• Post category:HEALTH / INDIA
  • Post published:April 8, 2020
Spread the love

கோவிட்-19 நோய்ப் பரிசோதனைகள் இலவசமாக்கப்பட வேண்டுமென இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அரசாங்கத்தினால் அனுமதி வழங்கப்பட்ட பரிசோதன கூடங்களிலும், தனியார் பரிசோதனை கூடங்களிலும் மக்களுக்குப் பரிசோதனைகள் இலவசமாக்கப்பட வேண்டுமெனவும், அரசாங்கம் இதற்கான உத்தரவை உடனே பிறப்பிக்க வேண்டுமெனவும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

இவ் வழக்கை வீடியோ தொலைகூடலின் மூலம் விசாரித்த நீதிபதிகளான அஷோக் பூஷான் மற்றும் எஸ்.ரவீந்திர பாத் ஆகியோர், உலக சுகாதார நிறுவனம் அல்லது இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் ஆகிய ஒன்றின் அனுமதி பெற்ற பரிசோதனை கூடங்களில் மட்டுமே இப் பரிசோதனைகள், அதுவும் இலவசமாக, மேற்கொள்ளப்பட வேண்டுமெனத் தீப்பளித்துள்ளனர்.

அதே வேளை, இவ் வியாதியைக் கட்டுப்படுத்துவதில் தனியார் மருத்துவ மனைகளுக்கும், பரிசோதனை கூடங்களுக்கும் முக்கிய பங்குண்டு. நாடு ஒரு அவசர நிலைமையில் உள்ளபோது எல்லோரது பங்களிப்பும் அவசியமானது. எனவே அரசாங்கம், சமப்ந்தப்பட்ட அனைத்து நிறுவனங்களுக்கும் இது குறித்து கட்டளையைப் பிறப்பிக்க வேண்டுமென நீதிபதிகள் தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

கோவிட்-19 நோயினால் பாதிக்கப்பட்ட இந் நாட்டின் அனைத்து மக்களுக்கும் பரிசோதனைகள் இலவசமாக்கப்பட வேண்டுமென சட்டத்தரணி ஷஷான்க் தியோ சுதி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தார்.

ஒரு பரிசோதனைக்கான உச்ச வரம்பாக ரூ.4,500 மட்டுமே அறவிடப்படலாமென சமீபத்தில் மத்திய அரச, தனியார் பரிசோதனை கூடங்களைப் பணித்திருந்தது. ஆனால், அதைச் செலுத்துவதற்குக்கூட பெருந்தொகையான வறிய மக்களால் முடிவதில்லை எனவும், எவருமே இந்த நிலைக்குத் தள்ளப்படக் கூடாது எனவும், தியோ சுதி தனது விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருந்தார்.

அரச பரிசோதனை கூடங்கள் ஏற்கெனவே, இப் பரிசோதனையை இலவசமாகச் செய்வதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

தனியார் பரிசோதனை கூடங்களுக்கு இதனால் ஏற்படும் செலவுகளை அரசாங்கம் மீளச் செலுத்த வேண்டுமா என்பதுபற்றிப் பின்னர் தெரிவிப்பதாக நீதி மன்றம் தெரிவித்துள்ளது.

Print Friendly, PDF & Email