கோவிட்-19 | பிறபொருளெதிரிச் சிகிச்சை பலனளிக்கிறது – விஞ்ஞானிகள்
அகத்தியன்
‘பிறபொருளெதிரி சிகிச்சை’ என ஏற்கெனவே அறியப்பட்ட இச் சிகிச்சை முறை, சிறிய மாற்றங்களுடன் நோயாளிகளில் பிரயோகிக்கப்பட்ட வெற்றியளித்திருப்பதாகக் கூறுகிறார்கள் விஞ்ஞானிகள்.
நோயாளி ஒருவரைக் கிருமிகள் தாக்கும்போது அவரது உடலினால் இயற்கையாகத் தயாரிக்கப்படும் நோயெதிர்ப்பு பதார்த்தங்களில் ஒன்று பிறபொருளெதிரி (antibody) எனப்படுகிறது. ஒவ்வொரு வகையான கிருமிக்கும் ஏற்றவாறு இப் பிறபொருளெதிரிகளும் வித்தியாசமான மாற்றங்களுடன் உருவாக்கப்படுகின்றன. SARS-CoV-2 வைரஸ் தொற்றுக்குள்ளாகியவர்கள் உயிராபத்தின்றித் தப்பிப் பிழைத்தால் அவர்களது உடலில் உருவாக்கப்பட்ட பிறபொருளெதிரிகளை எடுத்து புதிய நோயாளிகளுக்கு ஏற்றுவதன் மூலம் இச் சிகிச்சை முறை பிரயோகிக்கப்படுகிறது.
Convalescent Plasma Treatment எனப்படும் இச் சிகிச்சை முறை நூற்றாண்டுக்கு மேலாகப் பாவிக்கப்பட்டுவரும் ஒரு முறை. இதன்போது குணமடைந்த நோயாளியின் இரத்தத்திலிருந்து பிளாஸ்மா எனப்படும் திரவப் பொருள் வடிகட்டி எடுக்கப்பட்ட பின்னர் இரத்த வகைகளின் ஒற்றுமையைப் பொறுத்து வேறு நோயாளிகளுக்கு ஏற்றப்படுகிறது.
சீனாவில், இப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வெற்றிகரமாக நோயாளிகள் குணப்படுத்தப்பட்டிருந்தார்கள். வேற் நாடுகளிலும் இவ்வாராய்ச்சிகள் நடைபெற்றிருந்தன.
பிறபொருளெதிரிக் கலவை (Antibody Cocktail)
மேலே குறிப்பிட்ட ஆய்வு, நியூ யோர்க்கிலுள்ள கொலம்பியா பல்கலைக்கழத்தில் நடைபெற்றது. சிகிச்சைக்கென அனுமதிக்கப்பட்ட 40 தீவிர கோவிட்-19 நோயாளிகளில், 5 பேரிலிருந்து எடுக்கப்பட்ட 61 வகையான பிறபொருளெதிரிகள் மற்றவர்களில் இருந்த கொறோணாவைரஸ்களை முற்றாக அழித்தொழித்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அதே வேளை, ஹாம்ஸ்ரெர்ஸ் எனப்படும் ஆய்வுகூட விலங்குகளில் இப் பிறபொருளெதிரிகள் நோய்த் தொற்றை முற்றாகத் தடுத்திருந்தமையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என இவ்வாராய்ச்சியில் முன்னிலை வகுக்கும் கொலம்பியா பல்கலைக்கழகப் பேராசிரியர் டேவிட் ஹோ தெரிவித்தார்.
இதில் உள்ள விசேடம் என்னவென்றால், இதில் வெற்றிகரமாகப் பாவிக்கப்பட்ட, மிகவும் திறமையான பிறபொருளெதிரியை, வெளியில் மருந்து நிறுவனங்களினால் பெருந்தொகையாகத் தயாரிக்க முடியும் என்பது. இப்படித் தயாரிக்கப்பட்ட பிறபொருளெதிரிகளை நோயாளியின் உடலிந் இரத்தத்தில் ஏற்றுவதன் மூலம் வைரஸ்களை முற்றாக அழித்துவிட முடியும். அத்துடன், இப் பிறபொருளெதிரியை, நோய் தொற்றாதவருக்கு தடுப்பு மருந்தாக ஏற்றுவதன் மூலம் நோய்த் தொற்றைத் தடுக்கலாம் எனவும் பேராசிரியர் டேவிட் ஹோ கூறுகிறார்.
