கோவிட்-19 நோயாளிகளை மரணப்பிடியிலிருந்து விடுவிக்கும் டெக்சாமீதசோன் மருந்து!
ஒக்ஸ்ஃபோர்ட் ஆராய்ச்சியாளர் பெருமிதம்
கோவிட்-19 நோயினால் பாரதூரமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளின் உயிரைப் பாதுகாக்கும் அதிசய மருந்தொன்றை பிரித்தானிய மருத்துவ நிபுணர்கள் ‘கண்டு பிடித்திருக்கிறார்கள்’.
1960 களிலிருந்து பாவனையிலிருக்கும் ஒரு வகை கோர்ட்டிகோ ஸ்ரெறோயிட் குடும்பத்தைச் சேர்ந்த (பிறெட்ணிசோன் போன்ற) இம் மருந்து உடல் அழற்சி (inflammation) போன்ற உபாதைகளைத் தீர்க்க மருத்துவர்களால் பாவிக்கப்பட்டு வருகிறது.
மிகவும் மலிவான இம் மருந்து சுவாசக் கருவிகளைப் பொருத்தியுள்ள மற்றும் ஒக்சிசன் வழங்கும் நிலையிலுள்ள கோவிட் நோயாளிகளின் உயிர்களைக் காப்பாற்றும் வல்லமை கொண்டதென்று பிரித்தானிய ஆராய்ச்சியாளர் தெரிவிக்கின்றனர்.
கொறோனாவைரஸுக்கு எதிரான, இதுவரை அறிவிக்கப்பட்ட மருந்துகளில் இதுவே மிகவும் நம்பிக்கை தரும் ஒன்றாக இவ்வாராய்ச்சியாளர்களால் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாராய்ச்சிகளின்படி, சுவாசக் கருவிகள் பொருத்தப்பட்ட (ventilators) நிலையிலுள்ள நோயாளிகளின் மரணத்தை மூன்றில் ஒரு மடங்கால் குறைக்கிறது எனவும், ஒக்சிசன் பெறும் நிலையிலுள்ள நோயாளிகளின் மரணத்தை ஐந்தில் ஒரு மடங்கால் குறைக்கிறது எனவும் அறிவிக்கப்படுகிறது. இம் மருந்து கோவிட்-19 இற்கு தீர்வாகப் பரிசோதிக்கப்படும் மருந்துகளில் மிக முக்கிய ஒன்றாகக் கருதப்படுகிறது.
கொறோனாவைரஸ் ஆரம்பத்தில் இம் மருந்து பிரித்தானியாவில் கிடைத்திருந்தால் 5,000 க்கும் அதிகமான நோயாளிகளின் உயிர்களைக் காப்பாற்றியிருக்க முடியும் என இவ்வாராய்ச்சியாளர் கருதுகின்றனர். இம் மருந்து மிகவும் மலிவானதாகையால் வறிய நாடுகளில் வாழும் மக்களுக்கு மிகவும் உதவியாகவிருக்கும்.
கொறோனாவைரஸ் தொற்றுக் கண்ட 20 நோயாளிகளில் 19 பேர் மருத்துவ மனைக்கு வராமல் வீடுகளிலிருந்து இம்மருந்தை உட்கொள்வதன் மூலம் நோயைத் தீர்த்துக்கொள்ளலாம்.
கோவிட்-19 நோயாளிகளில் அவர்களது நிர்ப்பீடன ஆற்றல் (சுய பாதுகாப்பு) தேவைக்கதிகமாகச் செயலாற்றப் புறப்பட்டுவிடுவதனால் (immune system over-drive) ஏற்படும் பாதிப்பினாலேயே பலர் மரணமடைகிறார்கள். Cytokine storm எனப்படும் இப்படியான பாதிப்புக்களிலிருந்து டெக்சாமீதசோன் நோயாளிகளைப் பாதுகாக்கிறது.
ஒக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் குழுவொன்று 2,000 மருத்துவமனை நோயாளிகளுக்கு டெக்சாமீதசோனைக் கொடுத்தும், 4,000 பேருக்கு அதைக் கொடுக்காமலும் தமது பரிசோதனையைச் செய்தார்கள். சுவாசக்கருவிகளில் இருந்த நோயாளிகளிந் மரண ஆபத்தை 40% த்திலிருந்து 28% மாக அது குறைத்தது. ஒக்சிசன் எடுத்துக்கொண்டிருந்த நோயாளிகளில் மரண ஆபத்தை 25% த்திலிருந்து 20% த்துக்குக் குறைத்தது.
“இதுவரை பாவிக்கப்பட்ட மருந்துகளில், இது ஒன்றுதான் மரணத்தின் விளிம்பிலிருந்த கணிசமான நோயாளிகளைக் காப்பார்றியிருக்கிறது. இது மிக முக்கியமான அவதானிப்பு” என்கிறார் இவ்வாராய்ச்சிக் குழுவின் தலைவர் பேராசிரியர் பீட்டர் ஹோர்பி.
“இம் மருந்தின் நன்மைகள் மிகவும் வெளிப்படையானவை. டெக்சாமீதசோன் மருந்தை எடுக்கும் ஒரு நோயாளி 10 நாட்களில் குணம் பெறுகிறார். அம் மருந்தின் விலை 5 பவுண்டுகள் மட்டுமே. ஒரு உயிரைக் காப்பாற்ற 35 பவுண்டுகளே தேவைப்படுகிறது. இம்மருந்து உலகம் முழுவதும் கிடைக்கிறது” என்கிறார் இக் குழுவிலுள்ள முன்னணி விஞ்ஞானி, பேராசிரியர் லான்றே.
“இப்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருக்கும் நோயாளிகளுக்கு, முடியுமானால், இப்போதே இம் மருந்தைக் கொடுக்க வேண்டும் என நான் கூறுவேன். தனிப்பட்டவர்கள் மருந்தகங்களில் இம் மருந்தை வாங்க வேண்டாமென்றும் கேட்டுக்கொள்கிறேன்” என்கிறார் பேரா. லான்றே.
ஆரம்ப அறிகுறிகளோடு இருக்கும் கோவிட் நோயாளிகளுக்கு இது அதிக பலன் தாராது. சுவாசிப்பதில் பிரச்சினை ஏற்படும் நிலையிலுள்ளவர்களுக்கே இது சிறந்த மருந்து.
டெக்சாமீதசோன், ஹைட்றொக்சிகுளோறோகுயீன், றெம்டெசிவிர் ஆகிய மருந்துகள், கடந்த மார்ச் மாதத்திலிருந்து பரிசோதனைகளில் ஈடுபடுத்தப்பட்டு வந்தன. பக்க விளைவுகள் காரணமாக, ஹைட்றொக்சிகுளோறோகுயீன் பரிசோதனை தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது. றெம்டெசிவிர், தேசிய சுகாதார சேவைகளால் பாவனைக்கு அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது.