத் தகவல்களை அறிவிப்பார்கள். இரு வகையாலும் பெறப்பட்ட தகவல்களையும் கொண்டு, மருத்துவர்கள், விஞ்ஞானிகளின் உதவியுடன் இம் மென்பொருள் வடிவமைக்கப்படும்.

Related:  கோவிட்-19 | மனிதரில் பரிசோதிக்கப்படும் தடுப்பு மருந்து!


கின்சா – ஸ்மார்ட் தேர்மோமீட்டர்

அதே வேளை ஒருவரது காய்ச்சலை (சுரத்தை) அளக்கும் ஸ்மார்ட் தேமோமீட்டர் ஒன்று (வெப்பமானி) கின்சா என்ற பெயரில் பாவனைக்கு வந்திருக்கிறது.

கின்சா ஸ்மார்ட் தேர்மோமீட்டர் மூலம் உடல் வெப்பநிலையை ஸ்மார்ட் ஃபோனில் பார்க்கலாம்

நோயாளி ஒருவர் தநது வாய்க்குள்ளே இத் தேர்மோமீட்டரை வைத்தவுடன் அது அளக்கும் வெப்பநிலையைத் தகவலாக மாற்றி உடனடியாக ஸ்மார்ட் ஃபோன் அல்லது இதர கண்காணிப்புக் கருவிகளுக்கு அனுப்பி விடுகிறது. ஒரு தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் கோவிட்-19 நோயாளியின் வெப்பநிலையை தாதி ஒருவர் தன் கணனியில் பார்க்கக்கூடியதாக இருக்கும். இதனால் நீயாளிக்கு அருகே போய்த் தொற்றை வாங்கிக்கொள்ள வேண்டிய அவசியமில்லை.

கின்சா என்ற பெயரில் விற்பனையாகும் இந்த ஸ்மார்ட் தேர்மோமீட்டர் அமெரிக்காவில் 1 மில்லியனுக்கு மேல் பாவனையிலிருக்கிறது. அமெரிக்கா முழுவதும் நோயாளிகளின் வெப்பநிலையை அறிந்து அத் தகவல்கள் மூலம் அதிகாரிகள் தீர்மானங்களை எடுப்பதற்கு இத் தகவல்கள் உதவிபுரிகின்றன.

மார்ச் 18 இல் அமெரிக்காவில் நோயாளிகளில் அவதானித்த வெப்பநிலை. படம்: அமண்டா கூசர் சீனெட்

சான் பிரான்சிஸ்கோ, கலிபோர்ணியாவிலுள்ள கின்சா என்ற நிறுவனம் இவ் வெப்பமானிகளைத் தயாரிக்கிறது. இதன் மூலம் பெறப்பட்ட தரவுகள் அமெரிக்க மருத்துவ சமூகத்தாலும், கொள்கை வகுப்பாளர்களாலும் பெரிதும் விரும்பிப் பாவிக்கப்படுகிறது.

கின்சாவினால் தயாரிக்கப்பட்ட அமெரிக்க சுகாதார வெப்பநிலைப் படம் நாட்டிலுள்ள நோயாளிகளின் பரம்பலைத் துல்லியமாக எடுத்துக்காட்டுகிறது.

Print Friendly, PDF & Email