நீரிழிவு, இருதய வியாதிகள், சிறுநீரக வியாதிகள் போன்ற வியாதிகளைக் கொண்ட பலவீனமானவர்களுக்கு இச் சிகிச்சை மிகுந்த பலனைத் தரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. நெடுநாட் பராமரிப்பிலுள்ள மூதாளர்களுக்கு இம் மருந்து நிச்சயமாகப் பலனளிக்கும் எனக் கருதிகிறார் டாக்டர் ஹோ.
தடுப்பு மருந்துக்கும் இச் சிகிச்சைக்குமுள்ள வித்தியாசம்
தடுப்பு மருந்துகள் பெரும்பாலும் முற்றாகச் செயலிழக்கப்பட்ட, அல்லது பலவீனப்படுத்தப்பட்ட அல்லது வைரசின் உடற்பாகங்களை மட்டும் கொண்டவையாக இருப்பது வழக்கம். இவற்றை நோயில்லாதவரின் உடலிந் இரத்தத்தில் ஏற்றும்பொழுது உடலின் நோயெதிர்ப்பு ஆற்றல் ஏற்றப்பட்ட கிருமிகளை நிஜமான ‘உயிருள்ள’ கிருமிகளென நினைத்து பிறபொருளெதிரிகளை உருவாக்குகின்றது. எப்போதாவது உண்மையான கிருமி உடலில் தொற்றும்போது தயாராகவிருக்கும் நோயெதிர்ப்பு ஆற்றல் அக் கிருமிகளை அழித்துவிடுகிறது.
மாறாக, பிறபொருளெதிரிச் சிகிச்சையின்போது ‘ வெளியில் தயாரிக்கப்பட்ட பிறபொருளெதிரிகள்’ உடலில் ஏற்கெனவே இருக்கும் கிருமிகளையும், இனிமேல் வரப்போகும் கிருமிகளையும் உடனடியாகவே தாக்கியழித்துவிடும்.
சந்தேகங்கள்
இதில் உள்ள பிரச்சினைகள் என்னவென்றால், ஏற்றப்படும் பிறபொருளெதிரிகள் எவ்வளவு நாட்களுக்கு செயற்பாடுடையதாகவிருக்கும்; தன்னை மாற்றிக்கொண்ட வைரஸ்களை (different strains) எப்படிக் கையாளப்போகின்றன; உடலின் ஏற்கெனவே இருக்கும் உள்ளார்ந்த நோயெதிர்ப்பு ஆற்றலுடன் இவை முரண்படுவதால் பாதகமான விளைவுகள் ஏற்படுமா என்பது பற்றிய பல சந்தேகங்கள் இன்னும் மருத்துவ சமூகத்தில் எழுந்தவண்ணமேயிருக்கின்றன. அத்தோடு, வைரஸும் தன்பாட்டுக்குத் தன்னை நிலைநிறுத்திக்கொள்வதற்கான போராட்டத்தில் வெற்றிபெற்றவண்ணமே இருக்கிறது.
மரணத்தோடு போராடிக்கொண்டிருக்கும் தீவிரமான நோயாளிகளுக்கு உடனடியான நிவாரணத்தைத் தருவதில் இந்த பிறபொருளெதிரி சிகிச்சைமுறை வெற்றிகரமாகப் பாவிக்கப்பட்டிருக்கிறது எனபதில் சந்தேகமில்லை.
பேராசிரியர் டேவிட் ஹோ போன்றவர்களது ஆராய்ச்சியில் உடலின் பல்வேறு உறுப்புகளை இலக்கு வைத்து செயற்படும் பல வகையான பிறபொருளெதிரிகளின் கலவையைச் சிகிச்சை முறையில் பயனபடுத்துகிறார்கள். இரத்தத்தில் மிதந்துகொண்டிருக்கும் கிருமிகளை மாத்திரமல்லாது, கலங்களுக்கு உள்ளே சென்று இனப்பெருக்கம் செய்யும் வைரஸ்களையும் தேடியழிக்கும் செயற்பாடுகளை இக் கலவை செய்கிறது எனவும் கூறப்படுகிறது. எனவே இச் சிகிச்சைமுறை பரந்துபட்ட அளவிலும், விரைவாகவும், மலிவாகவும் மேற்கொள்ளப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன என்பதே மகிழ்ச்சி தரும் செய்தி.
இப்படியான மருந்து ஒரு பிரயோகம் (dose) சுமார் 100 டாலர்களுக்குள் இருக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.