HealthWorld

கோவிட்-19 தொற்றைத் தவிர்க்க ஹைட்ரொக்சிகுளோரோகுயின் எடுக்கிறேன் – ஜனாதிபதி ட்ரம்ப்

கடந்த ஒன்றரை வார காலமாக ஹைட்ரொக்சிகுளோரோகுயின் மருந்துடன் துத்தநாகத்தையும் சேர்த்து எடுத்துவருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

கொரோனாவைரஸ் தொற்றைத் தடுக்க மலேரியத் தடுப்பு மருந்தான ஹைட்ரொக்சிகுளோரோக்குயின் மருந்தை எடுத்து வருவதாக அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்தமை மருத்துவ சமூகங்கள், கொள்கைவகுப்பாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. இம் மருந்தின் பக்க விளைவுகள் காரணமாக, அதை மருத்துவமனைகளிலோ அல்லது ஆய்வுகூடங்களிலோ தான் மேற்கொள்ளவேண்டும் என அவரது மருத்துவ ஆலோசகர்கள் தெரிவித்திருந்தும், அவர் அதை உதாசீனம் செய்திருப்பதாகத் தெரிகிறது.

ஹைட்ரொக்சிகுளோரோக்குயின் மற்றும் துத்தநாகம் ஆகியவற்றை, கடந்த ஒன்றரை வாரங்களாகத் தினமும் எடுத்துவருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இம் மருந்தைத் தனக்குப் பரிந்துரைக்கத் தனது மருத்துவர் மறுத்திருந்தும், வெள்ளை மாளிகை மருத்துவர் மூலம் தான் அதை பெற்றதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தோல் கரைவு (lupus), மூட்டு வாதம் (arthritis) போன்ற நோய்களுக்கு மருந்தாகவும் பாவிக்கப்பட்டுவரும் இம் மருந்து ஒழுங்கற்ற இருதயத் துடிப்பு முதல் மரணம் பக்கவிளைவுகளைத் தரக்கூடியது எனவும் இக் காரணங்களுக்காக மருத்துவ மனைகள் மற்றும் ஆய்வுகூடங்களில் இருக்கும் நோயாளிகளுக்கு மட்டுமே இம் மருந்துகளைப் பாவிக்கவேண்டுமெனவும் அமெரிக்க உணவு, மருந்து நிர்வாகம் (FDA) பரிந்துரைத்திருக்கிறது.

இந்த மாதம் வெள்ளை மாளிகை அதிகாரிகள் இருவர் கோவிட்-19 நோய்த்தொற்றுக்குள்ளாகியிருந்தார்கள். இதைத் தொடர்ந்து உதவி ஜனாதிபதி பாதுகாப்பான இடத்துக்கு அனுப்பப்பட்டும், ஜனாதிபதியின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டும் இருந்தது. அத்தோடு, வெள்ளை மாளிகையில் பணி புரிபவர்கள் அனைவரும் முகக் கவசங்கள் அணியவேண்டுமெனவும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது.

“இப்போது என்னால் சொல்லக்கூடியது, நான் நலமாக இருக்கிறேன் என்பதையே” என ஜனாதிபதி ட்றம்ப் கூறிவருகிறார்.

ஹைட்றொக்சிகுளோறோகுயின் மருந்தினால் எந்தவித நன்மையும் ஏற்படப்போவதில்லை என கடந்த வியாழனன்று வெளியான பிரித்தானிய மருத்துவ சஞ்சிகையில் (BMJ) வந்த இரு கட்டுரைகள் தெரிவிக்கின்றன.

கடந்த வருடத்தோடு ஒப்பிடும்போது, மார்ச் மாதம் மட்டும், அமெரிக்காவில் ஹைட்றொக்சிகுளோறோகுயின் பாவனை 80% த்தால் அதிகரித்திருக்கிறது.