Spread the love

முகரும் நாய்களைப் பாவிப்பதன் மூலம் ஒருவருக்கு கோவிட்-19 நோய்த் தொற்று இருக்கிறதா என அறியமுடியுமா என்பது குறித்து பிரித்தானிய விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகிறார்கள். ஏற்கெனவே போதை வஸ்துக்களையும், சில வகையான புற்றுநோய்களையும் கண்டுபிடிக்க முகரும் நாய்கள் பாவிக்கப்பட்டு வருகின்றன.

பிரித்தானிய தேசிய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் ஆதரவில் நடைபெற்றுவரும் இந்த ஆராய்ச்சியில், SARS CoV-2 வைரஸ் தொற்று உள்ளவர்களின் விதம் விதமான வாசனைகளை இந் நாய்களுக்கு அறிமுகப்படுத்தி அவற்றுக்குப் பயிற்சி கொடுத்து வருகிறார்கள். நோயறிகுறி எதையும் காட்டாத நோயாளிகளின் வாசனைகளும் இதில் அடங்கும்.

இம் முயற்சியில் வெற்றி பெற்றால், ஒரு மணித்தியாலத்தில் 250 பேரைப் பரிசோதிக்க முடியுமென ஆராய்ச்சியாளர் நம்புகின்றனர்.

“வைரஸ்களைக் காவித் திரியும், அறிகுறிகளற்ற நோயாளிகளை இந் நாய்கள் முகர்ந்து கண்டுபிடிக்குமானால் அது ஒரு மகத்தான வெற்றியாகும். இதன் மூலம் விமான நிலையங்கள், பொதுப் போக்குவரத்து நிலையங்கள், துறைமுகங்கள் போன்ற இடங்களில் நாய்களை உபயோகித்து பயணிகளைப் பரிசோதித்துவிட முடியும்” என டர்ஹாம் பல்கலைக்கழகத்தின் உயிரியல் திணைக்களப் பேராசிரியர் ஸ்டீவ் லிண்ட்சே தெரிவிக்கிறார்.

மருத்துவ முகர்வு நாய்கள் (Medical Detection Dogs) என்ற அற நிலையம் மற்றும் டர்ஹாம் பல்கலைக்கழகம் ஆகியவற்ரின் ஆதரவுடன் சுகாதாரம் மற்றும் வெப்பமண்டல மருத்துவக்கல்லூரி London School of Hygiene and Tropical Medicine (LSHTM) யில் இவ்வாராய்ச்சி நடைபெறுகிறது.



இவ்வாராய்ச்சிக்கு உதவ விரும்பும் தொண்டர்கள், தமது சுவாச, வியர்வை வாசனைகளை, முகக்கவசம் அணிந்தபடி மூன்று மணித்தியாலங்களுக்கும், பாதவுறைகள், மேலங்கிகள் போன்றவற்றைப் 12 மணித்தியாலங்களுக்கும் இந் நாய்களுக்கு முகரக்கொடுக்க வேண்டும்.

கெட்டெறிங் பொது மருத்துவமனையைச் சேர்ந்த 92 பேருட்பட, தேசிய சுகாதார சேவைகளின் கீழ் இயங்கும் 11 மருத்துவ மனைகளைச் சேர்ந்த பணியாளர்கள் இவ்வாராய்ச்சியில் இணைவதற்கு ஒப்புதல் தெரிவித்துள்ளார்கள். கோவிட்-19 நோயினால் மென்பாதிப்புக்குள்ளான ஆனால் பரிசோதனை செய்யப்படாத நோயாளிகளும், கடந்த 24 மணித்தியாலங்களுள் நோய்ப்பரிசோதனை செய்யப்பட்டவர்களும் எனப் பொதுமக்களும் இவ்வாராய்ச்சியில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளார்கள்.

இவ்வாராய்ச்சியில் கலந்துகொள்ளும் தொண்டர்கள் மூந்று மணித்தியாலங்களுக்குத் தொடர்ச்சியாக அணிந்த முகக்கவசம், தொடர்ந்து 12 மணித்தியாலங்களுக்கு அணிந்த விசேட நைலோன் பாதவுறை ஆகியவற்றைப் பைகளுள் கட்டி ஆராய்ச்சியாளரிடம் கொடுக்கவேண்டும். இப் பொருட்கள், இவற்றின் உரிமையாளருக்கு ஏற்கெனவே நோய்த் தொற்று இருந்தது என உறுதிசெய்யப்பட்டவரா என்பது போன்ற தகவல்களுடன், மில்டன் கீன்ஸ் என்னும் நகரில் பராமரிக்கப்பட்டுவரும் முகரும் நாய்களுக்கு வழங்கப்படுகின்றன. இந் நாய்களினால் நோய்த் தொற்று இருக்கிறது / இல்லை என உறுதி செய்யப்பட்ட மாதிரிகள் (samples) பின்னர் ஆய்வுகூடப் பரிசோதனை முடிவுகளுடன் ஒப்பிடப்பட்டு நாயின் கண்டுபிடிப்பு சரியானதா என உறுதிசெய்யப்படுகின்றது.

Related:  அமெரிக்க தேர்தல் 2020 | ஜோ பைடனுக்குப் பெருகும் வெள்ளை இன மக்களின் ஆதரவு

“எங்கள் நாய்கள் ஏற்கெனவே பல வகையான புற்றுநோய்களையும், பார்க்கின்சன்ஸ், மலேரியா போன்ற பல நோய்களையும் வெற்றிகரமாகக் கண்டறிந்துள்ளன” என்கிறார் மில்டன் கீன்ஸிலுள்ள மருத்துவ முகர்வு நாய்கள் அமைப்பைச் சேர்ந்த கிளெயர் வெஸ்ட்.

Print Friendly, PDF & Email
கோவிட்-19 நோயாளிகளைக் கண்டுபிடிக்க நாய்களின் உதவி – பிரித்தானிய தேசிய சுகாதார சேவைகள் முயற்சி
நோய் முகரும் நாய்கள்

கோவிட்-19 நோயாளிகளைக் கண்டுபிடிக்க நாய்களின் உதவி – பிரித்தானிய தேசிய சுகாதார சேவைகள் முயற்சி