Health

கோவிட்-19 | மத்திய வயதினரில் அபூர்வ பக்கவாதம் (stroke)

30, 40 வயதுடைய கோவிட்-19 நோயாளிகளில் ஏற்படும் பக்கவாதம் (strokes) மருத்துவ சமூகத்தை ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறது. பெருங்குழாய் அடைப்புக்கள் (large vessel occlusion) எனப்படும் இவ்வடைப்புக்கள் மூளை மற்றும் சுவாசப்பைகளுக்கு இரத்தத்தை எடுத்துச் செல்லும் முக்கிய குழாய்களில் ஏற்படுவதைச் சில கொரோனாவைரஸ் நோயாளிகளில் மருத்துவர்கள் அவதானிதிருக்கிறார்கள்.

கோவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்ட சில நோயாளிகளில், அதுவும், 30,40 வயதுகளிலுள்ள சுக தேகிகளில் ஏற்படும் இவ்வடைப்புகள் மருத்துவர்களைக் கரிசனை கொள்ள வைத்திருக்கின்றன.

“இளைய நோயாளிகள் பலரில் அவதானிக்கும் இப் பக்கவாதம், கடந்த இரண்டு கிழமைகளில் 7 மடங்கால் அதிகரித்திருக்கிறது” என நியீ யோர்க்கிலுள்ள மவுண்ட் சைனாய் மருத்துவமனியைச் சேர்ந்த் நரம்பியல் நிபுணர் தோமஸ் ஒக்ஸ்லி தெரிவித்துள்ளார். தன்னுடைய 5 நோயாளிகள் எவருக்கும் முந்திய மருத்துவப் பிரச்சினைகள் எதுவும் இருக்கவில்லை (underlying conditions) எனவும், இருவருக்கு நோயறிகுறிகள் எதுவுமே இருக்கவில்லை எனவும் மீதிப்பேருக்கு மிகவும் மென்மையான அறிகுறிகள் இருந்ததாகவும் அவர் தெரிவிக்கிறார்.

கொறோனாவைரஸ் நோயாளிகளில் பக்கவாதம் ஏற்படுவது, ஒப்பீட்டளவில் குறைவு எனினும், அமெரிக்காவின் மூன்று மருத்துவமனைகள் இச் சம்பவங்கள் பற்றி அறிக்கைகளைச் சமர்ப்பிக்கவுள்ளன.

பொதுவாக மூளையின் பல பகுதிகளுக்கு இரத்தத்தை வழங்கும் சிறிய / மயிர்த்துளைக் குழாய்களில் ஏற்படும் அடைப்புகள் பக்கவாதங்களைத் தோற்றுவிப்பது அறியப்பட்ட ஒன்று. (இது பற்றி டாக்டர் கனக சேனா அவர்கள் எழுதிய கட்டுரைகளை ‘மறுமொழியில்’ பார்க்கலாம்). ஆனால் பெரிய முக்கியமான குழாய்களில் ஏற்படும் இவ்வடைப்புகள் மிகவும் ஆபத்தானவையும், உடனடியாகச் சிகிச்சை செய்யப்படவேண்டியனவுமாகும். நிறைய கோவிட்-19 நோயாளிகளின் மரணங்களுக்கு இது காரணமாக இருக்குமோ என்பது சந்தேகத்துக்குரியது எனினும், நிரூபிக்கப்படவேண்டிய ஒன்று.

தோமஸ் ஜெஃபெர்சன் பல்கலைக்கழக மருத்துவமனை, நியூ யோர்க் பல்கலைக்கழக லாங்கோன் ஹெல்த் ஆகியவற்றில் சிகிச்சையளிக்கப்பட்ட 12 கோவிட்-19 நோயாளிகளில் 40% தமானோருக்குப் பெருங்குழாய் அடைப்புக்களுக்கான சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. “இவர்கள் அனைவரும் 50 வயதுக்குக் கீழ்ப்பட்டவர்கள். இப்படி இளம் வயதுக்காரரில் அடைப்புகள் ஏற்படுவதை நாம் முன்பு சந்தித்திருக்கவில்லை” எனக் கூறுகிறார், நியூ யோர்க் பலகலைக்கழக லாங்கோன் ஹெல்தைச் சேர்ந்த ஐட்டன் றாஸ்.

இதுபற்றி டாக்டர் ஒக்ஸ்லி ‘மெட்ஸ்கேப் மெடிகல் நியூஸ்’ சஞ்சிகைக்கு அளித்த பேட்டியில், இந்த வைரஸ் இரத்தக் குழாய்களில் அழற்சியை (inflammation) உருவாக்குவதனால் இரத்தம் கட்டியாகிறது எனத் தான் சந்தேகிப்பதாகச் சொல்கிறார். முதியவர்களைப் போல, இளையவர்கள் சுவாசப் பிரச்சினைகளை எதிர்கொள்வதில்லை என்பதால் வைரஸ் வேறிடங்களுக்குச் சென்று தாக்கும்வரை அவர்கள் அறிகுறிகள் எதையும் நீண்டநாட்களுக்கு உண்ராமல் இருக்கலாம் என ராஸ் சந்தேகிக்கிறார்.

டாக்டர் ஒக்ஸ்லி ‘சீ.என்.என்’ இற்கு வழங்கிய பேட்டியில், தனது இரண்டு நோயாளிகள் அவசர சேவைகளை அழைப்பதற்குத் தாமதமாகியதால், அவர்களுக்குச் சிகிச்சையளிப்பதில் சிரமமிருந்தது என்கிறார். தான் சிகிச்சையளித்த 5 நோயாளிகளில்,ஒருவர் இறந்துவிட்டதாகவும், ஒருவர் மருத்துவமனையில் இருப்பதாகவும், இருவர் குணப் பெற்று வருவதாகவும், ஒருவர் வீடு சென்றுவிட்டதாகவும் ஒக்ஸ்லி தெரிவிக்கிறார்.

இப் புதிய அனுபவம் பற்றி டாக்டர் ஒக்ஸ்லியும் அவரது சகாக்களும் வெளியிடவிருக்கும் ஆய்வறிக்கையை அவர்களது இன்னுமொரு சகாவும், கோவிட்-19 நோயாளிகளுக்க்ச் சிகிச்சை செய்யும்போது பலியாகிவிட்டவருமான டாக்டர் கெரி ஸ்க்ளாருக்கு அர்ப்பணிப்புச் செய்துள்ளனர்.