Spread the love

பொது இடங்களில் முகக்கவசப் பாவனை சட்டமாக்கப்படவேண்டும்

கோவிட்-19 நோய்ப்பரவலைத் தடுக்க துணியினால் தயாரிக்கப்பட்ட முகக் கவசங்களே மிகவும் சிறந்தன எனவும் மக்கள் அவற்றைப் பாவிப்பதை ஊக்குவிப்பதற்காக உலகின் தலைசிறந்த பல விஞ்ஞானிகள் ஒன்றிணைந்து ஒரு திறந்த கடிதமொன்றை வரைந்துள்ளார்கள்.

முகக் கவசம் அணிவது நோய்ப்பரவலை மட்டுமல்ல இறப்புக்களையும் குறைக்கிறது என்பதில் உறுதியான நம்பிக்கை கொண்ட அவர்கள் அதை ஒரு பொதுச் சுகாதார நடவடிக்கையென உலகமெங்கும் பிரகடனம் செய்யப்படவேண்டுமென விரும்புகிறார்கள்.

இத் திறந்த கடித இயக்கத்தின் ஒருங்கிணப்பாளர்களாக, சான் ஃபிரான்சிஸ்கோ பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி விஞ்ஞானியாகவிருக்கும் ஜெரெமி ஹவார்ட் மற்றும் இரத்தப் புற்றுநோய் சஞ்சிகையின் (Blood Cancer Journal) முதன்மை ஆசிரியரான வின்சென்ட் ராஜ்குமாரும் உள்ளார்கள். வட அமெரிக்கா, ஆபிரிக்கா, ஆசியா, ஓசியானியா, ஐரோப்பா ஆகிய கண்டங்களைச் சேர்ந்த பலர் இக் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளார்கள்.

இத் திறந்த கடிதத்தின் சாராம்சம்:

மிக முக்கியமான விஞ்ஞான ஆராய்ச்சியின் பெறுபேறாக நாங்கள் பொதுமக்களுக்கு ஒரு முக்கிய அறிவித்தலைச் செய்ய முன்வந்துள்ளோம். முகக்கவசம் நோய்த்தடுப்புக்கான முக்கிய கருவிகளில் ஒன்று. கோவிட்-19 நோய்ப்பரவலைத் தடுக்க, பொது இடங்களில் துணியிலான (fabric) முகக்கவசத்தை அணிவது கட்டாயமாக்கப்படவேண்டும் என்பதே அச் செய்தி.

19 துறைசார் நிபுணர்களது ஆராய்ச்சிகளின் முடிவுகளும், இதர பல சர்வதேச ரீதியிலான பன்முகத் துறையாளர்களின் ஆய்வுகளும் முகக்கவசப் பாவனை தொடர்பாக எய்திய முடிவுகள் கீழே தரப்படுகிறது:

  • நோய்த் தொற்றின் ஆரம்ப நாட்களில், தொற்று அறிகுறிகள் குறைவாகவோ அல்லது இல்லாமலோ இருக்கும்போதே மக்கள் அதிகமாக நோய்ப்பரவலுக்குக் காரணமாகிறார்கள்.
  • வைரஸைப் பரப்பும் நீர்த் திவலைகள் வாயினாலோ அல்லது மூக்கினாலோ வெளியேறும்போது அவற்றைத் தடுப்பதில் துணியாலான முகக்கவசங்கள் மிகவும் திறமையாகச் செயற்படுகின்றன.
  • கொறோனாவைரஸின் பரவலைக் குறைப்பதில் எந்தவித சாதாரண முகக்கவசங்களும் உதவியாகவே உள்ளன.
  • துணியாலான கவசங்களைச் சவற்காரம் கொண்டு கழுவியபின் மீண்டும் மீண்டும் பாவிக்கலாம்.
  • முகக்கவசப் பாவனையை நிர்ப்பந்தித்த இடங்களில் நோயின் சமூகப்பரவல் பெருமளவு குறைக்கப்பட்டிருக்கிறது என்பதற்கு நிறையச் சான்றுகள் உள்ளன.
  • பெருமளவு பொதுமக்கள் முகக்கவசங்கள் பாவிக்கும்போது நோய்ப்பரவல் கணிசமாகக் குறைக்கப்பட்டிருக்கிறது.
  • மக்கள் முகக்கவசங்கள் அணிவதைச் சட்டமாக்குவதன் மூலம் சகலரும் அவ்வுத்தரவுக்குப் பணிந்து நடப்பார்கள்.

