Health

கோவிட்-19 | பிரித்தானிய சிறுபான்மைச் சமூகங்கள் இரண்டு மடங்கு பாதிக்கப்படுகின்றன


நெரிசலான வாழ்விடம், மாசடைந்த காற்று காரணம்

ஜூலை 19, 2020: பிரித்தானியாவின் சிறுபான்மைச் சமூகங்கள் மீது கோவிட்-19 நோயின் தாக்கம் அதிகமாக இருப்பதற்கு, அவர்களது காற்றோட்டம் குறைந்த நெரிசலான, தரம் குறைந்த வாழிடங்களும், மாசடைந்த காற்றுமே காரணம் என ஆய்வொன்று கூறுகிறது.

மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்ற 400 நோயாளிகளின் வாழ்வியலை ஆராய்ந்தபோது, அவர்களது வாழ்விடங்கள், வெள்ளை இன மக்களது வாழிடங்களுடன் ஒப்பிடும்போது மிகவும் தரம் குறைந்த நிலையில் இருப்பதும் அவர்களுக்கான சேவைகளின் தரங்களும் குறைவாக இருப்பதும் கண்டறியப்பட்டது. இதனால் சிறுபான்மைச் சமூகங்கள் வெள்ளை இனத்தவரை விட இரண்டு மடங்கு அதிகமானோர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படும் நிலையில் உள்ளனர் என அவ்வாய்வு கூறுகிறது.

பிரித்தானியாவின் சனத்தொகையில் சிறுபான்மையினர் 14 வீதமாக இருந்தும் கொறோணாவைரஸ் தொற்றினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுத் தீவிர சிகிச்சை பெற்றவர்களில் 34 வீதமானோர் அவர்களாக இருப்பதன் காரணம் இன்னும் புரியப்படாத ஒன்றாகவே இருக்கிறது.

இவ் வேறுபாட்டுக்கு வாழும் சூழல், உரிய வீட்டு வசதியின்மை போன்றவை காரணமாக இருக்கமுடியுமா என்பதை அறிய இந்த ஆய்வு முயற்சிக்கிறது. இவ்வாய்வு பற்றி மருத்துவர்கள் சிலாகித்திருப்பினும், இதை விஞ்ஞானிகள் முறையாகப் பகுத்துணர வேண்டுமெனவும், அதே வேளை இதே போன்று மேலும் பல ஆய்வுகள் செய்யப்பட்வேண்டுமெனவும் அவர்கள் கருதுகிறார்கள்.

அதே வேளை இந்த ஆய்வின்போது இன்னுமொரு விடயமும் தெரியவந்துள்ளது. அதாவது, சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த நோயாளிகளின் சராசரி வயது, வெள்ளை இனத்தவர்களைவிடப் பத்து வயது குறைவாகவும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட கறுப்பின, ஆசிய சிறுபான்மையினத்தைச் சேர்ந்த நோயாளிகள் பெரும்பாலும் மாசடைந்த வளிச்சூழல், மற்றும் இடப் போதாமை காரணமாக நெரிசலான சூழலில் வாழ்பவராகவும் இருக்கிறார்கள்.



இவ்வாய்வைச் செய்த குழுவில் ஒருவரான, பர்மிங்ஹாம் பல்கலைக்கழகப் பேராசிரியர் டேவிட் திக்கெட் அவர்களின் கருத்துப்படி, வறிய பகுதிகளில், வீட்டு வசதிகள் குறைந்தவிடங்களில் வாழ்பவர்கள் கோவிட்டினால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது குறித்து தான் அதிகம் ஆச்சரியப்படவில்லை எனக் கூறுகிறார். ‘கறுப்புக் கொள்ளைநோய்க்’ காலத்திலிருந்தே இது அறியப்பட்டதொரு உண்மை என அவர் தெரிவிக்கிறார்.

“வளி மாசடைதலுக்கும் நோய்ப்பரவலுக்கும் பலமான தொடர்புண்டு என்பதை இவ்வாய்வு நிரூபிக்கிறது: என, பிரித்தானிய மருத்துவர் அமைப்பின் ஆலோசகர், பேராரியர் ஸ்டீபன் ஹோல்கேட் கூறுகிறார்.

பர்மிங்ஹாம் குயீன் எலிசபெத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சைபெற்ற 400 கோவிட்-19 நோயாளிகளில் இவ்வாய்வு செய்யப்பட்டது. இவர்களில் மூன்றில் இரண்டு பகுதியினர் தம்மை ‘வெள்ளை’ இனமென்று பதிவிட்டிருந்தார்கள். 21% மானோர் தம்மை ஆசியர் / பிரித்தானிய ஆசியர் எஅனவும், 7% மானோர் தம்மைக் கறுப்பு / ஆபிரிக்க / கரீபியர்களெனவும் பதிவிட்டிருந்தார்கள்.

நாட்டின் மொத்த சனத் தொகையையும், சராசரி 650 வீடுகளைக் கொண்ட, 33,000 சிறிய அலகுகளாகப் பிரித்து, அவற்றின் சூழல் மாசடைந்த வளியைக் கொண்டதா, வீடுகளில் நெரிசல் காரணமாகச் சுகாதாரமற்ற சூழல் நிலவியதா, தெரு விபத்துகள் அதிகம் நடைபெறும் சூழல் இருந்ததா எனப் பலவகையான அம்சங்களைப் பின்னணிகளாகக்கொண்டு தரவுகள் சேகரிக்கப்பட்டன. அத்தோடு, வீடுகளில் எத்தனைபேர் வாழ்ந்தார்கள், பாடசாலைகள், மருத்துவ வசதிகள் ஆகியன இலகுவில் கிடைக்கக்கூடிய சூழல் அவர்களுக்கு இருந்ததா என்பனவும் கருத்தில் கொள்ளப்பட்டன. இப்படியான வசதி குறைந்த இடங்களில் வாழ்ந்தவர்களில் மிகவும் அடித்தட்டில் இருந்த 20 வீதமானோர் சிறுபான்மையிராகவே காணப்பட்டனர்.

கொறோணாவைரஸ் மனிதக் கலங்களைத் துளைத்து உள்ளே போகப் பாவிக்கும் ACE2 receptors, வளி மாசடைந்த இடங்களில் வாழ்வோரின் உடலில் அதிகமாகக் காணப்படுவதனால் அவர்களில் நோய்த் தொற்றும் அதிகமாக இருக்கிறது என லண்டன் குயீன்மேரி பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜொனாதன் கிறிக் தெரிவிக்கிறார்.