Spread the love

கோவிட்-19 நோய்க்கான தடுப்பு மருந்தை மனிதரில் பரீட்சிக்கும் நடைமுறையை (clinical trials) ஒக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் ஆரம்பித்திருகிறது. குரங்கில் செய்யப்பட்ட இப் ப்ரிசோதனை வெற்றிகண்டிருப்பதால் மனிதரில் பரிசோதிப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டதையடுத்து இப் பரிசோதனைகள் ஆரம்பமாகியுள்ளன.

இப் பரிசோதனைகள் வெற்றியளிக்கும் பட்சத்தில், SARS-CoV-2 வைரஸுக்கு எதிரான முதல் தடுப்பு மருந்து எதிர்வரும் இலையுதிர்காலத்தில் மக்கள் பாவனைக்கு வரலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

சிம்பான்சீ குரங்குகளில் தடிமனை உருவாக்கும் அடினோவைரஸ் (adenovirus) களைப் பலமிழக்கச் செய்து மனிதரின் இரத்தத்தில் ஏற்றும்போது உடல் அதற்கு எதிராகத் தயாரிக்கும் பிறபொருளெதிரிகள் (antibodies), கோவிட்-19 இற்குக் காரணமான SARS-CoV-2 வைரஸையும் தாக்கியழிக்கும் என்பதுவே இத் தடுப்பு மருந்தின் பின்னாலுள்ள தார்ப்பரியம்.

இதிலுள்ள விசேடம் என்னவென்றால், இந்த வைரஸ்கள் (அடினோ) மரபணு ரீதியாக மாற்றம் செய்யப்பட்ட பின்னரே மனிதரில் ஏற்றப்படுமாகையால் மனிதரில் இது தன்னை இனவிருத்தி செய்து பாதிப்பபை ஏற்படுத்தாது என இதன் ஆராய்ச்சியாளர் தெரிவிக்கின்றனர். SARS-CoV-2 வைரஸ் மனிதக் கலங்களில் பிணைத்துக்கொள்ளப் பாவிக்கும் புரதக் கூரைக் (spike protein) கட்டுப்படுத்தும் மரபணுவுடன் இந்த பலவீனமாக்கப்பட்ட அடினோவைரஸ் இணைக்கப்பட்டு இத் தடுப்பு மருந்து தயாரிக்கப்படுகிறது. இதனால், மனித உடல் உண்மையான SARS-CoV-2 வைரசைக் கண்டுவிட்டதுபோல் அதற்கு எதிரான தடுப்பாற்றலை விருத்திசெய்துகொள்ளும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதே போன்று, பலவீனப்படுத்தப்பட்ட அடினோவைரஸ் மீது கட்டியெழுப்பப்பட்ட வேறு பரீட்சார்த்தத் தடுப்பு மருந்துகள் 320 பேரில் பரீட்சிக்கப்பட்டதென்றும், சிலருக்கு காய்ச்சல், தலைவலி போன்ற உபாதைகளைத் தவிர வேறெந்தப் பிரச்சினைகளும் இருக்கவில்லை எனவும் ஆராய்ச்சியாளர் தெரிவிக்கின்றனர்.

ஏப்ரல் 23 இல் ஆரம்பிக்கப்பட்ட, தற்போதய பரிசோதனையில், ஒக்ஸ்ஃபோர்ட், சவுதாம்ப்டன், லண்டன், பிறிஸ்டல் ஆகிய நகரங்களிலிருந்து, 1,102 சுகதேகிகள் பங்கெடுகிறார்கள். இப் பரிசோதனைகள் முடிவுகளைத் தர 6 மாதங்கள் வரை எடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

குரங்குகளில் பரிசோதனை

இத் தடுப்பு மருந்தை மொன்ரானாவிலுள்ள ‘நாஷனல் இன்ஸ்டிடியூட் ஒஃப் ஹெல்த்’ ஆய்வுகூடத்திலுள்ள ஆறு குரங்குகளுக்குக் கொடுத்த பின்னர் அக் குரங்குகளுக்கு கொரோனாவைரஸ் தொற்றுக்கு ஆளாக்கினார்கள். 28 நாட்களுக்குப் பிறகு அந்த ஆறு குரங்குகளிலும் நோய் தொற்றிக்கொள்ளவில்லை என ஆராய்ச்சியாளர் தெரிவிக்கின்றனர்.

சீனாவிலும் பரிசோதனைகள் வெற்றி

அதே வேளை, சீனாவில் மேற்கொள்ளப்பட்ட இன்னுமொரு பரிசோதனையின்போது, முற்றாகச் செயலிழக்கப்பட்ட கொறோனாவைரஸ்களைக் குரங்குகளின் உடலில் ஏற்றியபோது அங்கும் நோய்த் தொற்று ஏற்படாதமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சீனாவில் தற்போது இத் தடுப்பு மருந்து மனிதரில் பரீட்சிக்கப்பட்டு வருகின்றது. உலக சுகாதார நிறுவனத்தின்படி உலகம் பூராவும் 70 தடுப்பு மருந்துகள் பரீட்சிக்கப்பட்டு வருகின்றன என அறியப்படுகிறது.

Print Friendly, PDF & Email
Related:  'குடில்' | மனவளம் நலிவுற்றோருக்கான புனர்வாழ்வு இல்லத்தின் அடிக்கல்நாட்டு வைபவம் தெல்லிப்பழையில் நடைபெற்றது