முகக் கவசங்களின் பாவனை, நோய்த்தொற்றைக் குறைக்கிறது என்பதற்கு, ஆய்வுகூடங்களிலும், மனிதர்களிலும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகள் போதுமான சான்றுகளைத் தந்துள்ளன. குறைக்கப்படும் தொற்று, மரணங்களைத் தவிர்க்கவும், பொதுச்சுகாதாரத் துறைமீது ஏற்றிவரும் சுமைகளைக் குறைக்கவும், மக்களின் வேலையிழப்புக்கள், பொருளாதார இழப்புகள் ஆகியவற்றைக் குறைக்கவும் உதவிசெய்யும். இவ்விழப்புக்களுடன் ஒப்பிடும்போது துணியிலானான முகக்கவசங்களின் விலை மிக மிகக் குறைவானது.

Related:  அறிவிக்கப்படுவதற்கு முன்னரே, சீனாவில் கோவிட்-19 தொற்று ஆரம்பித்துவிட்டது - ஹார்வார்ட் பல்கலைக் கழக ஆய்வு

உரிய முறையில் முகக்கவசப் பாவனை மேற்கொள்ளப்படின் நோய்த் தொற்றுவீதத்தை (R) 1.0 இற்குக் குறைவாகக் கொண்டுவரலாம் என ஆராய்ச்சி நிரூபிக்கின்றது.

எனவே, கடைகள், பொதுப் போக்குவரத்து சாதனங்கள், பொதுக் கட்டிடங்கள் ஆகியவற்றைப் பாவிப்பவர்கள் கட்டாயமாக முகக்கவசங்களை அணிந்துகொள்ள வேண்டும் என அரசாங்கங்கள் உடனடியாகச் சட்டம் கொண்டுவர வேண்டும். இதன் மூலம் நோய்த்தொற்று தங்களுக்கு இருக்கிறது என்பதை உணராது மற்றவர்களுக்கு நோயைப் பரப்புவது குறைக்கப்படலாம்.

அத்தோடு, பொதுமக்களுக்குப் பண்டங்களையும், சேவைகளையும் கொடுக்கும் தொழிலதிபர்கள், தமது பணியாட்களும், அங்கு வருகின்ற வாடிக்கையாளரும் முகக்கவசங்கள் அணியவேண்டுமென்பதை நிர்ப்பந்திக்க வேண்டும்.

கைகளைக் கழுவுதல், சமூக இடைவெளிக் கட்டுப்பாடு, நோய்ப் பரிசோதனை, தொறொயோருடன் தொடர்பு கொண்டவர்களைத் தேடிப்படித்தல் போன்ற இதர நடவடிக்கைகளுக்கு மாற்று நடவடிக்கையாக முகக்கவசப் பாவனையை எடுத்துக்கொள்ளக்கூடாது. எல்லா நடவடிக்கைகளும் ஏக காலத்தில் மேற்கொள்ளப்படவேண்டும்.

இத் துணிக் கவசங்களைப் பாவிப்பதற்கு கொடுக்கப்படும் ஆலோசனைகளுடன், அவற்றை எப்படித் தயாரிப்பது, பாவிப்பது, சுத்தம் செய்வது என்பவற்றுக்கான வழிகாட்டல்களயும் கொடுக்கவேண்டும். முகக்கவசங்கள் பெறுவதில் தட்டுப்பாடு நிலவுமானால் அவற்றை விநியோகிப்பதற்கான வழிமுறைகளையும் ஆராய வேண்டும்.

மருத்துவ தர முகக்கவசங்கள் கிடைப்பதற்குக் காலதாமதம் ஏற்பட்டால் கடதாசி முதல், பழைய துணி வரை, எந்தவிதமான பொருட்களையும் பாவிக்கலாம். எல்லாவற்றுக்கும் எதோ வகையில் கிருமியைத் தடுக்கும் ஆற்றலுண்டு.

உண்மையுடன்.

(கையெழுத்திட்டவர்கள்)


Print Friendly, PDF & Email