Uncategorized

கோவிட்-19 | மலேசியாவிலுள்ள பதிவுகளற்ற வெளிநாட்டார் கைதுசெய்யப்படுகிறார்கள்

கோவிட்-19 நோய்த்தடுப்பு முயற்சிகளைக் காரணம் காட்டி பதிவுகளின்றி அந் நாட்டில் தற்காலிகமாகத் தங்கியுள்ள வெளிநாட்டவர்கள் கைதுசெய்யப்படுவதாக அறியப்படுகிறது. கோலாலம்பூரில் மட்டும் நூற்றுக்கணக்கான அகதிகளும், தற்காலிக வதிவிடக்காரரும் கைது செய்யப்பட்டுள்ளார்களென ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

வெள்ளியன்று, நகர் மையத்தில் வாழ்ந்துவந்த பகுதிகளில் காவற்துறை மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகளின் பயனாக 586 பதிவற்ற வெளிநாட்டார் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது. ஏற்கெனவே நலிந்துபோயிருக்கும் ஒரு சமூகத்தை ஒளிந்து வாழச் செய்துவதன் மூலம் மருத்துவ உதவிகளைக்கூட அவர்களால் பெற்றுக்கொள்ள முடியாமற் செய்துவிடும் என அர்சுக்கு ஐ.நா. எச்சரித்துள்ளதாகவும் தெரிகிறது.

கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் மியன்மாரின் றொஹிங்யா ஆகதிகள் எனவும், அவர்களில் பலர் குழந்தைகள் எனவும் அறியப்படுகிறது.

நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட நடமாட்டத்தடையின்போது இவர்களின் நடமாட்டம் மூலம் நோய் பரப்பப்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் தாம் இந் நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இத் தற்காலிக குடிவரவாளர்களைக் கைதுசெய்வதைத் தவிர்க்கும்படியும், குழந்தைகளையும், அவர்களது பராமரிப்பாளர்களையும் உடனடியாக விடுதலை செய்யும்படியும், நெரிசல் மிக்க தடுப்பு நிலையங்களில் நோய்த்தொற்று வரும் ஆபத்து அதிகமெனவும் ஐ.நா. மலேசியாவிடம் கோரியுள்ளது.

ஈழப்போரின் முடிவின் பின்னர் பெருந்தொகையான தமிழர்களும் அகதிகளாகவும், வெளிநாடுகளுக்குச் செல்லும் வழியில் இடைத்தங்கல் தேவைகளுக்காகவும் மலேசியாவில் தங்கியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.